Skip to main content

விழுந்தேன், எழுந்தேன்!

 

விழுந்தேன், எழுந்தேன்!

 

பீஹார் ஜெம்ஸ் வளாகத்தில், எனது வீட்டின் அருகாமையிலுள்ள ஜெம்ஸ் தீமோத்தேயு வேதாகமக் கல்லூரியில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் 11 மணி வரை ஜெபம் நடைபெற்றுவந்தது. சகோதரர்கள் சிலாக, சிறு அறை ஒன்றில் கூடி ஜெபிக்கும் கூட்டத்திற்கு அன்று நான் சென்றிருந்தேன். ஊழியங்களுக்காகவும், ஊழியர்களுக்காகவும், தேசத்திற்காகவும் மற்றும் பல்வேறு தேவன் உணர்த்தும் காரியங்களுக்காகவும் அந்நேரத்தில் நாங்கள் ஜெபித்து வந்தோம். அன்று டிசம்பர் 14, 2012 வெள்ளிக்கிழமை இரவு பத்து ஒன்பது மணி ஆகிவிட்டதனால் அவசர அவசரமாக வீட்டிலிருந்து கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றேன். நான் நுழையும்போது, மணி ஒன்பதைத் தொட்டது. சகோதரர் அந்தோணி கீபோர்டு வாசிப்பதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தார். என்னருகே ஜெம்ஸ் மருத்துவமனையில் பிசியோதெசபிஸ்ட் ஆக பணிபுரியும் மிஷனரி சகோ.ஜான் அமர்ந்திருந்தார். தாமதமின்றி கூடுகையினைத் தொடங்கும் எண்ணத்துடன் நான் சகோதரர்களை உற்சாகப்படுத்த, தொடக்க ஜெப வேளை ஆரம்பமானது; தொடக்க ஜெபம் ஏறெடுக்கப்படும் நேரத்தில் ஜெம்ஸ் மத்திய மண்டல இயக்குநர் சகோ.எமர்சன் வந்து இணைந்தார். தொடக்க ஜெபம் முடிந்து, பாடல் வேளையினை நான் நடத்தினேன். அதற்குள் சகோ.ஜெயசீலன், சகோ.சுரேஷ் மற்றும் சகோ.ஹென்றி ஆகியோரும் இணைந்தனர். பாடல்வேளை முடிந்ததும், 9.30 மணி முதல் 9.55 மணி வரை சகோ.சுரேஷ் ஆராதனையில் நடத்தினார். பின்பு சற்று இடைவேளை; தேனீர் அருந்திக்கொண்டே அடுத்து நாங்கள் ஜெபிக்கவேண்டிய ஜெபக்குறிப்புகளை ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ளும் வேளை. அந்த ஜெபக்கூடுகைக்கு வழக்கமாக வரும் சிலர் அன்று வராமலிருந்ததால், இக்கூடுகைக்கு வரும் சகோதரர்களுக்கு தடைகள் உண்டாகாதிருக்க ஜெபிக்கவேண்டும் என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம்.

நான் வழக்கமாக பத்து மணிக்கு மாத்திரைகளை உட்கொள்ளவேண்டும். எனவே, பத்து மணிக்கு சாப்பிடவேண்டிய மாத்;திரைகளைக் கூட்டத்திற்குச் செல்லும்போது கையில் கொண்டு செல்லுவேன்; தேனீர் வேளையில் சாப்பிடுவேன். கூடுகையின் மேலுள்ள எனது வாஞ்சையைக் காட்டும்படியாக, அன்று என் கையில் இருந்த மாத்திரைகளை சகோதரர்களுக்கு உயர்த்திக் காட்டி, இதன் மத்தியிலும் நான் கூடுகைக்கு வந்துகொண்டிருக்கின்றேன் என்று சொன்னேன். 
அப்போது, ஊழியப் பாதையில் முழங்காலில் நின்று ஜெபித்த ஊழியர்களைப் பற்றி சகோதரர் எமர்சன் பகிர்ந்துகொண்டார். இலங்கையில் கிறிஸ்தவர்களின் முழங்கால்களைப் பார்த்து, அவர்கள் ஊழியர்கள் மற்றும் போதகர்கள் என அறிந்து தண்டிக்காது ராணுவத்தினர் விட்டுவிட்டதனையும், தமிழகத்தின் போதகர் மறைந்த சாம் சுந்தரம் அவர்கள் முழங்காலில் நின்று ஜெபித்ததையும் அவர் பகிர்ந்துகொண்டார். ஒருமுறை போதகர் சாம் சுந்தரம் தான் ஜெபிக்கும் அறைக்கு சகோதரர் விக்டர்.பி.லாரன்ஸ் அவர்களை அழைத்துச் சென்றபோது, அங்கு சுவற்றில் ஆணிகள் இருப்பதனை சகோதரர் விக்டர்.பி.லாரன்ஸ் கண்டார். ஜெபிக்கும்போது தூங்கிவிடாதிருக்க அவர் செய்த அந்த ஏற்பாட்டினைக் கண்ட சகோதரர் விக்டர் பி.லாரன்ஸ் ஜெப வீரனாக மாறினார் என்பதனையும் சகோ.எமர்சன் பகிர்ந்துகொண்டபோது, நம்மால் இப்போது முழங்காலில் நின்று ஜெபிக்க இத்தனை பெலம் இல்லையே என சற்று சோர்வு உண்டானாலும், உற்சாகமான ஜெபிக்கும் ஆவி எனக்கு உண்டு என தேவன் நினைப்பூட்ட உற்சாகமடைந்தேன்.

2002-ம் ஆண்டு இந்த ஜெபக்கூடுகையில் நான் பங்கேற்றுவந்த நாட்களில், மூன்று மணி நேரமும் இடைவிடாது, எழுந்திராது முழங்காலில் நின்று ஜெபித்த நினைவும் நெஞ்சில் ஓடியது. அப்போது, இந்த ஜெபக்கூடுகை ஜெம்ஸ் அனோகா இல்லத்தில் அலுவலகத்தில், சகோ.ஜேசுராஜ் அவர்களின் நடத்துதலில் நடைபெற்றுவந்தது. அந்த நாட்களில், கூடுகைக்கு வருவோரின் எண்ணிக்கை குறையக் குறைய 2012-ம் ஆண்டு வரை அக்கூடுகை நடைபெறாதிருந்தது. 2012-ம் ஆண்டு சகோ.சுரேஷ் அவர்களது ஆர்வத்தால் மீண்டும் தொடங்கப்பட்டது. இதுவே இக்கூடுகையைப் பற்றி நானறிந்த வரலாறு.

டிசம்பர் 14, 2012 அன்று இரவு ஜெபத்திற்கு நான் செல்லும் முன்னதாக, பிற்பகலில் பி.பி.சி தொலைக்காட்சி செய்தியினைப் பார்த்திருந்தேன். அச்செய்தியில், அமெரிக்கா மற்றும் சீரியா இடையிலான உறவின் முறிவு மற்றும் உலகில் உணவின்றி உயிர் இழக்கும் மக்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று சொல்லப்பட்ட இரு முக்கியக் காரியங்களை அந்த ஜெபக் கூடுகையில் பகிர்ந்துகொண்டு, ஜெபிக்க எண்ணம் கொண்டிருந்தேன். ஜெபக்குறிப்பு எழுதத்தொடங்கியதும், நான் முதன் முதலாக அந்த இரு குறிப்புகளையும் பகிர்ந்துகொண்டேன். சகோ.எமர்சன் ஜெபக்குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தார். தொடர்ந்து பலர் பலவிதமான ஜெபக்குறிப்புகளை பகிர்ந்துகொண்டனர். நானோ, மேலும், டிசம்பர் 21 அன்று தமிழ்நாட்டிற்கு சிகிச்சைக்காகச் செல்கிறேன் அதற்காக ஜெபியுங்கள் என்றும், ஜாமக்காரன் ஆசிரியர் Dr.புஷ்பராஜ் ஜெம்ஸ் மற்றும் சகோ.அகஸ்டின் ஜெபக்குமாரைத் தவறாகப் புரிந்துகொண்டுவருகிறார் எனவே அதற்காக ஜெபிக்கவேண்டும் என்ற ஜெபக்குறிப்புகளையும் முன் வைத்தேன். ஜெப வேளை பாடலுடன் தொடங்கியது, சகோ.எமர்சன் அதனை நடத்திக்கொண்டிருந்தார். எழுதப்பட்ட பல்வேறு குறிப்புகளை அவர் ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்லச் சொல்ல, ஒவ்வொருவராக நாங்கள் ஜெபித்துக்கொண்டிருந்தோம்.

நான் பகிர்ந்துகொண்ட ஜெபக்குறிப்புகள் சொல்லப்படும் என எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன், அதில் ஒருக்குறிப்பு பொதுவாக 'மிஷனரிகளின் சுகத்திற்காக ஜெபிப்போம்' எனச் சொல்லப்பட்டது. ஆனால், மற்ற எந்த ஒரு குறிப்பும் இறுதிவரை சொல்லப்படாமல் கூடுகை நிறைவுற்றது. வீட்டிற்கு வந்தேன்; படுக்கைக்குச் சென்று படுத்தேன், உறக்கத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன், மனமோ அமைதியாய் நிம்மதியாய் அதனை வரவேற்க எதிர்கொண்டிருந்தது. அப்போது, என் நினைவில் இன்று நீ சொன்ன ஜெபக்குறிப்புகள் எதற்காகவும் ஜெபம் ஏறெடுக்கப்படவே இல்லையே என்ற எண்ணம் உருவானது. அவ்வளவுதான், எனது தூக்கம் கலைந்துபோனது, மனநிம்மதி அகன்றுபோனது, அதனையே பற்றிய யோசனை, இனி அந்தக் கூடுகைக்குப் போகவேண்டாம் என்பது வரை என்னைக் கொண்டுசென்றது. ஒருவழியாக, விழிகளை மூடியே கிடந்தேன், நித்திரை நான் அறியாத நேரத்தில் என்னைக் கவ்வியது; அது கர்த்தரின் செயல்.

காலை எழுந்ததும், சுமார் 6.45 மணி அளவில் ஜெபிக்கும்படியாக வீட்டில் எனது அறைக்குள் சென்றேன். அங்கும் என் நினைவில் ஜெபிக்காத ஜெபக்குறிப்புகள் வந்து நிற்க, ஏன்? ஏன்? ஏன்? என்று கேள்விகளையே கேட்டு, விடையறியாது, தேவனைத் துதித்துக்கொண்டிருந்தேன். ஆம், அந்த நினைவுகள் அகல அதுதான் வழியெனக் கண்டேன் அப்போது. ஜெபத்தின் இடையில், 'மகனே, உனக்கு அந்த நினைவினைக் கொடுத்தது, உன்னைத் தடுத்தது, நிம்மதியைக் குலைத்தது நானல்ல; நீ உன் மனதில் ஜெபிக்காத ஜெபிக்குறிப்புகளுக்காக வருந்தத் தொடங்கியதும், சத்துரு அதனையே கையில் எடுத்து, அந்த ஜெபத்திற்குச் செல்லாதபடி உன்னைத் தடுக்கப்பார்த்தான்' என்று தேவன் மனதில் பேசினார். நீ கூடுகையில் அந்த குறிப்புகளைச் சொல்லும் முன்னரே, உனது விண்ணப்பம் கேட்கப்பட்டதென்று நீ அறியாயோ? என்ற கர்த்தரின் சத்தம், சத்துருவின் சத்தத்தை அமைதலாக்கியது.

மீண்டும் எனது ஜெபத்தினைத் தொடர்ந்தேன்; ஆம், டிசம்பர் 15, 2012 அன்று காலை என்னிடத்தில் அவர் பேசிய ஒரே ஒரு வார்த்தை, 'பயப்படாதே' என்பதே. அன்று காலை எனது மனைவி மற்றும் மகனை பள்ளியில் விட்டுவிட்டு, கேமராவைக் கையில் எடுத்தவனாக, நானிருந்த வீட்டின் அருகில், சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் வீட்டின் முன்னே இருந்த மலர்களை படமெடுக்கச் சென்றேன். அப்படியே, தொடர்ந்து ஜெம்ஸ் ஆடிட்டோரியம் சென்று, அதனையும் சுற்றி வைக்கப்பட்டிருந்த மலர்ச் செடிகளைப் பார்த்து நடந்து வந்துகொண்டிருந்தபோது, அப்பக்கம் நின்றார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்.Praise the Lord அண்ணன் என்று சொல்லிக்கொண்டேன். அவருடன் பேசிக்கொண்டிருந்த சில நேரத்தில், அப்போதைய ஜெம்ஸ் மீடியாவின் துணை இயக்குநர் சகோ.தினேஷ் அங்கு வந்தார். அப்போது, சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் என்னிடத்தில் Dr.புஷ்பராஜ் அவர்களுடன், சில மாதங்களுக்கு முன்னர் நடந்த அலுவலகத் தொடர்புகளைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, நான், Dr.புஸ்பராஜ் உடனான நமது நிலை பற்றி, நேற்று இரவு தீமோத்தேயு வேதாகமக் கல்லூரியில் நடைபெற்ற இரவு ஜெபத்தில் ஜெபிக்கச் சொன்னேன் என்று சொல்லி அத்துடன் நிறுத்திக்கொண்டேன். ஜெம்ஸ் ஊழியங்களை தவறாகப் புரிந்துகொண்ட பாரம் எனக்குள்ளும், சகோதரருக்குள்ளும் காணப்படடது. சகோதரரைச் சந்தித்துவிட்டு திரும்பி வந்தேன். எங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் இந்த பாரத்திற்காக நேற்று ஜெபிக்காமல் விட்டுவிட்டார்களே என்ற ஏக்கத்துடன் நான் காணப்பட்டேன். அப்பொழுதும், கூடுகைக்கு வரும் நாட்களில் செல்லவேண்டாம் என்ற எண்ணமே என்னில் நிறைந்திருந்தது. இந்நிலை உண்டானதன் காரணத்தை அறிய முற்பட்டபோது, அநேகர் கூடுகைக்கு வராமலிருந்த அன்று, பெருமையுடன் மாத்திரைகளை உயர்த்திக் காட்டி, என்னை உயர்த்திக்கொண்டதுதான் என அறிந்துகொண்டேன். தவறு எவரிடத்திலுமில்லை, என்னிடத்திலேதான். என்னுடைய பெருமையை உடைக்க எதிராய் வந்த அம்பு அந்நிகழ்வு என அப்போது நான் புரிந்துகொண்டேன். ஆவிக்குரியவனாக நான் இருந்தபோதிலும், அழுகைக்குப் பின்னரே அதனை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. 

Comments

Popular posts from this blog

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

  எனக்கோ இரண்டு  பிரசங்கங்கள் டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன். மனைவி வீடு வந்து தேனீர்

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே