Skip to main content

வேடம்

 

 

வேடம்





2013-ம் ஆண்டு விடைபெற்றுக்கொண்டிருந்தது, இறுதி மாதத்தின் இறுதி நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருந்தன. இன்று தொடங்கி இன்றே முடியும் நாளைப்போல, ஒரு வருடம் ஓடியிருந்தது. புத்தாண்டை குதூகலத்துடன் வரவேற்க உலகத்தார் பலர் கலகமான வழியில் தங்களைக் களங்கப்படுத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், வட இந்தியாவில் ஸ்தாபனம் ஒன்றில் பணிபுரிவோர் ஒன்றாகக் கூடி, ஐக்கியமாக புத்தாண்டைக் கொண்டாடத் தொடங்கினர். விருந்தினர்களின் வரவால் பல குடும்பங்களில் மகிழ்ச்சி ஒரு படி உச்சத்திலிருந்தது. ஜனவரி 1 அன்று மாலை, சுமார் இரண்டு மணி, ஸ்தாபனத்தின் வளாகத்தில் உள்ள பெரியதோர் அரங்கத்திற்குள் பெரியோர், சிறியோர் என புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கெடுக்க குடும்பம் குடும்பமாக ஜனங்கள் நுழைந்துகொண்டிருந்தனர். ஜனங்கள் தங்கள் கைகளில் கொண்டுவந்த பாத்திரங்களையும், திண்பண்டங்களையும், இனிப்புகளையும் அரங்கத்தின் வாசலில் நின்ற தொண்டர்கள் வாங்கிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த சில வாலிபர்கள், அந்த திண்பண்டங்களை அனைவரும் சுவைக்க ஏதுவாக வரிசையாக அடுக்கிக்கொண்டிருந்தனர். அனைவரும் ஒற்றுமையாக ஓரிடத்தில் கூடி ஆனந்தத்தில் மூழ்கியிருந்தனர். ஸ்தாபனத்தின் தலைவர் ஜனங்களுக்கு அன்று நடக்கவிருக்கும் போட்டிகளையும், நாடகங்களையும் குறித்து அறிவிப்புக் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, அந்த புத்தாண்டு நிகழ்ச்சியைக் காண அரங்கத்தின் பின் புறமாய் நுழைந்தார் ஓர் பாபா. பாபாவைக் கண்டதும் அரங்கத்தின் பின்புறத்தில் நின்றுகொண்டிருந்த சகோதரர்கள் பலரின் விழிகள் விரிந்தன; கைப்பேசிகளிலும், கேமராக்களிலும் பாபாவைப் படமெடுத்துக்கொண்டிருந்தனர்.

விளையாட்டுப் போட்டிகளும், வேத போட்டிகளும், பல நாடகப் போட்டிகளும் அரங்கேற அணிவகுத்து நின்றன. புத்தாடைகளுடன், புது வருடத்தில் நுழைந்துவிட்ட சந்தோஷத்துடன் துள்ளிக்கொண்டிருந்த சிறுவர்கள் தங்களுக்கான விளையாட்டுகள் எப்போது தொடங்கும் என துடித்துக்கொண்டிருந்தனர். அவர்களது கேள்விக்கு விடை கிடைத்தது, சிறிது நேரத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின, சிறுவர்கள் ஆர்வமாக தங்களை விளையாண்டுகொண்ருந்தனர். இவை அனைத்தையும் அரங்கத்தின் பின் பக்கம் நின்று பார்த்துக்கொண்டிருந்தார் பாபா. சற்று நேரத்தில், குறுநாடகப் போட்டிகள் தொடங்கியது, திருமணம் முடிந்த பெண்கள், வாலிபப் பெண்கள், வாலிப சகோதரர்கள், இளைஞர்கள் என வயதிற்கேற்ப குழுவாக குறுநாடகங்கள் அரங்கேறின. ஒருபுறம், நீதிபதிகளாய் அமர்த்தப்பட்டவர்களின் கண்கள் நடித்துக்கொண்டிருப்பவர்களையும், நாடகங்களையும் நிறுத்துப்பார்த்துக்கொண்டிருந்தன. வேடமிட்டு வந்த தன்னவர்களைக் கண்ட கூட்டத்தினர், உற்சாக மிகுதியால் உண்டான கூச்சலின் சத்தம் பாபாவின் காதுகளைத் துளைத்தெடுத்ததுளூ அவர்களோடு அவர்களாக கூட்டத்தின் மத்தியில் ஒருவனாக சென்று அமர்ந்துகொள்ள இயலாமல், கூட்டத்தை விட்டு தூரத்தில் நின்றுகொண்டே கண்ணில் தென்படும் காட்சிகளில் களித்துக்கொண்டிருந்தார் பாபா.

