இரண்டு மன்னர்கள்
குடும்பமாகச் சுற்றுலா சென்றிருந்தோம், கன்னியாக்குமரி, திற்பரப்பு அருவி, பத்மநாதபுரம் அரண்மனை என்பது எங்களது பயண வரிசை. அதனைத் தொடர்ந்து, அலுவலக கூடுகைக்காகக் குன்னூர் சென்றிருந்தோம். இந்த பயணங்களின்போது, மறக்க இயலாது எனது நெஞ்சில் நின்ற இரண்டு மனிதர்களைப் பற்றிய கட்டுரை இது.
பத்மநாதபுரம் அரண்மனையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கடைசியாக களைப்புடன் வெளியேறும் வழியில் வந்துகொண்டிருந்தோம். சற்று இளைப்பாறலாம் என தோட்டத்தை ஒட்டிய அரண்மனையின் உட்புற படிக்கட்டு ஒன்றில் குடும்பத்தினரோடு அமர்ந்தோம். அப்பொழுது வயதான ஒரு நபர் அவ்வழியே உள்ளே நுழை வாசலின் வழியே வந்துகொண்டிருந்தார். கையில் இரண்டு பைகள், சட்டை லுங்கி அணிந்திருந்தார். அவர் படியில் ஏறி உள்ளே நுழையும்போது, அங்கு அமர்ந்திருந்த எங்களது குடும்பத்தின் சின்னஞ்சிறு மொட்டுக்களைப் பார்த்துச் சிரித்தார்; அவர் யார்? என்பதை அறியாத குழந்தைகள் பதிலுக்குப் பாசம் தரத் தயங்கியதை நான் உணர்ந்துகொண்டேன். பின்னர் என்னிடத்தில், 'இது உங்க பிள்ளைகளா?' என்று கேட்டார். நானோ, எனது மகனை மட்டும் காட்டி, இவன்தான் என்னுடைய பையன், இவர்கள் எனது குடும்பத்தின் பிள்ளைகள் என அடையாளம் சொன்னேன். நீங்க யாரு? என நான் கேட்க, நான் இங்கே வேலை செய்கிறவங்களுக்கு டீ போட்டு கொண்டுவந்து கொடுப்பேன், டீ குடிக்கிறீங்களா? என கேட்டார். பலர் இருப்பதால் பரவாயில்லை என்றேன் நான். அந்த முதியவரின் புன்சிரிப்பும், அளவளாவலும், விசாரித்துப் பேசிய விதமும் மற்றும் குழந்தைகளோடு கொஞ்ச முற்பட்டதும், அரண்மனையில் எங்களுக்குக் கிடைத்த அற்புதமான ஓர் வரவேற்பு. பத்மநாதபுரம் அரண்மனையில் இன்று அவர்தான் மன்னர் என என் உள்ளம் ஒத்துக்கொண்ட நேரம் அது. நினைவில் நின்ற அவரை எனது குடும்பத்தினருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
ஜெம்ஸ் ஸ்தாபனத்தின் கூடுகை ஒன்றில் பங்கேற்பதற்காக குன்னூர் சென்றிருந்தேன். இரண்டு நாட்கள் கிறிஸ்த விடுதி ஒன்றில் தங்கியிருந்தேன். நல்ல உணவுகள் கிடைத்தன, சுவையாகவும் இருந்தன. நான் சுவைத்து உண்ணும் இந்த உணவின் சமையலுக்குச் சொந்தக்காரர் யார்? என்பதை அறிய எனது மனம் விரும்பியது. அப்படியே, ஒருநாள் காலையில் உணவினை உட்கொண்ட பின்னர், சமையல் அறைக்குள் நுழைந்தேன் நான். சிறிய அறை அது; யார் சமைக்கிறார்கள் என அங்கே விசாரித்தேன்; உடனே, நான்தான் என்று ஒரு முதியவர் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார். சாப்பாடு நன்றாக இருக்கிறது, அதனால சமைக்கிறது யாருன்னு பார்க்க ஆசைப்பட்டேன் அதான் வந்தேன் என்றேன் அவரிடம். அவர் வாங்க என பாசத்தோடு என்னை அழைத்ததோடு, என்னை சமையலறையில் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அச்சமயம் அவரைப் பற்றி சற்று விசாரிக்கத் தொடங்கினபோது, அவர் என்னிடத்தில்...
என் பெயர் கோபாலகிருஷ்ணன், பாரம்பரிய பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். சுமார் இருபது ஆண்டுகளாக மைசூர் அரண்மனையில் சமையல்காரராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அச்சமயத்தில், இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நிம்மதி இல்லாமல் வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதும் நிம்மதி கிடைத்ததால், தொடர்ந்து அவரை உறுதியாகப் பற்றிக்கொண்டேன். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னர், எனது பெயரை லாரன்ஸ் என மாற்றியிருக்கிறேன். எந்த ஆலயத்திற்குச் செல்வது என்பதை அறியாதிருந்ததினால், அருகிலிருந்த ரோமன் கத்தோலிக்கக் கோவிலுக்குச் செல்லத் தொடங்கினேன். இங்கே நான் ஒருவனாகத்தான் சமைக்கிறேன் என்றார். சபைகளின் வித்தியாசத்தைக் கூட அப்போது அவர் சரியாக அறிந்திருக்கவில்லை; ஆனால், இயேசு கிறிஸ்துவை அறிந்திருந்தார். அவருடனான உரையாடலில், அவர் யாருடைய வற்புறுத்துதலின் பேரிலும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. தானே தேடி கண்டுபிடித்துக்கொண்ட தாகம் அவரது தொனிகளில் தென்பட்டது. தானாக நிம்மதியின் வழியினைத் தேடி அறிந்துகொண்டாலும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவில் இன்னும் சரியாக நடத்தப்படவில்லை என்பதை நான் அறிந்துகொண்டேன். பதினைந்து ஆண்டுகளாக அங்கு சமைத்துக்கொண்டிருக்கும் அவரது உணவினைச் சுவைத்திருப்பவர் பலர்; ஆனால், அவரது வாழ்வுக்கு சுவையூட்ட ஒருவர் தேவை என்று உணர்ந்த நான், என்னையும் ஒரு மிஷனரியாக, கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவனாக அறிமுகப்படுத்திக்கொண்டு, அவருடனும் ஆவிக்குரிய சில காரியங்களைப் பகிர்ந்துகொண்டு, பாசத்துடன் விடைபெற்றேன். அவரது உணவினால் திருப்தியான நான், எனது வார்த்தைகளால் அவரை திருப்திப்படுத்தின தருணம் அது. அந்த சமையலறையில் அன்று அவருக்கு நான் சமையல்காரன்.
பல நேரங்களில் சுவைமிக்க பலவற்றிற்குச் சொந்தமானவர்களை நாம் மறந்துவிட்டு, உணவை மட்டும் சுவைத்துவிட்டு வந்துவிடுகின்றோம். நமது வாழ்க்கைக்குச் சுவையூட்டும் சொந்தக்காரர்களை நாம் அடையாளம் கண்டிருக்கிறோமா? அவர்கள் யார் என தெரியுமா? அவர்களை வாழ்த்தியிருக்கிறோமா? எத்தனையோ பேர் அவ்வப்போது வாழ்வில் இடையே வந்துநமக்கு மணமூட்டி மகிழவைக்கின்றனரே, அவர்களைக் குறித்த அறிமுகம் அவர்களது முகத்தை மலரச் செய்யும்.
Comments
Post a Comment