அதிர்வுகள்
25 ஏப்ரல், 2015, காலை சுமார் 12 மணி, பீஹார், டெஹ்ரி-ஆன்-சோன், ஜெம்ஸ் அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்துகொண்டிருந்தேன். திடீரென இருக்கை அதிரும் உணர்வு, காரணத்தை அறியாமல் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்த நான், சில வினாடிகளுக்குள் அது நிலநடுக்கம் என்று அறிந்து இருக்கையிலிருந்து எழும்புவதற்குள் சுற்றியிருந்தவர்கள் மற்றவரெல்லாம் எழும்பி வாசலை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். உடன் ஊழியர்களுடன் நானும் அலுவலகத்தை விட்டு வெளியேறினேன். வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் குளிரில் பல் நடுங்குவதைப்போல நடுங்கிக்கொண்டிருந்தன. நேபாளில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளே அவைகள். 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களும் நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகள் தொடர்ந்துகொண்டேயிருந்தது.
அனைவரின் உதடுகளும் நிலநடுக்கத்தையே உச்சரித்துக்கொண்டிருந்தது. மனதின் ஓர் மூலையில் பயம் பதுங்கியிருந்தது. கைபேசியும் கையுமாக நின்றுகொண்டிருந்த பலர், கைபேசியின் வாயிலாகக் கிடைக்கும் செய்திகளைப் பிறருக்குச் சொல்லிக்கொண்டிருந்தனர். சிலரோ கைபேசியினைக் காதோடு ஒருங்க வைத்து ஊரிலிருக்கும் உறவினர்களோடு உறையாடிக்கொண்டிருந்தனர். வெளியிலே வெயில் என்றாலும், மரங்களின் நிழலே போதும் என்று பொறுமாமல் பொறுமையுடன் அதிர்வு முடியட்டும் எனக் காத்துக்கொண்டிருந்தனர் மக்கள். பணமோ, பொருளோ, மறுவேளை உணவோ என எதிர்காலத்திற்கென எதையும் எடுக்காமல், உயிரே போதும் என்று வீட்டை விட்டு அனைவரும் வெளியேறினர். எல்லோரும் வீட்டை விட்டு ஆயத்தமானவர்களாக அல்ல, அப்படியே புறப்பட்டு வந்தவர்களாக வீதியில் நின்றுகொண்டிருந்தனர். எனது மனைவி, கேஸ் ஸ்டவ்வை அணைக்க மறந்துவிட்டேன் என்றாள். எனது மகன் கால்சட்டை மட்டும் அணிந்தவனாக, மேலாடையின்றி நின்றுகொண்டிருந்தான். குழந்தைகளோ, அதிர்வுகளைக் குறித்து கவலைப்படாமல், ஆனந்தமாக விளையாடத் தொடங்கினர்; பள்ளி விடுதி மாணவர்களெல்லாம், விளையாட்டு மைதானத்தின் வீதிக்கு அழைக்கப்பட, புத்தகங்களைக் கூட வகுப்பறையில் விட்டு விட்டு பிழைத்தால் போதும் என்ற பீதியில் ஓடிவந்தனர் பிள்ளைகள். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அலுவலகத்திற்கு வெளியே உடன் நின்றுகொண்டிருந்த சகோதரர்களோடு பேசிக்கொண்டிருந்த நான், 'வெளியில் வரும்போது என்ன எடுத்துக்கொண்டு வந்தீர்கள்?' என்று கேட்டேன், எல்லோரும் வெறுங்கையைத்தான் காட்டி, ஒன்றுமில்லை என்றனர். பல வருட உழைப்பு, பலகோடி மதிப்புள்ள உபகரணங்கள் என எத்தனையோ இருந்தபோதிலும், உயிருக்கு முன் அவைகள் சமமல்ல என்றே நாங்கள் ஓடிவந்திருந்தோம். எத்தனை கோடி மதிப்புள்ள பொருட்களானாலும், எத்தனை நாட்கள் செய்த வேலைகளானாலும் விட்டு விட்டு உயிரைக் காக்க ஓடிவிட மனிதன் ஆயத்தமாகிவிடுகிறானல்லவா! அப்படியே, நம்முடைய ஆத்துமாவைக் காக்கவும் முதலிடம் கொடுக்கப்படவேண்டும் என்ற குறுஞ்செய்தியை அவர்கள் உள்ளத்தில் விதைத்தேன். மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மாற் 8:37) என்ற கேள்விக்கு, 'எல்லாவற்றையும் கொடுப்பான்' என்ற விடைதான் சரியானது என்பதை உணரச் செய்தேன். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ;டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? (மாற் 8:36) இயேசுவின் போதனையை காட்டிக்கொடுத்தேன். இன்றைய நாட்களிலோ, எல்லாவற்றையும் உடன் வைத்துக்கொண்டு உயிரை விட்டுவிடுவதுதானே மனிதர்களின் மாயமான வாழ்க்கை. வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன் (மத் 24:17) என்ற கட்டளை வீட்டைக் காப்பாற்றவோ, வீட்டிலுள்ள பொருட்களைக் காப்பாற்றவோ அல்ல வீட்டில் வசிப்போரைக் காப்பாற்றத்தானே ஆலோசனையாகக் கொடுக்கப்பட்டது என்ற இயேசுவின் போதனையினை அவர்களிடையே நினைவுகூர்ந்தேன்.