ஒவ்வொரு குறு நாடகத்தின் இடைவேளையின்போதும், அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த இனிப்புகள் இருப்போரின் வாயை இனிக்கச் செய்தன, அதனைக் கண்டு பாபாவுக்குப் பசியெடுத்தாலும், அணிந்திருந்த காவி உடை அவரை அங்கே செல்ல அனுமதிக்கவில்லை. கண்ணைக் கவரும் பல வீட்டுச் சுவை கலந்த உணவை சிலர் ருசித்துக்கொண்டிருந்தனர், சிலரோ அதில் பசி தீர்த்துக்கொண்டிருந்தனர். இதையெல்லாம் எங்க வீட்ல செய்தே தரலையே, அம்மாவுக்குத் செய்யத் தெரியாதோ! என்ற ஆச்சரிய வினாக்கள் சுவைக்கும் சில சிறுவர்களிள் முகத்தில் தெரிந்தது. திருமணத்தின்போது 'மறுவீட்டு பலகாரம்' என்ற பதம் திருமணம் முடித்து பல வருடங்கள் ஆன தம்பதியர் பலருக்கு ஞாபகத்தில் வந்தது. இது ஒருபுறமிருக்க, ஆங்காங்கே சில குடும்பப் பெண்கள் கூடிப்பேசுவதை பாபா உற்றுக் கவனித்தார், இத்தனைக் கூட்டத்தில் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை தூரத்திலிருக்கும் பாபாவினால் கணிக்கக் கடினமாயிருந்தது. எனினும், அவர்களின் செயல்கள் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் சொற்களை பாபாவுக்கு வெளிப்படுத்தின. 'சிஸ்டர், இந்த பண்டம் யாரு செஞ்சு வச்சா, நல்லா இருக்கில்ல, நானுந்தான் பலமுற செஞ்சு செஞ்சு பார்க்கிறேன், ஆனா இந்த டேஸ்ட் வரவேமாட்டிங்குதே, இத எப்படி செஞ்சாங்கன்னு கேட்கணுமே, இது யாரு வச்சான்னு உங்களுக்குத் தெரியுமா சிஸ்டர், எங்க வீட்டுக்காரரு பலதடவ இத செஞ்சு தா, செஞ்சு தான்னு கேட்டுப்புட்டாரு, தெரிஞ்சாதான செஞ்சு கொடுப்பதற்கு' என்று ஒரு பெண் கேட்க, மற்றொரு பெண், 'நான் வச்சத யாரு சாப்பிட்டுக்கிட்டிருக்காங்களோ தெரியல, திண்பண்டங்களையெல்லாம் கடையில வாங்கித்தான் கணவருக்கும் பிள்ளைங்களுக்கும் நான் கொடுத்து பழக்கம், ஏம் புருஷன் இன்னைக்கு நீ ஏதாவது செஞ்சு வைன்ணு சொல்லிப்புட்டாரு, நானும் வேற வழியில்லாம வட செய்வோமுன்னு செஞ்சேன், நான் செஞ்சு முடிச்சதும் என் புருஷன் 'அட' நல்லாயிருக்கேன்னாரு, ஏங்க இது 'அட' இல்லங்க 'வட' ன்னு நான் அவருக்குப் புரிய வைக்க, என் புருஷனோ நான் கோபப்பட்டுவிடக்கூடாதுன்னு என்னிடமிருந்து தப்பிக்கொள்ள, இல்லம்மா 'அட வட ரொம்ப நல்லாயிருக்கே' அப்படீன்னுதான் சொன்னேன், வடைய 'அட' என்று நான் சொல்லவில்லை என்றார். எத்தனையாய் தூரத்தில் பாபா நின்றுகொண்டிருந்தாலும், கூட்டத்திலிருக்கும் பெண்களின் உரையாடல்கள் இதுவாகத்தான் இருக்கும் என்று அத்தனையையும் கண்களால் கேட்க்கொண்டிருந்தார் பாபா.

