புதன், 6 அக்டோபர், 2021

மறுபக்கம்

 

 மறுபக்கம்



ஆகஸ்ட் 14, 2021, நானும் எனது மனைவியும் டெஹ்ரி ஆன் சோன் கடைவீதிக்குச் சென்றிருந்தோம். துணிக்கடைக்குள் நுழைந்த நாங்கள், மகன் ஜான் சாமுவேலுக்காக எதையாகிலும் வாங்கிச் செல்லலாம் என்ன எண்ணத்தில்,  வாலிபர்களுக்கான  மேலாடை  தொங்கவிடப்பட்டிருந்த  இடத்திற்குச் சென்றோம். சென்றதுமே பளிச் என்று ஒரு T-Shirt  -ன் முன்பக்கம்  எங்களது  கண்களில்  பட,  அதனை  உடனே  கைகளில்  எடுத்துக்கொண்டு, பணத்தையும் செலுத்திவிட்டு வீடு திரும்பினோம். வீட்டை அடைந்ததும், மகனது கைகளில் சந்தோஷமாக அந்த T-Shirt -ஐகொடுத்தபோது,  கைகளில்  வாங்கிய  அவன்  திரும்ப  எங்களது  முகத்தைப் பார்த்தான். எங்களுக்கோ ஒன்றும் புரியவில்லை; எனினும், அதன்  பின்புறத்தை  அவன்  திருப்பிக்காண்பித்தபோதோ,  எங்களுக்கு  பேரதிர்ச்சியாயிருந்தது. ஆம், அது இரண்டாகக் கிழிந்திருந்திருந்தது. ஒருபுற அழகை மட்டுமே பார்த்துவிட்டு, மறுபுறத்தின் அலங்கோலத்தைப் பாராது வந்துவிட்டோமே என நினைத்து எங்களுக்குள் நொந்துகொண்டோம்.    

பல  வேளைகளில்  நாமும்,  ஒருபுறத்தை  மட்டுமே  பார்த்து  திருப்தியடைந்துவிடுகின்றோம்.  கண்களுக்குப்  பிரியமானவைகளைத்தெரிந்துகொண்டு, கிழிந்துபோன நிலையில் காட்சியளிக்கும் கர்த்தருக்குப் பிரியமில்லாத  அதன்  மறுபக்கத்தினைக்  காண  மறந்துவிடுகின்றோம்.  அழகென்று நாம் நினைக்கும் காரியங்களை, அலங்கோலம் என அக்கம் பக்கம் அளவிடுவதற்குக் காரணம், மறுபக்கத்தை பார்க்க நாம் மறந்ததே.    

மற்றொருநாளில்,  கிழிந்துபோயிருந்த  அந்த  T-Shirt  -டினைக் மாற்றும்படியாக நானும் மனைவியும் மறுபடியும் துணிக் கடைக்குச் சென்றிருந்தோம்.    கடையின்    வாசலில்    நின்றுகொண்டிருந்த  காவலாளியிடம், துணியினைக் காட்டி, இதனை மாற்றவேண்டும் என்று சொன்னபோது, அவர் கடையினுள் அதனைக் கொண்டுசெல்லுவதற்கான நுழைவுச்  சீட்டினை  எழுதத்  தொடங்கினார்.  நுழைவுச்  சீட்டில்  நாங்கள்  கொண்டுசென்ற   துணியைப்   பற்றிய   விபரங்களையும்,   எங்களது  கைபேசி  எண்ணையும்  எழுதிய  பின்னர்,  எல்லாற்றிற்கும்  கீழ் இரண்டு கையெழுத்துக்களை அவரே போட்டார். நான் அதனை வாங்கிப்  பார்த்தபோது,  ஒன்று  கடை  ஊழியரின்  கையெழுத்து  என்றும்,  மற்றொன்றோ  'Customer sign'  என்றும்  இருந்தது.  எங்களைக்  கஷ்டப்படுத்தாமல், அவரே என்னுடைய இடத்தில் கையெழுத்தினைப் போட்டபோது, அந்த காவலாளியின் மறுபக்கம் எனக்குத் தெரிந்தது. 

கடையின் உள்ளே சென்றதும், கிழிந்;துபோயிருந்த அந்த T-Shirt -ஐகடைக்காரரிடம்  கொடுத்தோம்.  T-Shirt  -ஐ  கைகளில்  வாங்கிய  அவர்,  முன்னும்  பின்னும்  அதனை  திருப்பிப்  பார்த்துவிட்டு,  எங்களை  நோக்கி, 'எதற்காக இதனை மாற்றுகிறீர்கள்? என்ன பிரச்சனை?' என்று கேட்டார். நாங்கள் அவரை நோக்கி, 'இதன் பின்புறம் கிழிந்திருக்கிறது' எனவே  வேறு  T-Shirt    வேண்டும்  என்று  சொன்னோம்.  அவரோ,  சிரித்தவாறு எங்களை நோக்கி, 'சார், இது மாடல் சார், இப்படித்தான் இருக்கும்,  வேண்டும்  என்றால்  இதே  போல்  இருக்கும்  மற்ற  -ஐ  பாருங்கள்'  என்றார்.  நாங்களோ  அதிர்ந்துபோனோம்,  'என்ன  மாடலா'  என மனதுக்குள் ஒருவருக்கொருவர் கேளாத சத்தத்தை மனைவியும் நானும் எழுப்பிக்கொண்டோம். உலகத்தின் பார்வையில் 'மாடலாயிருக்கும் காரியங்கள், தேவனுக்கு முன் மாதிரியாகவும், ஜனங்களுக்கு முன்மாதிரியாகவும் இராதே.'ஒருபுறம் அழகு, மறுபுறம் உலகுஎன இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்; (ரோமர் 12:2) வாழ தேவன் நம்மை வழிநடத்துவாராக. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக