'ஜான்தோசை'
21 ஜனவரி 11, காலை 8:25 மணி அவசரமாக எனது மனைவி அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றுவிட்டாள். எனது மகன் ஜான் தூங்கிக்கொண்டிருந்தான். 'நீங்க புறப்படும்போது அவனைக் கூட்டிக்கொண்டுவந்து எனது அலுவலகத்தில் விட்டுவிடுங்கள்' என்று சொல்லிவிட்டு சென்றிருந்தாள். பத்து மணிக்கு அலுவலகத்திற்குச் செல்லவேண்டிய நான், தூங்கிக்கொண்டிருந்த எனது மகனை எழுப்பினேன், பல முறை தோற்று ஒரு வழியாக 10:30 மணிக்கு அவனை படுக்கையிலிருந்து எழுப்பி வெற்றி கண்டேன். தொடர்ந்து பல் துலக்க வைத்து, காலைக் கடன்களை செய்யவைத்து ஆடை அணிவித்தேன். சமயலறைக்குச் சென்று பாத்திரத்தில் இருந்த தோசை மாவை எடுத்து தோசை சுட்டு மகனுக்குக் கொடுத்தேன்; அவனோ சாப்பிட மனமின்றி, வேண்டாம் வேண்டாம் என்று தட்டிக் கொண்டேயிருந்தான். எனக்கோ அலுவலகத்திற்குக் கிளம்ப வேண்டும்; என்ன செய்வதென்று புரியாது விழித்தேன். சுடச் சுடச் தோசைகளைச் சுட்டு முதலில் நான் சாப்பிட்டு முடித்தேன். அவனோ வேண்டவே வேண்டாம் என அடம் பிடிக்க, அடிப்பதை விட்டு விட்டு அடுத்து என்ன செய்வது என யோசித்தேன். சட்டென எனது மகனிடம் 'ஜான் தோசை' வேண்டுமா என்று கேட்டேன் அவனுக்குப் புரியாததினால் மீண்டும் வேண்டாம் என்றே பதில் வந்தது. அவனை அழைத்துக் கொண்டு வந்து சமயலறையில் நாற்காலி ஒன்றினைப் போட்டு அதின் மேல் ஏற்றி, அப்பா இப்போது சுடும் தோசை உனக்குப் பிடிக்கும் என சொல்லி, ஆங்கில எழுத்தின்படி J O H N என தனித்தனியாக ஒவ்வொரு எழுத்து வடிவத்திலும் தோசையினைச் சுட்டுக் கொடுத்தேன். இடையிடையே பெரிய தோசையினையும் கொடுத்தேன்; தனது பெயரிலேயே தோசை சுடப்படுவதைக் கண்ட அவன் ஆசை ஆசையாக 'அப்பா இன்னொரு ஜான்தோசை, இன்னொரு ஜான்தோசை' என கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டான். எனக்கும் எனது மகனுக்கும் இடையே நடந்த சுவையான இந்த நிகழ்வு என் மனதிற்கு இனித்தது.
Comments
Post a Comment