முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'வாழ்க்கைக்கு வழக்கு'


 

www.sinegithan.in


அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன். 

சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே, அந்தக் குழந்தை தவழுவதைப் பார்த்து ரசித்தவராகத்தான் நின்றுகொண்டிருந்தார். அந்த குழந்தை நிச்சயம் அவருடையதுதான் என்பதை உறுதி செய்துகொண்ட நான், அவரை நோக்கி, 'ஐயா, கடையில் தரைப்பகுதியில் அனைவரும் காலணிகள் அணிந்து நடந்துசெல்லுவார்கள்; எனவே, குழந்தையின் உடல் அசுத்தமாகும்' என்று சொல்ல, எனது வார்த்தைகள் முடியுமுன், அந்த முதியவர் சற்றும் யோசிக்காமல் மறுமொழியாக என்னை நோக்கி, 'மிட்டி சே ன ஆயா, பகலே மிட்டி மே சல்னே தீஜியே' (மண்ணிலிருந்துதானே வந்தான், மண்ணிலே முதலில் நடக்கட்டும்) என்றார். அந்நிய கடவுளை வணங்கும் அந்த மனிதரின் வாயிலிருந்து வந்த இந்த அழகான வார்த்தைகள் சில நிமிடங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், அந்த முதியவரைத் தொடர்ந்து 'மண்ணைத் தாண்டி மறுவுலகு இருக்கிறது' என்று ஆவியானவர் பேசினபோது, 'அந்த முதியவரின் பார்வை மண்ணிலிருந்து மண்ணை நோக்கியதே' என்பதை எனக்கு புரியவைத்தது. 'மண்ணாக, மண்ணிலிருந்துகொண்டு, மண்ணை நோக்கியே ஓடும் மக்கள்' இன்றைய நாட்களிலும் அநேகர் உண்டே.  

மண்ணினாலே நாம் உருவாக்கப்பட்டிருந்தாலும், மண்ணான உடலிலே உயிராக இந்த உலகிலே நாம் உலாவிக்கொண்டிருந்தாலும், நம்முடைய வாழ்க்கை மண்ணுக்குரியது மட்டுமல்ல. தண்ணீரைக் கொண்டுசெல்ல பாத்திரம் ஒன்று தேவை என்பதுபோல், நம் உயிரைச் சுமந்துசெல்லும் பாத்திரமே நமது உடல். தண்ணீரைக் குடித்ததும், பாத்திரத்தைத் தரையில் வைத்துவிடுவதுபோல், வாழ்க்கையை வாழ்ந்து முடிந்ததும், உடலை வைத்துவிட்டுத்தான் போகவேண்டும் நாம். வாகனத்தை இயக்க எரிபொருள் தேவை என்பதுபோல், உடலை இயக்க உள்ளே இருப்பதுதானே உயிர். எரிபொருளை இறைவன் எடுத்துக்கொண்டதும், எருவாகிப்போகுமே உடல்; என்றாலும், வாகனமும் (உடலும்), எரிபொருளும் (உயிரும்) ஒன்றாக இருக்கும்போது; வாகனத்தைக் கொண்டு நாம் செய்த செயல்களே, 'நமது வாழ்க்கையாகத் தீர்க்கப்படும்'. அந்த வாழ்க்கைக்குத்தான் வழக்கு; அதுதான் 'நியாயத்தீர்ப்பு'.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச...

உருப்படியான புள்ள!

உருப்படியான புள்ள! தூத்துக்குடியிலுள்ள வங்கி ஒன்றில் எனது மனைவி பெயரில் கணக்கு ஒன்று தொடங்குவதற்காக ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். முந்தின நாளே வங்கிக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, நிரப்பி, புகைப்படம் இல்லாததினால், அடுத்த நாள் காலையில் வங்கிக்குச் செல்லும் வழியில் உடனடியாக ஏதாவது ஸ்டூடியோ ஒன்றில் புகைப்படம் எடுத்து படிவத்துடன் இணைத்துக்கொள்ளலாம் என நினைத்தேன். அடுத்த நாள் வங்கிக்குச் செல்லும் வழியில் ஏதாவது ஸ்டூடியோ இருக்கிறதா என தேடிக்கொண்டே சென்றேன்; அப்பொழுது "JPN Studio உடனடி போட்டோ பிரின்ட் கிடைக்கும்" என்ற போர்டு கண்ணில் பட்டது. அதன் உள்ளே நுழைந்தேன், பெரியவர்கள் ஒரு சிறிய பையன் உட்கார்ந்திருந்தான், அருகே இரண்டு அமர்ந்திருந்தனர். நான் அச்சிறுவனிடம், "போட்டோ எடுக்கனும், உடனே பிரின்ட் வேணும் கிடைக்குமா" என கேட்டேன். அவன் "ஓ கிடைக்குமே" என பதிலுரைத்தான். நான் யார் எடுப்பார்கள்? என கேட்டதற்கு "நான்தான்” அவன் பதில் சொன்னபோது, சற்று வியந்துபோனேன். அப்படியே அவன் என அமர்ந்திருந்த இருக்கையின் உள்ளே எட்டிப் பார்த்தேன். உள்ளே ஒரு கம்ப்யூட்டர் அர...