2015 டிசம்பர் 28, காலை 10.15 மணி, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஓய்வெடுக்கும் அறையின் ஓர் இருக்கையில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தேன். தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பயணித்து வந்த களைப்பினைப் போக்கிக்கொள்ள சற்று இளைப்பாறிக்கொண்டிருந்தேன். அந்த ஓய்வறை வெளியில் இருப்போர் உள்ளேயும், உள்ளே இருப்போர் வெளியில் நடப்பவைகளைக் காணும் வண்ணமாக கண்ணாடியினால் சுற்றிலும் அடைக்கப்பட்டிருந்தது. பேருந்திற்காகக் காத்திருந்த பயணிகள் அறையினுள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். அப்போது, சட சடவென இறக்கையினை அடித்தவண்ணம் திடீரென அந்த அறையினுள் வேகமாகப் பறந்துகொண்டிருந்தது ஓர் புறா. அறையிலிருந்து வெளியே பறந்து செல்ல அங்கும் இங்கும் சுற்றிவாறு பறந்துகொண்டிருந்தது; வெளியில் வானமும், மரங்களும், செடிகளும் தெரிவதைப் பார்த்துவிட்ட புறா, வேகமாக பறந்து சென்று வெளியேற முயற்சித்தது; அந்தோ பரிதாபம், இடையில் இருந்த கண்ணாடியை அது அறியாததால், அதிலே மோதி திரும்பியது.
இந்தப் புறாவைப் போன்றதாகவே இன்று நம்முடைய வாழ்க்கையும் காணப்படலாம். வேதத்தை வாசிக்கிறோம், ஆலயத்திற்குச் செல்கிறோம், கூட்டங்களில் பங்கேற்கிறோம், கிறிஸ்தவர்கள் என்ற உள்வட்டத்திற்குள் பறந்துகொண்டிருக்கிறோம்; தேவன் யார் என்றும் பரலோகம் எப்படிப்பட்டதென்றும் நாம் அறிந்திருந்திக்கிறோம். என்றாலும், இந்த உலகை விட்டும், உடலை விட்டும் நாம் வெளியேறும்போது கண்ணாடியில் மோதி விழுந்துவிடக்கூடாது. வசனங்களுக்குக் கீழ்ப்படியாமல் வாழுவோமென்றால், வழியாகிய இயேசுவுக்கு இதயத்தில் இடங்கொடாமல் வாழுவோமென்றால் மரணத்திற்குப் பின் நமது ஆத்துமா பரலோகத்தை நோக்கிச் செல்ல முயற்சிக்கும்போது தடுக்கப்படுவது நிச்சயம். பரலோகத்தைப் பற்றிய அறிவிருக்கலாம், ஆனால் அங்கு பறக்கமுடியாது. இன்றே வழியைத் தெரிந்துகொண்டால், வெளியே பறப்பது எளிதாயிருக்கும்.
என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் (யோவா 12:48) என்றார் இயேசு.
Comments
Post a Comment