அக்டோபர் 21, 2022, குளிர்காலத் தொடக்க நாட்களின் கருக்கலாகிக்கொண்டிருந்த மாலை நேரம், என்னுடைய வீட்டிற்கு வருகை தந்திருந்த எனது மனைவியின் வாலிபத் தோழிகளான சக ஆசிரிய ஊழியர்களை, அவர்கள் தங்கியிருந்த ஜெம்ஸ் பள்ளி மாணவர்கள் விடுதி வரைச் சென்று விட்டு விட்டு வரும்படியாக எனது மனைவி, மகளுடன் சென்றுகொண்டிருந்தோம்; எங்களுடன், எங்களது வீட்டின் அருகே தங்கியிருக்கும் மற்றொரு சக ஊழிய சகோதரியும் தனது பன்னிரெண்டாம் வகுப்பினை நிறைவுசெய்திருக்கும் மகளுடன் வந்திருந்தார். தோழிகளை அவர்களது வசிப்பிடத்தில் விட்டு விட்டு, சக ஊழியரான சகோதரி மற்றும் அவரது மகளுடன் நானும் எனது மனைவியும், உரையாடிக் கொண்டே வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது, பன்னிரெண்டாம் வகுப்பினை நிறைவு செய்திருந்த அந்த சக ஊழியச் சகோதரியின் மகளை நோக்கி, 'என்னம்மா, என்ன படிக்கப் போற? வானத்துக்கு ஏறணும்னு திட்டம்போட்டாத்தான், பூமியிலையாவது உட்கார முடியும்; அதனால, உயர்ந்ததா படிக்க யோசி' என்று ஆலோசனை சொன்னேன் நான். ஆலோசனையின் வாக்கியத்தை முடித்ததும், பின்னிட்டுப் பார்த்தபோது, மிக அருகில், சகோதரர் ஒருவர் தனது மனைவியுடன் நடந்து வந்துகொண்டிருந்தார். அவரைக் கண்டதும், சிரித்தவாறு, விசாரித்த நான், 'அந்த மாணவிக்கு என்ன ஆலோசனை சொன்னேன் என்பதை மீண்டும் அவரிடத்தில் சொல்லியவாறு நடந்தவனாக வீடு வந்தடைந்தேன்.
இரவு சுமார் 11:10 மணி, படுக்கையில் உடல் அசதியாகவும், அமைதியாகவும் கிடந்தபோதிலும், சிந்தனையோ சிதறிக் கிடந்தது. உறக்கம் வர அதனை மீண்டும் ஒன்றிணைப்பது என்பது இயலாததாகவே தோன்றிக்கொண்டிருந்தபோது, அந்த நாளில் நடைபெற்ற நிகழ்வுகளில், நினைவில் நிற்பவைகளை அசைபோடத் தொடங்கியது என் மனது. அப்படி அசைபோட்டுக்கொண்டிருந்த தருணத்தில், திடீரென அசையாமல் நின்றபோது, 'உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே; தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?' (பிரசங்கி 5:6) என்ற வசனத்தோடு, 'நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்' (ஏசாயா 14:13-15). 'நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்' (ஒபதியா 1:4) என்ற தேவன் ஞாபகமூட்டிய வசனங்கள், நான் தவறிய தருணத்தை நினைவறியச் செய்தன.
'வானத்துக்கு ஏறணும்னு திட்டம் போட்டாத்தான், பூமியிலையாவது உட்கார முடியும்' என்று அந்த மாணவிக்கு ஆலோசனையாக நான் கூறிய வார்த்தைகள், 'வானம் எனக்குச் சிங்காசனம்' (ஏசாயா 66:1) என்ற வசனத்திற்கு விரோதமானதாகவும், 'நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்' என்று சொன்ன தள்ளப்பட்டுப்போன தூதனுடைய வார்த்தைகளுக்கு ஒத்திருப்பதையும் உணந்து, ஆண்டவரிடத்தில் அறிக்கை செய்தேன். அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத்தேவன் பகிர்ந்தவிசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும் (ரோமர் 12:3) என்ற செய்தியும், மெல்லிய சத்தமாய் என் மனதை வந்து சேர்ந்தது. உள்ளத்தில் இருக்கும் உணர்விற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தினேன்; எனது உதறிய உதடு, சிதறிய சிந்தனை, தவறிய பாதையினைப் புரிந்துகொண்டேன்; தூரத்திலிருந்த நித்திரை என்னை தூளிலேற்றிக்கொண்டது.
Comments
Post a Comment