தூங்கும் தூக்குநூல்
அது ஓர் காலை, டிசம்பர் 2012, கேமரா உடன் கட்டப்பட்டிருக்கும் ஓர் கட்டிடத்தின் மேல் நின்றுகொண்டிருந்தேன். கட்டிடத்தின் மூன்றாம் தளத்தில் நின்று கொண்டு, காலைத் தென்றல் என்னை வருட, காலைப் பொழுதின் அழகிலே எனது கண்கள் சுகம் கண்டுகொண்டிருக்க, மாடியின் மேலே அங்கும் இங்கும் நடைபோட்டுக்கொண்டிருந்தேன். காலைப் பொழுதிலே, உள்ளம் இறைவனைத் தொழுதுகொண்டிருந்தது. ஒரு புறம் உதித்த சூரியனின் வட்ட உடல் கண்களில் பட்டது, ஒளியை அது பெருக்கியபோது என் இமைகள் அதனைக் காணக்கூடாது சுருக்கிக்கொண்டன. வீசிய அதன் வெளிச்சத்தில் சற்று சுற்றிப்பார்த்தபோது, எனது கண்ணில் பட்ட ஓர் இடம். 2005-ம் ஆண்டு சமூக விரோதிகளால் அடிக்கப்பட்டு, நடக்க இயலாது மயங்கிக்கிடந்த இடமது. அதனைக் கண்டதும் என் நினைவு 2005-ம் ஆண்டிற்குப் பயணின்தது, 2012-க்கு மீண்டு வந்தது. அந்த நினைவிலிருந்து மீண்ட எனக்கு மீண்டும் ஓர் காட்சி.
கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டிடத்தின் ஒரு தூணில் இரண்டு தூக்கு நூல்கள் தொங்கிக்கொண்டிருந்தன. அன்றைய பணியை முடித்துவிட்டு பணியாளர் அவசர அவசரமாக தொங்கும் இடத்திலேயே அதனை விட்டுச் சென்றிருந்தார். எனினும், தொங்கிக்கொண்டிருந்த அந்த தூக்கு நூலில் ஒன்று தன் வேலையைச் செய்துகொண்டிருந்தது. நேராகத் தொங்கி, அங்கும் இங்கும் சற்று அசைந்து அந்த தூண் நேராகக் கட்டப்பட்டிருப்பதைக் காட்டிக்கொண்டிருந்தது. கட்டப்பட்டுவரும் தூணைச் சரிபார்க்க, அதனைத் தூக்கிப் பார்த்தவர் அப்படியே விட்டுவிட்டாலும், வந்தவருக்கெல்லாம் அது சரியாகத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்ற செய்தியினை தொங்கிக்கொண்டிருந்த தூக்குநூல் தெரிவித்துக்கொண்டிருந்தது. யாரோ ஒருவர் உபயோகிக்கும்போது, நேர்மையாக, நல்லவராக, சரியாக, வேதத்திற்கு ஒத்தவராக வாழ்ந்துவிட்டு, தானாக தொங்கும்போது வாழ்க்கையில் நேர்மையின்றி வாழும் மனிதர்களுக்கான பாடமாக இதனைப் பார்த்தேன். ஆலயத்திற்குள் செல்லும்போது, கூட்டங்களுக்குச் செல்லும்போது, ஊழியர்களுடன் பழகும்போது, ஊழியம் செய்யும் போது, பிரசங்கம் செய்யும்போது வேதத்திற்கு ஒத்தபடியே தொங்கும் பலரது தூக்குநூலான வாழ்க்கை, தனிப்பட்ட விதத்திலும் யாருமில்லாத நேரத்திலும், யாரும் நடத்தாத நேரத்திலும், கண்காணிக்காத நேரத்திலும் சரியாகத் தொங்கவேண்டும்; இல்லையேல் அது இரட்டை வேட வாழ்க்கை.
அந்தத் தூக்குநூலைப் பற்றி இத்தனை அறிவை இறை உணர்த்தலால் பெற்ற எனக்கு, அந்தத் தூணின் மறுபுறமே மற்றொரு பாடத்தினைக் கற்றுக்கொடுக்கக் கர்த்தர் காத்திருந்தார். ஆம், அந்தத் தூணின் மறுபுறத்திலேயே மற்றுமொரு தூக்குநூல் எனது கண்ணில் தென்பட்டது. அது தூணைச் சுற்றி அடிக்கப்பட்டிருந்த பலகைகளுக்குள் சிக்கிக்கொண்டிருந்தது. சிக்கிக்கொண்டிருந்ததால், பணியை முடித்துச் சென்றவருடன், இதன் பணியும் முடிவடைந்திருந்தது. இவ்விரண்டினையும் ஒப்புமைப்படுத்திப் பார்த்த எனக்கு ஓர் ஆவிக்குரிய பாடம் ஆயத்தமாயிருந்தது. இரண்டாவது தூக்குநூலைப் போல உலகத்தில் சிக்கிக்கொண்டால், நேர்மையைக் காட்டவேண்டியவர்களே மாட்டி;ககொண்டால், உலகை அடையாளம் காட்டவேண்டியவர்களே அகப்பட்டுக்கொண்டால் என்னவாகும்? நேராய் தொங்கிக்கொண்டேயிருக்கவேண்டியவர்கள் தூங்கிவிட்டால், நேர்மை எப்படித் தெரியும்? சிக்கிக்கொள்ளாத ஒரு மனிதன், தனிமையில் நேராகவும், நேர்மையையே காட்டுகிறவனாயும் இருப்பான் என்பதே அப்பாடம். நீ தொங்கும் தூக்குநூலா, தூங்கும் தூக்குநூலா?
இப்படியும் இறைவன் நடத்திய காலைத் தியானம், அது அவர் ஞானம்.
Comments
Post a Comment