எதைத்
தெரிந்துகொள்வது?
செப்டம்பர் 30, சனிக்கிழமை மாலை 4:59, எனது WhatsApp -ல் 'இரண்டு நாட்கள்' LOP - Loss of pay என்ற செய்தி நான் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து அனுப்பபட்டிருந்தது. அந்த மாதத்தின் சில நாட்கள் நான் மிகவும் சுகவீனமாகக் காணப்பட்டேன்; என்றாலும், பணியின் நிமித்தம் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்ற தவிர்க்க இயலாத சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து, எனது மனைவியும் சுகவீனத்தில் விழுந்ததால், சமையல் முதல் பிற வீட்டுக் காரியங்கள் அனைத்தையும் கவனிக்கும் பொறுப்பு என்மேல் விழுந்தது. சில நாட்களில், எனது மகளும் உடல் சுகவீனமானபோது, அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டியதிருந்ததினாலும் மற்றும் எனது மனைவி தவிர்க்க இயலாத பணியின் நிமித்தம் அலுவலகத்திற்குத் தொடர்ந்து செல்ல நேரிட்டபோது, வீட்டில் தனியே இருக்கும் மகளைக் கவனித்துக்கொள்ளவேண்டியதிருந்தபடியினாலும், அவ்வப்போது அலுவலகத்திற்குத் தாமதமாக வரும் நிலைக்குத் தள்ளப்பட்டேன் நான்.
நேரந்தவறாமல் தினந்தோறும் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்பதில் மிகுந்த கரிசனையோடிருப்பவன் நான். என்றபோதிலும், இந்த மாதத்தின் சூழ்நிலையோ தன் வலைக்குள் என்னை சுருட்டிவைத்துக்கொண்டது. LOP - Loss of pay செய்தியைக் கண்டதும், 'மனைவி மற்றும் மகள் சுகவீனமாயிருந்தபோது, சில நாட்கள் அலுவலகத்திற்குச் செல்லாமல் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்திருந்தால், LOP - Loss of pay -ஐ தவிர்த்திருக்கலாமே என்ற எண்ணத்துடன் சற்று கவலையுடன் நான் இருந்தபோது, மறுநாளில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 'அண்ணன், நல்லா இக்கிறீங்களா, உங்களுக்கு ஒரு கிப்ட் அனுப்பியிருக்கிறேன், பெற்றுக்கொண்டதும் பதிலளிக்கவும்' என்று ஒரு சகோதரரின் குரல் அன்போடு மறுமுனையிலிருந்து ஒலிக்க, விலைமதிப்பான ஒன்றை அவர் அனுப்பித்தந்திருப்பதை நினைத்து ஆனந்தம் அந்நேரம் என் மனதை நிறைத்தது; அத்துடன், அவர் சொன்னதுபோலவே, 'கிப்ட்' –ம் என் கரங்களை வந்து அடைந்தது. என்றபோதிலும், இரவு படுக்கையிலிருந்தபோது, மீண்டும் LOP - Loss of pay என்ற செய்தி எனது மனை ஆக்கிரமித்தது. இரண்டு நாட்கள் உதவித் தொகை போய்விட்டதே என்ற கவலையில் அல்ல; மாறாக, ஊழியன் நான் இந்த வரிசையில் வந்துவிட்டேனே என்ற வருத்தத்தினால் உண்டான கவலை அது என்று மாற்று கோணத்தில் எனது மனம் 'நான் படுகின்ற கவலை சரியானதுதான்' என்று எனக்குள் சொல்லிக்கொள்ள, மறுபுறத்திலோ, என்னை சீர்ப்படுத்தும் சிந்தையோடு கர்த்தரின் மெல்லிய குரல் என் மனதோடு இடைபட்டதை உணர்ந்தேன். அந்த இரண்டு நாள் LOP - Loss of pay ஐ நினைத்து கவலைப்படப் போகிறாயா? அல்லது நான் உனக்கு கொடுத்திருக்கும் இந்த 'கிப்ட்' ஐ நினைத்து சந்தோஷப்படப்போகிறாயா? என்ற கர்த்தரின் வார்த்தை என் இதயத்தை வந்தடைய, கையிலிருந்த கவலையை தூக்கி எறிந்துவிட்டு, விலைமதிப்புள்ள 'கிப்ட்' ஐ கரத்திலெடுத்துக்கொண்டேன்.
நாமும் அநேக நேரங்களில், தேவன் கொடுத்திருக்கும் விலைமதிப்புள்ள மகிழ்ச்சியைக் காண இயலாதவர்களாக, கவலையிலேயே நம்மை மூழ்கடித்துவிடுகின்றோம். எதைத் தெரிந்துகொள்ளப்போகின்றாய்? என்ற கேள்விக்கு மாம்சத்தைச் சார்ந்தே பதில் எழுதுகின்றோம். தூசியைப் போன்றும், துகள்களைப் போன்றும் நம்மை விட்டுப் பறந்துபோகின்றவைகளைக் குறித்த கவலையினால் நம்மை நிறைந்தால், தேவன் தரும் சந்தோஷத்தை வாழ்க்கையில் அனுபவிக்க இயலாமற்போய்விடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக