பீடியுடன் நின்ற பணியாளர்
23 ஜுலை 2017, தமிழகத்தின் ஆலயம் ஒன்றில் செய்தியளிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். சகல ஆயத்தங்களுடன் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றேன். அதுவரை அந்த ஆலயத்திற்கு செய்தியளிக்கும்படி நான் சென்றதில்லை. எனவே, அழைத்தவர்கள் சொன்ன அடையாளங்களின்படி அந்த ஊரைச் சென்றடைந்து ஆலயத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். இருபுறமும் வியாபாரத்தை மும்முரமாய்ச் செய்துகொண்டிருக்கும் கடைகள் அமைந்திருக்கும் சாலையின் வழியாக, இடது வலது புறம் திரும்பிப் பார்த்தவனாக, மெல்ல ஊருக்குள் சென்றுகொண்டிருந்தேன்.
அப்போது, திடீரென கண்ணில் பட்ட ஒர் ஆலயத்தைக் கண்டு, செய்தியளிக்கவேண்டிய ஆலயம் இதுவாகத்தானிருக்குமோ என எட்டிப் பார்த்தவனாக சாலையின் அடுத்த பக்கத்தில் கொண்டிருந்தேன். ஆலயத்தின் முன்புறக் கோட்டைச் சுவரின் இரும்பு வாசலுக்கு வெளியே ஓர் மனிதர் பீடி குடித்துக்கொண்டு நின்றார். அந்த மனிதருக்கும் ஆலயத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்கப்போகிறது என்று கணித்தவனாக நின்றுகொண்டிருந்தேன்.
அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்த என்னை பீடி குடித்துக்கொண்டிருந்த மனிதர் கண்டதும், பீடியைக் குடித்துக்கொண்டே என்னை நோக்கி வந்தார். 'நீங்க இந்த கோயிலுக்கா வந்திருக்கீங்க?' என்று என்னிடம் கேட்டார். இவர் ஏன் என்னிடத்தில் கேட்கிறார்? என்ற கேள்வி உள்ளத்தின் ஒரு புறத்தில் எழுந்தாலும், உதட்டளவில் 'ஆம்' என்று பதில் சொன்னேன். எனது பதிலைக் கேட்டதும், இன்னும் பக்கத்தில் வந்தார். கையிலிருந்த பீடியை கடைசியாகக் புகைத்து முடித்தபின்பு, அதனைக் கீழே போட்டு செருப்புக் காலால் நசுக்கி அணைத்தார்.
இத்தனையாய் விசாரிக்கின்றீர்களே, நீங்கள் யார்? என்று அந்த மனிதரைக் கேட்டபோது, 'நான்தான் இந்த கோவிலின் கோயில்குட்டியார்' என்று பதில் வந்ததைக் கேட்டு, அதிர்ந்துபோனேன். 'பிரசங்கியார் வருவார் பார்த்துக்கொள்ளுங்கள் என்று என்னிடத்தில் சொல்லியிருந்தார்கள், எனவேதான் வெளியே நின்று உங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்' என்றார். பிரசங்கியாருக்கு முன் பீடி குடித்ததைக் குறித்து எந்த ஒரு பதட்டமும் அவர் முகத்தில் காணப்படவில்லை. சற்று நேரம் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர், 'தான் ஒரு இந்து மனிதர் என்றும், விக்கிரகங்களை வணங்குபவர் என்றும், வேலையில்லாதிருந்த தனக்கு இந்த ஆலயத்தில் கோயில்குட்டியாராக வேலைபோட்டுக்கொடுத்தார்கள் என்றும், எனது மனைவி கோவிலை சுத்தம் செய்வாள், என்றாலும், பெண்கள் ஆலயத்தின் எல்லா பகுதிகளுக்கும் போகமுடிவதில்லையே, எனவே, சிலுவை இருக்கும் உட்பகுதியை நான் சுத்தம் செய்துகொள்ளுவேன். தனக்கோ எல்லா கடவுள்கள் மேலும் நம்பிக்கை உண்டு என்றும் சொன்னார். நான் பிரசங்கிக்கும் முன்னதாகவே, கோயில்குட்டியார் எனக்குச் செய்த பிரசங்கம் என்னை நொந்துபோகச் செய்தாலும், வந்த வேலையான பிரசங்கத்தை ஆவியானவரின் பெலத்தால் செய்துமுடித்து, ஆலயத்தின் இத்தகைய அவலநிலையைக் கண்டு சோகமான முகத்துடன் வீடு திரும்பினேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக