மார்ச் 28, காலை சுமார் 9.30 மணி, திருநெல்வேலி ஜங்சன் ரயில் நிலையத்தில் குடும்பமாக கன்னியாக்குமரி ஹவுரா ரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். ரயில் வருவதற்குச் சற்று தாமதமாகிக்கொண்டிருந்ததால், 5-ம் எண் நடைமேடையில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தேன். ரயிலில் உண்ணவேண்டிய உணவை, நடைமேடையிலேயே உட்கார்ந்து உண்ணத் தொடங்கினோம். R.A.C -ல் இருந்த இருக்கையின் தற்போதைய நிலையினை அறிந்துகொள்ளும்படியாக, நிலையத்தின் முன் நுழை வாசலில் நிறுவப்பட்டிருந்த இரு கணணிகளில் அவ்வப்போது சென்று முயற்சித்துக்கொண்டிந்தேன் நான்; இயங்காத அதனைக் கண்டு ஏமாற்றத்தோடு நின்றுகொண்டிருந்தபோது, விசாரணை அலுவலகம் இருக்கும் இடத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். அங்கு நின்ற ஒருவரை அணுகியபோது, அவர் மூலையினை விரல் காட்டி அங்கு இருக்கிறது என்றார்; சென்றேன், அங்கோ, தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த ஒரு மறைவிடத்திற்குள் ஒரு பெண் உட்கார்ந்துகொண்டிருந்தார். ஏதோ எழுதிக்கொண்டிருந்தார், கணணி ஒன்று ON செய்யப்பட்ட நிலையில் மேஜையில் இருந்தது. விசாரணை அலுவலகம் இதுவா? என்ற கேள்வியோடு அந்தப் பெண்ணின்
முகத்தை நான் பார்த்தபோது, மெல்ல நிமிர்ந்த அந்தப் பெண்ணிடத்தில், PNR Status பார்க்கவேண்டும் என்று சொன்னேன். Server down ஆக இருக்கிறது, நீங்கள் மொபைலில் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். எனது கைபேசியில் அதனைப் பார்க்கும் வசதி இல்லாதிருந்ததினால், மற்றொருவரை தொடர்புகொண்டு இருக்கைகளின் விபரங்களை அறிந்துகொண்டேன். ரயில் கிளம்பியது, இருக்கைகள் பல காலியாகக் கிடந்தன. வண்டி ஸ்ரீரங்கத்தை அடைந்ததும் குடும்பமாக நாங்கள் இருந்த இருக்கைகளுக்கு அருகிலான இருக்கைகளில் புரோகிதர் ஒருவர் மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் குடும்பமாகவும் மற்றொரு புரோகிதர் தனியாகவும் வந்து அமர்ந்தனர். நீண்ட நேர மௌனத்திற்குப் பின்னர், மெல்ல என்னிடத்தில் பேச்சுக் கொடுத்த அவர்கள் கிறிஸ்தவத்தைப் பற்றியும், இந்து மதத்தினைப் பற்றியும் ஒப்பிட்டுப் பேசத் தொடங்கினர். என்னுடைய மூதாதையர்கள் ஒருவேளை இந்துக்களாக இருந்திருக்கலாம், ஆனால், நாங்களோ பல தலைமுறைகளாக இயேசுவையே அறிந்துகொண்டு அவரையே பின்பற்றுகிறோம் என்று கிறிஸ்துவை அழுத்தமாக நான் பேசிக்கொண்டிருந்தேன்; அத்துடன் என்னிடமிருந்த, எனது தாயார் ரூபாய் 1650.00 க்கு வாங்கிக்கொடுத்திருந்த பெரிய எழுத்துக்களுடனான, கொரியாவில் பிரிண்ட் செய்யப்பட்ட வேதாகமத்தையும் அவர்களிடம் காண்பித்தேன். வேதாகமத்தை என்னிடமிருந்து வாங்கிய ஒரு புரோகிதர், அதனை தன் தலையில் வைத்து ஒத்திக்கொண்டார், உள்ளே திறந்து 'மிக அழகாயிருக்கிறது' என்றார்; பக்கத்தில் அமர்ந்திருந்த, அவரது மனைவி 'எத்தனை மெல்லிசா இருக்குல்ல இந்த பேப்பர்' என்று சொன்னார். அப்போது, மற்றொரு புரோகிதர் தனது பையினைத் திறந்தார், உள்ளேயிருந்து புத்தகம் ஒன்றினை எடுத்து என்னிடம் கொடுத்தார்; பார்த்தேன், அதுவோ 'பகவத் கீதை'. இதன் விலை 100 ரூபாய், நான் இலவசமாகத் தருகிறேன், இதனை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், சந்தேகம் ஏதும் இருந்தால் என்னிடம் இந்த விலாசத்தில் தொடர்புகொண்டு பேசுங்கள் என்றார். உங்களுக்கு என்றேன், என்னிடம் இன்னொரு பகவத்கீதை இருக்கிறது, அதை நான் வாசிக்கிறேன் என்றார். வாழ்க்கையின் கேள்விகள் அனைத்துக்கும் விடை தரும் வேதத்தை 22 முறை வாசித்திருக்கும் நானோ, அந்த பகவத்கீதையை அவரிடமே திரும்பக் கொடுத்துவிட்டு, என் தாயார் வாங்கிக்கொடுத்த, நான் உபயோகிக்கும் வேதாகமத்தை திரும்ப வாங்கிக்கொண்டேன். மருத்துவப் பரிசோதனைக்காக திருநெல்வேலி வந்துவிட்டு, அவசர அவசரமாக பீஹார் திரும்பிக்கொண்டிருந்த நான் மற்றவருக்குக் கொடுக்க 'இரண்டு வேதாகமங்கள் இல்லையே' என்ற சோகத்துக்குள்ளானேன்.
Comments
Post a Comment