Skip to main content

தலைகீழ் வளர்ச்சி

 

 




ஆண்டவரின் படைப்பினுள் புதைந்திருக்கும் ஆச்சரியங்கள்தான் எத்தனை? எத்தனை? நம்முடைய வாழ்க்கையைக் குறித்து மாத்திரமே சிந்திக்கிறவர்களாகவும், நம்முடைய தேவைகளுக்காக மாத்திரமே தினமும் பயணிக்கிறவர்களாக நாம் காணப்படுவோமென்றால், நம்முடைய கண்களால் அவைகளைக் காணக்கூடாதபடிக்கு, நமது கால்கள் அவைகளைக் கடந்துசென்றுவிடும். சூழ்நிலைகளில் மாத்திரமல்ல, நம்மைச் சுற்றிலும் நடந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் நம்முடைய வாழ்க்கைக்காக ஆண்டவர் வைத்திருக்கும் செய்தி உண்டு. அநேக நேரங்களில், நமது அருகில் நிகழும் அற்புதங்களைக் காணும் கண்களற்றவர்களாக, அவை எங்கோ நடக்கின்றதென எண்ணி தேடி ஓடுகின்றோம். 'உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்' (சங். 119:18) என்று சங்கீதக்காரன் ஜெபித்ததுபோல ஜெபிப்போமென்றால், வேதத்தில் உள்ள அதிசயங்களை மாத்திரமல்ல, வேதத்தைச் சார்ந்து வெளியில் நடக்கும் அதிசயங்களையும் காணுமளவிற்கு நமது கண்கள் திறந்துவிடும். 

அது ஒரு ஞாயிற்றுக் கிழமையின் மாலை நேரம், சுமார் 5:30 மணி, எங்களது வீட்டின் அருகில் நாங்கள் பராமரித்துவரும் சில செடிகொடிகள் மற்றும் வாழை மரங்கள் அடங்கிய சிறியதோர் தோட்டத்தினை நானும் எனது மனைவியும் இணைந்து சுத்தம் செய்துகொண்டிருந்தோம். செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு, குப்பைகளை அகற்றிக்கொண்டிருந்தபோது, தரையிலிருந்து உயரமாக வளர்ந்திருந்த ஒரு கொடி எங்கள் கண்களில் பட்டது. இதனால் என்ன பிரயோஜனம்? இது ஏன் இடத்தை அடைக்கிறது? என்ற எண்ணத்தில் கையிலிருந்த கத்தியினால் கைகளால் எட்டிய அளவு உயரத்திற்கு அதனை அறுத்துவிட்டோம். இனி அது வளருவதற்கு வாய்ப்பே இல்லை; இடமும் சுத்தமாகிவிட்டது என்ற திருப்தியில் வீட்டிற்குச் சென்றோம். என்றபோதிலும், அவ்வப்போது நான் தோட்டத்திற்குச் செல்லும்போதெல்லாம், நான் வெட்டிவிட்ட அந்தச் செடியில் விடப்பட்டிருந்த மேல்பகுதி சுவற்றின் மேலே தொங்கிக்கொண்டிருப்பதை தினம் தினம் பார்த்துவருவது வழக்கம். தரையிலிருந்து வெட்டப்பட்டு பல மாதங்கள் சென்றபின்னும், அதன் மேல் பகுதியோ பட்டுப்போகாமல், அதன் இலைகளும் இன்னும் பச்சையாகவே காணப்பட்டன. எனக்கோ ஆச்சரியம்! இது எப்படி சாத்தியம்? இந்தச் செடிக்கு எங்கிருந்து தண்ணீர் கிடைக்கிறது? ஒருவேளை அவ்வப்போது பெய்கின்ற மழை நீரைக் குடித்து வளருகின்றதோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சுவற்றின் மேலேயோ, அதற்கு தண்ணீர் கிடைப்பதற்கான எந்தவித் சாத்தியக்கூறுகளும் இல்லாதிருந்தது. அப்படியிருக்க, திடீரென ஒருநாள், நான் வெட்டிவிட்ட கொடியின் தொங்கிக்கொண்டிருந்த கீழ்ப்பகுதியைப் பார்த்தபோது, அது என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கிற்று! ஆம், அது வேரிலிருந்து கீழே தரையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டிருந்தது. மெல்ல மெல்ல வளர்ந்து, சுமார் ஒரு மாதத்திற்குள்ளாக அது தரையையும் தொட்டுவிட்டது. இறைவனின் படைப்பில் இப்படியும் ஓர் அதிசய செடியா? என்று ஆச்சரியத்தை எண்ணத்தில் சுமந்தவண்ணம் வீட்டிற்குச் சென்றேன். மனைவியினிடமும் அதைக் குறித்து எடுத்துச் சொன்னேன், அப்போது, 'நீ அந்தச் செடியைப்போலிருக்கிறாயா?' என்ற கேள்வி என் உள்ளத்தில் உதித்தது.  

ஆம், பல நேரங்களில் இடையில் வெட்டப்படும்போது, நம்மைச் செழுமைக்குள்ளாக்கும் பல நீர்ப்பாய்ச்சலான இடங்களிலிருந்து நாம் துண்டிக்கப்படும்போது, வேரறுக்கப்படும்போது நாம் சோர்ந்துபோய்விடுகின்றோம்; இனி நம்மால் வாழ இயலாது என்ற வருத்தமானத் தீர்மானத்திற்குள் வந்துவிடுகின்றோம். நமக்குள் இருக்கும் ஆவியானவரின் உயிரூட்டத்தினை உணர மறந்துவிடுகின்றோம். கிளைகளின் வழியாகவும் மற்றும் இலைகளின் வழியாகவும் மேல் நோக்கி மாத்திரமல்ல, வெட்டப்பட்ட வேர்களிலிருந்து கீழ்நோக்கியும் வளர்ந்து, மீண்டும் அதே இடத்தில் காலூன்றி, நம்மை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்ற நினைவினை இழந்துவிடுகின்றோம். நம்முடைய ஜீவனைக் காக்கும்படியாக, வேரில் வளரவேண்டிய நேரம் என்பதை மறந்து, வெளியில் வெயிலில் காய்ந்துபோய்விடுகின்றோம், வெட்டிவிடப்பட்ட இடத்திலேயே வாடிப்போய்விடுகின்றோம். ஆம், வெட்டப்பட்ட நிலையில் பலரது வாழ்க்கை பட்டுப்போனதற்குக் காரணம், தரையை நோக்கி அவர்கள் திரும்பி வளராததே. ஆம், நம்மை தாங்கி நிற்கும், ஆவிக்குரிய அஸ்திபாரங்களாகிய வேதவாசிப்பு, ஜெபம் மற்றும் உபவாசம் ஆகியவைகளுடன் தேவசமுகத்தை நாடுவோமென்றால், எந்நிலையில் காணப்பட்டாலும் முந்நிலையை அடையமுடியும். 

அத்துடன் மற்றொரு பாடமும் என் சிந்தையைத் தொடர்ந்து தொட்டது. அநேக நேரங்களில் நாம் உயர உயர வளரும்போது, தரையினையும், தரையுடனான தொடர்பினையும் மறந்துவிடுகின்றோம்; முன் நாட்களில், நமக்கு ஊற்றாயிருந்த, துரவாயிருந்த வேதத்திற்கு அதிக இடமளிக்காது போய்விடுகின்றோம். ஆதியில் கொண்டிருந்த அன்பினை விட்டு அகன்று சென்றுவிடுகின்றோம். இத்தகைய நிலையில் நாம் காணப்படுவோமென்றால், எத்தனை உயரத்தில் நமது இலைகள் பச்சைப் பசேலென இருந்தாலும், ஊழியத்தின் பாதையில் உயர்ந்த நிலையில் இருந்தாலும், ஜனங்களால் அதிகம் மதிக்கப்படும் நிலையில் காணப்பட்டாலும், ஆதியில் கொண்டிருந்த அன்பாகிய தரையினை நோக்கி வளரவேண்டியது அவசியம். அந்த காலத்தையும் நாம் தவறவிட்டுவிடுவோமென்றால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை காய்ந்துபோய்விடுவது நிச்சயம். இடையில் வெட்டப்பட்டபோதிலும், பட்டுப்போய்விடாமல் மீண்டும் தரையை நோக்கி வளர்ந்து வேரூன்றி தன் வாழ்க்கையைத் தக்கவைத்துக்கொண்ட அந்த செடியைப்போல நாமும் மாற தேவன் உதவி செய்வாராக; ஆமென்! கீழிருந்து மேல் வளருவது மாத்திரம் வளர்ச்சியல்ல; மேலிருந்து கீழ் வளருவதும் வளர்ச்சியே!




Comments

Popular posts from this blog

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச...

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவ...

உருப்படியான புள்ள!

உருப்படியான புள்ள! தூத்துக்குடியிலுள்ள வங்கி ஒன்றில் எனது மனைவி பெயரில் கணக்கு ஒன்று தொடங்குவதற்காக ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். முந்தின நாளே வங்கிக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, நிரப்பி, புகைப்படம் இல்லாததினால், அடுத்த நாள் காலையில் வங்கிக்குச் செல்லும் வழியில் உடனடியாக ஏதாவது ஸ்டூடியோ ஒன்றில் புகைப்படம் எடுத்து படிவத்துடன் இணைத்துக்கொள்ளலாம் என நினைத்தேன். அடுத்த நாள் வங்கிக்குச் செல்லும் வழியில் ஏதாவது ஸ்டூடியோ இருக்கிறதா என தேடிக்கொண்டே சென்றேன்; அப்பொழுது "JPN Studio உடனடி போட்டோ பிரின்ட் கிடைக்கும்" என்ற போர்டு கண்ணில் பட்டது. அதன் உள்ளே நுழைந்தேன், பெரியவர்கள் ஒரு சிறிய பையன் உட்கார்ந்திருந்தான், அருகே இரண்டு அமர்ந்திருந்தனர். நான் அச்சிறுவனிடம், "போட்டோ எடுக்கனும், உடனே பிரின்ட் வேணும் கிடைக்குமா" என கேட்டேன். அவன் "ஓ கிடைக்குமே" என பதிலுரைத்தான். நான் யார் எடுப்பார்கள்? என கேட்டதற்கு "நான்தான்” அவன் பதில் சொன்னபோது, சற்று வியந்துபோனேன். அப்படியே அவன் என அமர்ந்திருந்த இருக்கையின் உள்ளே எட்டிப் பார்த்தேன். உள்ளே ஒரு கம்ப்யூட்டர் அர...