எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்
டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன்.
மனைவி வீடு வந்து தேனீர் தந்து, மீண்டும் ஆலயம் சென்றாள். தேனீர் அருந்தி, மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு சுமார் 10 நிமிடங்கள் படுக்கையில் சரிந்தேன். மனமோ என்னை ஆலயத்திற்கு இழுத்தது. அதனை அடக்கிக்கொள்ள இயலாது, மீண்டும் எழுந்து, ஆலயத்தை நோக்கி நடந்து சென்றேன்; பிரசங்கம் ஆரம்பித்திருந்தது. உள்ளே நுழைந்து இருக்கையில் அமர யோசித்தவனாக. களைப்புடன், ஆத்தும பசியுடன் ஆலயத்தின் வெளியிலேயே நின்றுகொண்டு, காதுகளில் விழும் சத்தத்தைக் கேட்டவனாக ஆத்தும ஆகாரத்தை உண்டுகொண்டிருந்தேன். சகோ.வள்ளிக்குட்டி தாமதங்களைக் குறித்துப் பிரசங்கித்து; துரிதமாகச் செயல்படவேண்டிய காலத்தில் உள்ளோம் என்பதை வசனங்களின் வாயிலாக விளக்கிக்கொண்டிருந்தார்.
அப்போது, ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தின் ஊழியர்கள் இருவர் அவ்வழியே நடந்து வர, 'நான் வெளியே நிற்பதைக் குறித்து அவர்கள் என்ன நினைப்பார்களோ!' என்ற உணர்வில், நானாகவே அவர்களிடத்தில், எனது நிலையினைச் சொல்லி அவர்களுக்குப் புரிய வைத்தேன். ஏதாவது உதவி தேவையா? என அவ்விருவர் என்னிடத்தில் அன்பாக விசாரித்தபோது, 'நன்றி, இப்போது நலம், இடையில் உள்ளே சென்றால் பிரசங்கத்தின் நடுவே இடையூறாயிருக்கும், அத்துடன் இன்னும் களைப்பு முழுவதும் தீரவில்லை எனவே வெளியே நிற்கிறேன்' என்றேன்.
அப்போது, காதிலே பிரசங்கம் விழுந்துகொண்டிருக்க, கண்ணிலோ எனக்கு முன்னே நடக்கும் ஓர் உயிரின் காட்சி பதிந்துகொண்டிருந்தது. ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த மலர்களின் மேல், ஆனந்தமாய்ப் பறந்துகொண்டிருந்த மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சி ஒன்று தவறுதலாக செடிகள் நிற்கும் சகதிகள் நிறைந்த தரையிலே இறங்கி சகதியின் மேல் அமர்ந்தது. ஓரிரு வினாடிகள் கழித்து, மீண்டும் அது பறக்க முற்பட்டபோது, அதன் சிறகுகள், பறக்க இயலாதபடி அங்கிருந்த சகதியினால் முடக்கப்பட்டது. ஆம், ஆனந்தமான அதற்கு அது அதிர்ச்சியின் நேரம். இதனைக் கண்ட நான், எனது கையிலிருந்த கேமராவில் அக்காட்சியினைப் பதிவு செய்தேன். 'தரையிரங்கிய இடம் தவறு' எத்தனை அழகான இறக்கை, இப்படி சகதியில் சிக்கிக் கொண்டதே! என்ற உணர்வின் ஊடே 'சகதியான இடத்தில் பறக்கவேண்டும் தரையிரங்கக் கூடாது' என எனக்கும் ஓர் பாடம் கற்கக் கிடைத்தது. விமானமும், ஓடுதளமும் நினைவில் வந்தது.
ஆராதனை முடிவு பெற. நானும் அங்கேயிருந்து நடக்கத் தொடங்க, சிக்கிய வண்ணத்துப் பூச்சிக்கு 'நீ என்ன செய்தாய்' என்ற உணர்வு என்னைத் தொற்ற. கேமராவை பையில் போட்டுவிட்டு, அந்த வண்ணத்துப் பூச்சியை சகதியினின்று எடுத்து, இறக்கையில் இருந்த சகதியினைத் துடைத்து பறக்கவிட்டேன். தேவனா, 'பேதுருவோடு பேசியது போல' என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். (மத் 4:19) ஆம், அன்று ஆலயத்தில் உள்ளோர்க்கு ஒன்று, எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்.
ஆம், பிரியமானவர்களே! நம்முடைய வாழ்க்கையும் சில நேரங்களில் இந்த வண்ணத்துப் பூச்சியைப் போலவே சிக்கிக்கொள்ளுகின்றது. எங்கே பறக்கவேண்டுமோ அங்கே பறக்காமல், தரை இறங்கிவிடுவதினால் தவறு நேர்ந்துவிடுகின்றது; விளைவு, எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும் வாழ்க்கையோ விழுந்துவிட்ட வேலிக்குள்ளேயே சிக்கிக்கொள்ளுகின்றது. அத்தகைய தருணத்தில் தேவனது விரல்கள் நம்மை துடைத்துத் தூக்கிவிடப் போதுமானது.
Comments
Post a Comment