இமைகள் மூடினாலும், மனமோ அதிர்வுகளை மறக்காமலிருந்தது. அவ்வப்போது நிலநடுக்கமல்ல நினைவே இரவு தூக்கத்தில் தட்டி எழுப்பியது. நிலநடுக்கத்தை கண்டுபிடிக்க பாட்டிலில் தண்ணீர் ஊற்றி வீடுகளில் வைத்திருந்தோம். தண்ணீர் பாட்டலில் தளம்புகிறதா என்பதை கண்விடாமல் கவனித்துக்கொண்டிருந்தோம். ஒரு குடும்பமாக இருப்பதைவிட, குடும்பங்கள் ஒன்றாயிருப்பதை விரும்பி வீட்டிற்குள் உறங்குவதைத் தவிர்த்து மாடிக்குச் சென்று பாய் விரித்துத் துயில்கொண்டோம். அந்த நேரத்தை, இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றிச் சொல்ல ஏற்ற தருணமாக்கிக்கொண்டேன் நான். என்னருகே ஒட்டிப்படுத்திருந்த மகனுக்கு, இயேசுவின் இரண்டாம் வருகையில் நிகழவிருக்கும் பல அடையாளங்களை எடுத்துச் சொன்னேன். இயேசு விரும்பாத காரியங்களைச் செய்தால், அவர் வரும்போது போவது கடினம் என்று சொன்னபோது, கண்களை மூடி மன்னிப்பு வேண்டி ஆண்டவரை நோக்கி ஜெபித்தான் என் மகன். இரண்டாம் வருகையில் என்ன நடக்கும்? என்று பெரியவர்கள் சிலர் கேட்டபோது, அவர்களின் மனதிலும் வருகையைப் பற்றிய அதிர்வு இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.
ஏப்ரல் 26 இரவு, குடும்பங்களாக மாடியில் படுத்திருந்தோம், நிலவில் ஏதோ நிகழ்கிறது என்று சகோதரர் ஒருவர் சொல்ல, அது என்னவென்று தெரிந்துகொள்ள இணையதளத்தைத் திறந்தேன், பல ஆண்டுகளுக்கு ஒருமுறை தென்படும் ஜுபிடர் கிரகம் அன்று தென்படவிருப்பதை அறிந்துகொண்டேன். வானில் நடைபெறவிருக்கும் விந்தையான அக்காட்சியைக் காண ஆசையாய் மாடியில் படுத்துக்கிடந்தோம். விந்தை நிகழும் முன் பலரின் விழிகள் நித்திரைக்குள் மூழ்கிவிட்டன. நள்ளிரவு சுமார் 12.45 மணி, என்னையும் உறக்கம் இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென தட்டியெழுப்பினாள் என் மனைவி, வானத்தைக் காட்டினாள், காத்துக் கிடந்த நிகழ்வு கண்ணுக்குத் தெரிந்தது. ஒளிர்ந்துகொண்டிருந்த சந்திரன், விறு விறுவென தேய்ந்து மறைய, கண்ணுக்குத் தென்பட்டது ஜுபிடர் கிரகம். மங்கிய மஞ்சள் கலந்த ஆரஞ்சு புகைபோன்ற உருண்டை வடிவமாக அக்கிரகம் தென்பட, அதனைச் சுற்றிச் சுற்றி நான்கு நிலவுகள் வலம் வந்துகொண்டிருந்த அற்புதக் காட்சி அது. ஒரு மணி நேரத்துக்குள்ளாக அத்தனையும் முடிவுற்றது. மே 12, நேபாளில் மீண்டும் நடுங்கியது பூமி, அந்த பலமான அதிர்வுகள் எங்களையும் வீட்டை விட்டு வெளியேறச் செய்தன. அதிர்வுகள் அமைதியாகி வீட்டிற்குள் வந்தபோது, வீட்டினுள் சுவற்றில் உண்டாயிருந்த விரிசல்கள் பூகம்பத்தின் அடையாளங்களாகியிருந்தன.
Comments
Post a Comment