அரங்கத்தில் கூடியிருந்தவர்கள் குளிரில் ஆடிக்கொண்டிருந்தனர், குளிரிலிருந்து தப்பிக்க குளிராடைகளால் மூடிக்கொண்டிருந்தனர். ஆனால், அரையில் காவித் துண்டை மட்டுமே கட்டியிருந்த பாபாவுக்கோ வியர்த்துக்கொண்டிருந்தது. கூட்டத்தின் பின் கோடியில் உட்காராமல் நின்றுகொண்டும், அங்குமிங்கும் நடந்துகொண்டுமிருந்த பாபாவைப் பார்த்த ஒருவர், அவரிடம் குளிருகிறதா? என்று கேட்க, இல்லை, வியர்க்கிறது என்று பாபாவிடமிருந்து பதில் வந்தது. இதுதான் பாபாவுக்கும், பக்தர்களுக்கும் உள்ள வேறுபாடோ! என்று கேட்டவர் ஆச்சரிப்படுவதை பாபாவால் உணரமுடிந்தது. அங்கிருந்த மின் விசிறிகள் சுழன்றால் நன்றாயிருக்குமென தோன்றியது பாபாவுக்கு. ஆனால், அரங்கத்திலிருந்த அத்தனை மின் விசிறிகளும் அமைதலாய் தங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்று தொங்கிக்கொண்டிருந்தன. அரங்கத்தின் பின் பகுதியில் இருந்த ஓர் மின் விசிறியின் கீழ் சென்று நின்றுகொண்டு, இந்த மின் விசிறியை இயக்க முடியுமா? என்று அருகில் நின்ற அந்த மனிதரிடம் பாபா கேட்டார். அம்மனிதரும், பாபாவிற்கு உதவி செய்ய மனமுற்றவராக மின் விசிறியை இயக்க முயற்சி செய்தார். ஆனால், ஒரு பொத்தானை அழுத்தியதும் அரங்கத்திலுள்ள அநேக மின் விசிறிகள் சுழலும்படி அமைக்கப்பட்டிருந்தால், அந்த முயற்சியினைக் கைவிட்டார் அந்த மனிதர். வேறு வழியின்றி, அரங்கத்தின் பின் புறத்திலிருந்த வாசல் ஒன்றின் அருகே சென்று காற்று வாங்க நின்றுகொண்டார் பாபா. அவ்வப்போது வாசலை விட்டும் வெளியே சென்று வியர்வையைப் போக்கிவிட்டு வந்தார்.

