என்னைத் தேடிய மணவாளன்
(அனுபவத்தில் கிடைத்த ஆண்டவரின் செய்தி)
10 அக்டோர் 2021, நேற்று (9 அக்டோபர்) எனது மனைவியின் பிறந்த தினம்; முந்தின சில நாட்கள் வரையில் அதனை மனதில் வைத்தவனாகவும், மனைவி விரும்பும் புடவையினை முன்கூட்டியே ஆன்லைனில் ஆர்டர் செய்து கொடுத்தவனாகவும் ஆயத்தமாயிருந்த நான், பிறந்த நாள் அன்று காலை எழுந்ததும் அதனை முற்றிலும் மறந்துவிட்டேன். பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் மனைவியும் மிகவும் அவசரமாகக் காணப்பட்டாள். சுமார் 11 மணி அளவில் உறவினரிடமிருந்து எனக்கு வந்த தொலைபேசியில் 'பிரிஸ்கில்லா இல்லையா' என்று என்று கேட்டார் அவர். 'என்ன எதுவும் சொல்லவேண்டுமா?, என்ன விஷயம் என்று கேட்டேன்'; அதற்கு அவர், வாழ்த்தலாம்னு நினைத்தேன் என்றார்; 'எதற்கு வாழ்த்துதல்?' என்று யோசித்தவாறே 'மறந்துபோச்சே' என்று அவரிடத்தில் சத்தமாக அலறினேன். 'நீங்க மறக்கலாமாண்ணே' என்று சொல்லிவிட்டு, 'பிரிஸ்கில்லா ஸ்கூலிலிருந்து வந்ததும் பேசுறேன்' என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். 'மணவாட்டியின் பிறந்தாள் மணவாளனுக்கே மறந்துபோயிற்றே' என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
அவர் போனை வைத்ததும் அவசர அவசரமாக, WhatsApp ல் மனைவிக்கு ஏதாவது வாழ்த்து அனுப்பலாம் என்று youtube -ல் video -வை download செய்ய நினைத்தபோது, அதனை download செய்ய நான் உபயோகப்படுத்தின App-ஐயோ நான் கைபேசியிலிருந்து delete செய்திருந்தினால், அதனையும் சீக்கரமாகச் செய்ய இயலாமல் சிக்கலையே சந்திக்க நேரிட்டது. அவள் பள்ளி முடிந்து வரும்போது 'Happy Birthday to you' என்ற பாடலைப் போடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்; அதற்குள் அடுப்பங்கறையில் சிலவற்றை செய்வோமே என்ற ஆசை உண்டாக அதனைத் தொடர்ந்தேன். பள்ளி முடிந்து, அவள் வீட்டின் உள்ளே நுழைந்ததும், கதவு திறக்கும் சத்தத்தைக் கேட்டதும், 'யப்பா, இன்னைக்கு உனக்கு பிறந்த நாள்ல, Happy Birthday' என்று சட்டென சரண்டர் ஆகிவிட்டேன். வட இந்தியாவில் பூஜை நாட்களாயிருந்தபடியினால், பிறந்த நாளன்று விசேஷமாக எதுவும் சமைக்க இயலவில்லை; ஏற்கனவே பிரிஜ்-ல் இருந்த கொஞ்ச சிக்கனை மட்டும் எண்ணெயில் பொறித்து வைத்திருந்தேன்; அவ்வளவுதான்.
எப்படியோ பிறந்தநாள் பக்குவமாக முடிந்துவிட்டது என்று மனதுக்குள் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தபோது, இரவு சுமார் 10 மணிக்கு ஒரு குடும்பம், கணவன் மனைவி மற்றும் பிள்ளைகளாக எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவைத் திறந்து, என்னவென்று பார்க்க விழைந்தபோது, அவர்களோ 'பிறந்தநாள் கேக்' உடன் வீட்டின் உள்ளே நுழைந்தனர். அவர்களது இச்செயலைக் கண்டதும், 'நாங்க எதிர்பார்க்கவில்லையே' என்று நாங்கள் சொன்னபோது, பதிலாக, 'திருடன் வருகிற விதமாக நாங்கள் வந்திருக்கிறோம்' என்ற வார்த்தையினை உபயோகித்தனர் அவர்கள். ஒருவழியாக, இரவு சுமார் 10:30 மணிக்கு கேக் வெட்டி, பிறந்தநாளை பின் இரவில் கொண்டாடி புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டோம். என்றாலும், 'திருடனைப் போல வந்திருக்கிறோம்' என்ற அவர்களது வார்த்தை எனது மனைவியின் மனதில் அழுத்தமாக அப்போது பதிந்துவிட்டது.
