விறகுக்குள் வாழ்க்கை!
அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு உடன் ஊழியர் ஒருவருடன் நடந்து வந்துகொண்டிருந்தேன். வீடு அடைய இன்னும் சற்று அடிகள் தொலைவே, அப்போது என் கண்ணில் பட்டது ஓர் மரம். எங்குமே இலைகளோ, பசுமையோ காணப்படாத நிலையில், இடையில் மட்டும், தாய் இடுப்பில் குழந்தையைச் சுமந்து நிற்பது போல பசுமையான இலைகளைச் சுமந்து நின்றது கண்டு ஆச்சரியமாயிற்று எனக்கு. அந்த மரத்தின் கீழே இருக்கும் படரும் செடி கொடிகள் இந்த பட்ட மரத்தின் மேல் பச்சை ஆடையாய் படர்ந்திருக்கும் என நினைத்தேன். நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்ற (யாத் 3:3) மோசேயைப் போல, மரத்தின் அருகே சென்று பார்க்க விழைந்தேன், மரம் இருந்த வேலிக்குள் நுழைந்தேன்.
அருகே சென்று பார்த்தபோது அப்படி ஏதும் படரும் செடிகளோ, கொடிகளோ காணப்படவில்லை. மேலும், முற்றிலும் பட்டதாய் முன்நாட்களில் காட்சியளித்த இந்த மரத்தின் அடியிலிருந்து மூன்று இடங்களில் இடை இடையே இப்படித் துளிர் தோன்றியிருந்தது. அது அந்த மரத்தின் இயற்கையான பண்பாக இருந்திருக்கலாம், எனக்கோ அன்று புதிதாய் தெரிந்தது. ஆச்சரியமாய்ப் பார்த்து, படம் எடுத்துக்கொண்டு அவ்வளவுதான் என்று வீடு திரும்பிய எனக்கு பரமனின் பாடம் தொடங்கியது.
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும் (ஏசா 11:1) என்ற பரிசுத்த வேத்தின் வசனத்தை அப்போது எனக்கு ஞாபகப்படுத்தினார் ஆண்டவர். ஈசாயின் அடிமரத்திலிருந்து, ஒடுக்கப்பட்டிருந்த ஈசாயின் வம்சத்திலிருந்துதானே இயேசு பிறந்தார். அவர் அடிமரத்திலிருந்து தோன்றிய துளிர். அவராலேயே தேவனின் ராஜ்யம் இந்தப் பூமியில் செழித்தது. இன்றும், இன்னும் வளர்ந்துகொண்டே, படர்ந்துகொண்டேயிருக்கிறது. ஜனங்கள் இரட்சிக்கப்பட்டார்கள், சுகம் பெற்றார்கள், விடுதலை பெற்றார்கள், வாழ்வு பெற்றார்கள். சிலுவையில் அன்று அடிக்கப்பட்டதால் பட்டுப்போயிற்று என்று நினைத்த மரத்திலிருந்துதானே இன்று ஆத்துமாக்கள் பழுத்துக்கொண்டிருக்கின்றன.
முழுவதும் அழிந்துபோயிற்று என்று எண்ணப்பட்ட, காணப்பட்ட, நசுக்கப்பட்ட, அடிமரத்திலிருந்து வந்த துளிராகவே ஈசாயின் அடிமரத்திலிருந்து தோன்றியவரே இயேசு . வெளியே வெட்டி விட்டு வேரைத் தொட்டுவிட பெலனற்றவன், வெளியே நம்மைக் காயப்பண்ணினாலும், உள்ளத்திலிருக்கும் ஈரத்தை ஒன்றும் செய்ய இயலாதவன், வெளியிலே ஜனங்களுக்கு பட்டமரம்போல காட்சியளிக்கச் செய்பவன்; என்றாலும் , நமக்கு உள்ளே இருக்கும் ஈரம் வெளிவரும் நாள் வரும்; கர்த்தர் உடனிருக்கிறாரே, கவலை ஏன்? கண்ணீர் ஏன்? உடலில் பெலனில்லாவிட்டாலும், தமது தோளில் நம்மைத் தூக்கிச் சுமக்கும் தேவனல்லவா அவர்.
தோற்றத்தைக் கண்டு, நிலமையைக் கண்டு ஒதுக்கப்படும் மனிதர்கள், தேவனால் ஒதுக்கப்பட்டவர்களல்ல. அப்படிப்பட்ட மனிதர்களை ஆவிக்குரிய உலகத்தின் மாந்தராகிய நாம் ஒதுக்கிவிடக்கூடாது, அவர்களுடனான உறவுகளை வெட்டிவிடக்கூடாது. 'பட்ட மரம்' எனப் பட்டம் சூட்டிவிடக்கூடாது. இலைகளோடு அழகாய் காட்சி தந்து, கனிகளின்றி சாபமேற்கும் சாலை ஓர மரங்களும் உண்டு; வெளியிலே பச்சையாயிருந்து, உள்ளே இறைவனின் எவ்வித ஈரமுமின்றி பட்டுப்போய்க் கிடக்கும் மனிதர்கள் உண்டு. அப்படியே, பட்டதாய் தெரிந்தும், உள்ளிருக்கும் ஈரத்தால் பசுமையாகி, பட்டதை வெல்லும் மரங்களும் உண்டு; மனிதர்களும் இப்படியே. ஒடுக்கப்படும் ஊழியர்களும், ஊழியங்களும் வளருவதற்கு காரணம் இதுவே. இந்த மரம் நல்லதோர் பாடமல்லவா!
எனவே, இயேசு, தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாதிருங்கள் (யோவான் 7:24) என்றார். எந்த ஒரு மனிதனின் பட்டுப்போன வாழ்க்கையைக் கண்டோ, நிலயைக் கண்டோ தீர்ப்பு செய்வது நம்முடையதல்ல. பட்டதாய்த் தோன்றும் மனிதனுக்குள் இருக்கும் ஈரமும், உள்ளடங்கியிருக்கும் பசுமையான வீரமும் வெளிவரும் காலம் வரும். மற்றவர்கள் விறகாய் நினைக்கும் உனக்குள் வாழ்க்கை உண்டு. அடுத்த அரசனைத் தெரிவு செய்ய சாமுவேலை அனுப்பிய கர்த்தர், அவனை நோக்கி நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரிர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.(1சாமு 16:7) விறகு என நினைத்து, உள்ளே வாழும் மனிதனையும் உயிருடன் கொழுத்திவிடும் மனிதர்கள் நிறைந்த உலகம் இது.
இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவ னுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது. (1கொரி 1:25)
பட்ட மரம் என வெட்டிவிடாதே
பசுமை இருக்கும் பார்க்கத் தெரியாதே
வெட்டிய பின்னர் ஈரம் தெரியும்
வீரம் அப்போது கொலையாய் மாறும்
நீ விறகாக நினைப்பவைக்குள் வாழ்க்கையிருக்கும்
விறகென நினைத்து மனிதனையும் கொழுத்திவிடாதே
Comments
Post a Comment