அப்போது, ஒரு பெண் சுமார் கால் லிட்டர் அளவுடைய நீல நிறமுடைய கப் ஒன்றினைக் கையில் பிடித்தவாறு அரங்கத்திற்குள் நுழைந்தார். அந்தப் பெண்ணின் கண்கள் பாபா இருக்குமிடத்தைத் தேடித் துளாவின. பாபாவைக் கண்டதும், அதிர்ச்சியில் ஆழ்ந்த அந்தப் பெண், கையிலிருந்த கப்பில் தான் கொண்டு வந்திருந்த பானத்தை பாபாவிடம் கொடுத்து குடிக்கும்படி கேட்டுக்கொண்டார். பசியுடன் இருந்த பாபாவின் வயிற்றில் ஹார்லிக்ஸ் கலந்த பாலை ஊற்றினாள் அந்தப் பெண். பாபாவின் கையில் அந்தப் பெண் பாலைக் கொடுப்பதைக் கண்ட புகைப்படக்காரர்கள், படமெடுக்கக் குவிந்தனர். பாபாவும் அந்தப் பெண்ணும் பலரது கைப்பேசிகளிலும், புகைப்படக் கேமராக்களிலும் பதிவாயினர். அந்தப் பெண்ணைத் தொடர்ந்து, சற்று நேரத்தில், கையில் தட்டு ஒன்றை ஏந்தியவாறு அரங்கத்தி;;;;;;;;ற்குள் நுழைந்தார் ஒர் மனிதர், பலர் அவரது தட்டைச் சுற்றி வட்டமடித்துக்கொண்டிருந்தனர். ஓரக்கண்ணால் அக்காட்சியை பாபா உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, பாபாவின் கண்கள் தட்டை ஏந்தி நின்ற மனிதரின் கண்களைச் சந்திக்க, தட்டு பாபாவின் பக்கம் வந்தது. ஆ! என்ன அருமை, தட்டில் இருந்த முட்டைகளை எடுத்துக்கொள்ளும்படி பாபாவை அம்மனிதர் கேட்டுக்கொண்டார். வெங்காயம், மல்லித் தழையுடன் உப்பும் தூவப்பட்டு கண்களுக்குக் கவர்ச்சியாக வைக்கப்பட்டிருந்த அம்முட்டைகள், வயிற்றிலிருந்து நினைவிற்கு ஏறி நீங்காமல் நின்றுகொண்டிருந்த பாபாவின் பசியை சற்று நீங்கச் செய்தன. பின் வாசல் வழியாக அரங்கத்திற்குள் நுழைந்தோரது கண்களில் பாபா தென்பட, மேடையில் அரங்கேறும் நிகழ்ச்சிகளை மறந்து, பாபாவின் மேல் அவர்களது விழிகள் உறைந்து நின்றன. பாபாவைக் கண்டு குழந்தைகள் பயந்தோடிக்கொண்டிருந்தனர், சிறுவர்களோ தூரத்திலிருந்து வேடிக்கைப் பார்வை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, சகோதரர் ஒருவர் கையில் ஏழு வயது நிரம்பிய சிறுவன் ஒருவனைப் பிடித்தவாறு பாபாவை நோக்கி நடந்து வந்தார், பாபாவைச் சந்திக்க அவர் நெருங்கும்போது, பயத்தில் சுதாரித்துக்கொண்ட அச்சிறுவர் அவரின் கையைப் பிடித்துக்கொண்டு பிடிவாதமாக பின்னுக்கு இழுத்துக்கொண்டு சென்றான். இக்காட்சி பாபாவின் நெஞ்சை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஜனக்கூட்டமெல்லாம் மேடை நிகழ்ச்சிகளில் கண்ணும் கருத்துமாயிருக்க, பாபாவின் சிந்தனையோ இமையலையின் அடிவாரத்திற்குப் பறந்தது. பல ஆண்டுகளுக்கு முன் சந்நியாசிகளையும், சாதுக்களையும், நிர்வாணச் சாமியார்களையும் சந்திக்க ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய நகரங்களுக்குச் சென்று வந்த பயண நினைவுகள் பாபாவின் சிந்தையைச் சூழ்ந்து வட்டமடித்துக்கொண்டிருந்தன. உள்ள அரங்கத்திலிருப்பதற்கும், இமயமலையின் அடியில் நடப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை அவரது மனம் எடைபோட்டுக்கொண்டிருந்தது. சில வருடங்களுக்கு முன்னால் இமைய மலையின் அடிவாரத்தில் உள்ள ஹரித்துவாருக்குப் சென்றிருந்தார் பாபா. மகாகும்பமேளா நடந்துகொண்டிருந்தது, எங்கு பார்த்தாலும் ஒலித்துக்கொண்டிருந்த பக்திப்பாடல்கள், தெய்வத்தை அல்லாமல் வேறெதையும் சிந்தையிலேற்றிவிடாத வண்ணம் ஜனங்களை சிiறைப்பிடித்துக்கொண்டிருந்தது. பெரிய, பெரிய பாபாக்களின் படங்கள் சுவரொட்டிகளாக, கட்அவுட்களாக நகரத்தை அலங்கரித்துக்கொண்டிருந்தன. சைவ உணவைத்தவிற, அசைவம் என்ற பேச்சுக்கே இடம் தராத நகரம் அது. புற்றீசல் போல எங்கு பார்த்தாலும் கோவில்கள், மர நிழல்களிலே சாமியார்கள் என ஒருபுறம் நிறைந்திருக்க மறுபுறம், பூஜிக்க வரும் பக்தர்களைக் குறிவைத்து பூஜைப் பொருட்களுடன் வண்ணமயமாக ஜொலித்துக்கொண்டிருந்த கடைகள் வியாபாரத்தைப் பெருக்கிக்கொண்டிருந்தன. கங்கை நதியிலே பலர் புனித நீராடிக்கொண்டிருந்தனர், கங்கைக் கரையிலே பலர் பக்திப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர், சிலர் புராணங்களைப் படித்துக்கொண்டிருந்தனர்.