மறுநாள், 10 அக்டோபர் 2021 அன்று ஞாயிறு ஆராதனைக்கு குடும்பமாகச் சென்றிருந்தோம். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆலய ஆராதனையினை நடத்திக்கொண்டிருந்தார். 'விலையேறப்பற்றவர்களாகிய நாம் காட்சிப்பொருட்களாக அல்ல; நம்மைப் பயன்படுத்துவோரின் கைகளில் பிறருக்காக பயன்படவேண்டும்' என்ற பிரதானதோர் சத்தியத்தினையும்; அதனைத் தொடர்ந்து, 'வெவ்வேறு நிலைகளில் தேவன் கையாளும் வெவ்வேறு வழிமுறைகளையும்' செய்தியாக விளக்கிக்கொண்டிருந்தார். செய்தியின் இடையிடையே 'தேவன் ஏன் இப்படி செய்கிறார்?' என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, 'தெரியாது' 'தெரியாது' என்று தனது இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தினவராக விரல்களையும் விரித்து அவர் நின்ற காட்சி இன்றும் என் கண்விழித் திரைகளில் நிறைந்தே நிற்கிறது. அதுமாத்திரமல்ல, ஒருமுறை வேண்டிய பணத்தை கர்த்தர் கொடுத்ததையும், மற்றொருமுறை வேண்டுமென்றே கால்கடுக்க நடக்கவிட்டதையும் கூடவே பகிர்ந்துகொண்டது, அவரது ஆரம்பகால ஊழிய நினைவுகளை மீண்டும் ஒருமுறை என் மனதில் பசுமையாக்கியது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருவிருந்தில் நான் பங்கேற்று இருப்பிடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, என்னுடைய மகன் ஜான் சாமுவேல் என்னை நோக்கி 'அப்பா, ஆன் லைனில் ஆர்டர் செய்த பார்சல்' வந்திருக்கிறது, வாங்க என்று என்னைக் கூப்பிட்டான். ஆராதனை நடந்துகொண்டிருக்கின்றதே, இடையில் எப்படி வருவது என்று சற்று முணுமுணுத்துக்கொண்டிருந்தேன்; ஏனென்றால், ஆராதனை நடந்துகொண்டிருக்கும்போது இடையில் எழுந்து செல்லுவதை ஒருபோதும் விரும்பாதவன் நான்; அவ்வாறே, ஆராதனையின் முடிவில் ஆசீர்வாத ஜெபம் கூறும் முன் எழுந்து செல்லுவதை, 'விருந்தின்போது, பாயாசம் ஊற்றும் முன் இலையை மூடிவிடாதீர்கள்' என்று கூறுபவன் நான். ஏனென்றால், ஆலயத்திற்குச் செல்லும்போது சட்டமாக என் தாயார் சிறுவயதிலிருந்து எனக்கு அணிவித்து விடும் சட்டை அது. பிரங்கம் விளங்கவில்லையென்றாலும் பிரசங்கியாரைப் பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும், கீழே குனிந்து இருக்கக்கூடாது; குனிந்து இருந்தால், பேப்பர்-ல் எதையோ எழுதி விளையாண்டுகொண்டிருக்கிறான் என்று நினைத்துவிடுவார்கள். எனவே, எனது இச்செயல் எனது விருப்பத்திற்கு விரோதமானதாக நினைத்து சற்று தரித்து நின்றுகொண்டிருந்தேன். ஆனால், எனது மகனோ, 'அவர் வெயிட் பண்ணுறார்; வாங்க' என்று என்னை அவசரப்படுத்த, ஆராதனை முடியவில்லை என்பதால் வேதத்தை ஆலயத்திலிருந்து தூக்கிச் செல்ல மனதற்றவனாக, நான் இருந்த இருக்கையிலேயே வேதத்தை வைத்துவிட்டு, சீக்கிரத்தில் வந்துவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு புறப்பட்டுச் சென்றேன்.
பார்சலை வாங்கிவிட்டு, கைபேசி மூலமாக பணத்தை செலுத்த பலமுறை முயற்சிக்கையில், PhonePe -ல் 'payment fail' 'payment fail' என்றே வந்துகொண்டிருந்தது. வேறு வழியின்றி, வீட்டிற்குச் சென்று பணத்தை எடுத்துவந்து கொடுத்தேன்; பார்சல்காரரோ சில்லரை இல்லை என்று சொல்ல, எனது மகனிடம் அருகிலிருந்த கேன்டீனுக்குச் சென்று ஏதாவது வாங்கிவிட்டு சில்லறை கொண்டுவரச் சொன்னேன். சில்லரை கிடைத்ததும், பணத்தைக் கொடுத்து பார்சர்காரரிடமிருந்து விடைபெற்று ஆலயத்தை நோக்கி நடந்தேன்; அதற்குள் ஆராதனை முடிந்துவிட்டது; எல்லோரும் வெளியே வந்துகொண்டிருந்தார்கள். எனது வேதாகமத்தை எடுக்கவேண்டுமே என நான் நினைத்தபோது, எனது மகனோ, அம்மா எடுத்துட்டு வந்துருவாங்க என்றான். வேறு வழியின்றி வழியில் நின்றுகொண்டிருந்தேன். மனைவி மகள் வந்ததும், மகனை வடை வாங்கி வரச் சொல்லி வழியில் நின்றவாறு தின்றுகொண்டிருந்தேன். அப்போது அவ்வழியே வந்த சகோதரி ஒருவர், 'அண்ணன் முடிவு ஜெயம் பண்ண உங்களை தேடினார்' என்று சொல்ல, எனது உணர்வலைகள் உள்ளத்திலே என்னைத் தூக்கிவாரிப்போட்டுவிட்டது. உள்ளே மணவாளன் தேட, மணவாட்டியாகிய நானோ வெளியே நின்று வடை சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேனே என நினைத்து நொந்துகொண்டேன். உடனே மனைவியுடன் வீடு வந்தடைந்தேன்.
வீட்டினுள் நுழைந்து, மனவருத்தத்தை மனைவியிடம் பகிர்ந்துகொண்டபோது, அவள் என்னை நோக்கி, 'நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்' (மத் 24:44) என்ற வசனத்தை நேற்றுமுதல் தேவன் தனக்கு ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கிறார் என்று கூறினாள். ஆம், இன்று எனது சிந்தையில் நின்றுகொண்டேயிருப்பது இந்த வசனம்தான்! இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை உணர்த்தும் இந்த வசனம் வித்தாகவே என் உள்ளத்தில் விதைக்கப்பட்டுவிட்டது.
Comments
Post a Comment