நாகாக்கள் என்று சொல்லப்படும் நிர்வாணச் சாமியார்களுக்கான பல மடங்களில் நிர்வாணச் சாமியார்கள் நிறைந்து கிடந்தனர். சாமியார் ஒருவர் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்துகொண்டிருந்தார். பதிமூன்று வயது முதல் எண்பது வயது வரையிலான நிர்வாணச் சாமியார்கள் அந்த முகாமில் காணப்பட்டனர். நிர்வாணச் சாமியார்களின் முகாமில், அனைத்து சாமியார்களின் வாய்களும் புகையை வெளிவிட்டுக்கொண்டிருந்தன. கடுங்குளிரிலும் உடலில் ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக அமர்ந்திருந்தார்கள் சாதுக்கள். இவர்களைக் காண பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் நகரெங்கும் குவிந்து நின்றனர். புனித நாளன்று பாபாக்கள் நிர்வாணமாக கங்களை நதியில் நீராடும்படி ஊர்வலமாகப் புறப்பட்டு வந்தனர். அவர்கள் நீராடியதும் அந்நீரை அள்ளிப் பருகுவதற்காகவும், புட்டிகளில் எடுத்துச் செல்வதற்காகவும் ஆண்களும், பெண்களுமாக பக்தர்கள் அணிதிரண்டு நின்றுகொண்டிருந்தனர். பாவம் தீரவேண்டியும், புன்னியம் தேடவேண்டியும் திரண்டு நின்ற கூட்டம் எண்ணிலடங்காதது. ஆணின் நிர்வாணத்தைப் பார்க்கக் கூசும் கண்களுடைய பெண்கள், நிர்வாணமாக ஊர்வலமாய்ச் செல்லும் ஆண்களைக் காணக் குவிந்து கிடந்தனர்ளூ அவர்களைக் கும்பிட்டு மகிழ்ந்தனர். கையில் ஆயுதங்களோடும், உடலெங்கும் பூக்களோடும், கூச்சலிட்டுக்கொண்டு செல்லும் நிர்வாணச் சாமியார்களைக் கண்டு தெய்வ தரிசனம் செய்துகொண்டிருந்தனர் பெண்கள். ஊடகத்தினர் நிர்வாணச் சாமியார்களைப் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படமெடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களைச் சுற்றிலும் காவல்துiயினரும், துணை ராணுவப் படையினரும் காவலில் ஈடுபட்டிருந்தனர். எந்த ஒரு மனிதரும் தங்களைத் தொட்டுவிட்டால் தாங்கள் தீட்டாகிவிடுவதாகவும், எனவே ஜனங்களிடமிருந்து தூரமாக இருப்பதாகவும் சொன்னார் ஒரு சாது. பல சாதுக்களையும், பாபாக்களையும், நிர்வாணச் சாமியார்களையும் நேரடியாகச் சந்தித்து பேசிய நினைவு அரங்கத்தில் நின்றுகொண்டிருந்த பாபாவின் நெஞ்சில் ஓடியது.

ஹரித்துவாரின் காட்சிகளையும், அரங்கத்தின் காட்சிகளையும் எடைபோட்டுக்கொண்டிருந்த பாபாவின் மனதில் போலியும் உண்மையும் அம்பலமானது. அநாகரீகமாகயிருக்கும் அவர்களா? அமைதியாயிருக்கும் இவர்களா? ஆயுதங்களேந்தும் அவர்களா, ஆயுதமில்லாத இவர்களா? என்ற கேள்விகளுக்கு இடையே, உண்மை தெய்வத்தை ஆராதிக்கும் ஒரு கூட்ட ஜனத்தின் ஊடே, இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட ஒருவனாக அன்று தான் நிற்பதை நினைத்து சந்தோஷம் கொண்டார் பாபா, பாவத்திற்காக ஒரேதரம் தன்னையே பலியாக ஈந்த இயேசுவின் அன்பு இந்த புவி மானிடர் அனைவருக்கும் அறிவிக்கப்படவேண்டும், பரத்திற்குச் செல்லும் ஒரே பாதையான இயேசு அறிவிக்கப்படவேண்டும். மனிதர்களுக்காக இரத்தம் சிந்தி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிருடன் எழுந்து, மீண்டும் பூமிக்கு வர இருக்கும் இயேசுவின் போதனைகள் உலகெங்கும் போதிக்கப்படவேண்டும் என்ற சிந்தை பாபாவின் நெஞ்சைக் கவ்விப் பிடித்திருந்தது. உலக வழியில் சென்றுகொண்டிருந்த நாட்களில், உண்மை வழியாம் இயேசுவைக் கண்டுகொண்டவர் இந்த பாபா.

தீடீரென அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் பின்பக்கமாகத் திரும்பி அமரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். பாபா நின்றுகொண்டிருந்த அரங்கத்தின் பின் பக்கத்தில் நாடகம் ஒன்று அரங்கேற ஆயத்தமானது. பாபாவோ, நாடகம் அரங்கேறும் திரைக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தார். முன்னே நின்று என்ன நடக்கிறது என்பதைக் காண பாபாவிற்கு கொள்ளை ஆசை இருந்தபோதிலும், நிற்கும் இடமும், உடுத்தியிருக்கும் உடையும் அதற்கு உகந்ததாயிருக்கவில்லை. சீக்கியர் உடையில் சிலரும், காவி உடையில் ஒருவரும், பெண் வேடத்தில் சிலரும், பிச்சைக்கார வேடத்தில் ஒருவரும், சாதுவின் வேடத்தில் மற்றொருவரும், ஆசிரியர் மற்றும் நண்பர்கள் வேடத்திலும் கலைஞர்கள் பலர் அந்த நாடகத்தின் அங்கங்களாக காட்சிகளை அரங்கேற்றிக்கொண்டிருந்தனர். தீடீரென்று வந்த ஒருவர், பாபாவை நோக்கி: பாபா, நீங்கள் நாடகம் நடக்கும் திரைக்கு முன்னால் இம்முனையிலிருந்து, மறுமுனைக்கு நடந்து செல்லுங்கள் என்று சொல்ல, பாபாவும் நடந்து சென்றார். மடியில் வைத்திருந்த பூக்களை மக்கள் மேல் தூவியவாறு மறுமுனையை நோக்கி நடந்து சென்றார். பாபாவின் கையால் வீசிய பூக்கள் அங்குமிங்குமாக அரங்கத்திலிருந்தோர் மேல் விழ, எட்டிப் பிடித்தனர் சில சுட்டிச் சிறுவர்கள். ஒற்றைக் காலில் நின்று ஜனங்களுக்கு ஆசி தந்து மறுமுனையைச் சென்றடைந்து, மீண்டும் திரைக்குப் பின்னால் நின்றுகொண்டார். நாடகம் முடிந்தது, காட்சிகளைக் கண்டுகொண்டிருந்தவர்களின் நெஞ்சங்களில் இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்டு, தொண்டு செய்து வாழ்ந்த சாது சுந்தர்சிங்கின் வாழ்க்கை நிகழ்வுகள் பதிவானது. நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றதும், அநேகர் பாபாவைச் சூழ்ந்துகொண்டனர். பாபாவுடன் புகைப்படமெடுக்கவேண்டும் என்று சிலர் விரும்பினர். அத்தனையையும் ஒத்துக்கொண்டார், ஒத்துழைத்தார் பாபா. நாடகம் முடிந்தது, நாடகத்தில் நடித்தவர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொள்ள அணிவகுத்து நின்றபோது, பாபாவும் நடுவில் நிறுத்தப்பட்டார். ஆம், அன்று நடந்த சாது சுந்தர்சிங் நாடகத்தில், எனக்குக் கிடைத்தது பாபாவின் வேடம்.

 


அகத்தில் எங்கும் அவரே தெய்வம்
இகத்தில் எதுவும் நிகரேல் துன்பம்

கூடு விடுங்; குழந்தைக்கு மாதுமடி வீடு
கூவி விடு குழந்தைக்கு நீதாயவன் பேறு

குணமுரு கூளமுரு கும்பிடு பக்தமுரு
கூனுமுரு கூடலுமுரு குருவீடு கொண்டவுரு

சொல்லிடும் வார்த்தை உடுத்திடும் ஆடை
கல்லிடும் மாந்தர்க்குக் கறைபடும் ஆடை

பொய்க்குப் பொய்யாய் மெய்யறி அறிவில்
மெய்க்கு மெய்யாய் மெய்யறி அறிவால்

நாவழி சொல் கொல் அகவழி நில் வெல்
ஊழ்வழி கயறறு ஆழியழி அகமே ஒளி

உயிர்க்கு உயிராய் மெய்யவன் மனதில்
உயிர்க்கு உயிரே மெய்யவன் கரத்தில்

படி விடு பரர்க்கு வீடு கொடு இறைவா
அடி தொழு மம்பரர்க்கு முடி கொடு இறைவா

விடும் மெய் வீடு சேர ஆவி வரும் அங்கே
ஆவி விட மெய் இல்லா வீடு தரும் அங்கே

சங்கு தீர்த்தம் சாவிழழு சத்தம்
தங்கு மிடத்திலே நீங்குமும் பரத்திலே

ஒருமுறை திருமறை அகக்கறை களைந்தவனை
அகக்கறை மறுமுறை ஆளுங்கால் மரணமே



- கிருபாகரன்


Comments

Popular posts from this blog

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

  எனக்கோ இரண்டு  பிரசங்கங்கள் டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன். மனைவி வீடு வந்து தேனீர்

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே