'பூமியதிர்ச்சி'
3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட நான், அவர்களது வார்த்தைகளிலிருந்து, 'பூமி அதிர்ச்சி' வந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். கைபேசியை எடுத்து 'google' ல் தேடிப் பார்க்க, பீஹாருக்கு அருகிலிருக்கும் நேபாளில் 6.4 ரிக்டர் அளவில் 11.32 –க்கு பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக செய்தி பதிவிடப்பட்டிருந்தது. பூமி அதிர்ச்சி வந்ததைக் காண்பிக்கும் செயலிகளை (app) கைபேசியில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் தரவுகளை அறிய முற்பட்டுக்கொண்டிருந்தேன் நான்.
வீட்டின் வெளியிலோ, திடீரென ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின்போது வீட்டில் தாங்கள் சந்தித்த அனுபவங்களையும், மற்றும் முன் நாட்களில் பூமி அதிர்ச்சியின்போது தாங்கள் சந்தித்த அனுபவங்களையும் பேசி முடித்து, ஜனசந்தடி அடங்க சற்று நேரம் பிடித்தது, மணியோ 12.00 நள்ளிரவைத் தொட்டது. ஒருபுறம் எனது மகன் பூமி அதிர்ச்சியைக் குறித்து தனது கைபேசியில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான். ஆங்காங்கே இருந்த வீடுகள் அனைத்திலும் விளக்குகளால் இரவு வெளிச்சமாகியிருந்தது. தொடர்ச்சியாக மேலும் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்ற எண்ணத்துடனும், பயத்துடனும் படுக்கையில் கிடைத்த தூக்கத்துக்குத் தூரமானவர்களாக சில நிமிடங்களைக் கழித்தவர்களாக அனைவரும் நின்றுகொண்டிருந்தோம். பூமி அதிர்ச்சி பூஜ்யமாகிவிட்டது, இனி ஒன்றுமில்லை, என்ற தைரியம் உண்டானதும், அனைவரும் வெளியிலிருந்து வீடுகளுக்குள் நுழைய, நானும், மனைவியும் மற்றும் மகனும் வீட்டிற்குள் நுழைந்தோம். வீட்டினுள் படுக்கையில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த மகளை தொந்தரவு செய்யாமல், தூக்கத்தைத் தொடர்ந்தோம்.
4 நவம்பர் 2023, காலை 7.15 மணி, தூங்கி எழுந்து அனைவரும் தேனீர் அருந்தி அமர்ந்திருந்தபோது, நான் எனது மகளை நோக்கி, 'நேற்று பூமி அதிர்ச்சி வந்தது' என்று சொல்ல, எனது வார்த்தைகளை நம்பாத அவள், உடனே படுக்கையிலிருந்து எழுந்து, தனது சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள, அடுப்பறையிலிருந்த தாயினிடத்திற்கு ஓடிச்சென்றவளாக, 'அம்மா, நேற்று பூமி அதிர்ச்சி வந்ததா?' என்று கேட்டாள். எனது மனைவியும், 'ஆம், பூமி அதிர்ச்சி வந்தது; நீ நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாய், உன்னை வீட்டிற்குள் போட்டுவிட்டு நாங்கள் வெளியே சென்றோம்' என்று சொல்ல, உடனே அவள் எங்களை நோக்கி, 'துரோகிகள் நீங்கள்' என்ற வார்த்தையை தூக்கி வீசினாள். அவளது கோபமான வார்த்தைகளைக் கேட்டவர்களாக, நாங்கள் அவளருகே சிரித்துக்கொண்டு நின்றபோது, சற்றும் தாமதமின்றி, உடனே, 'நான் நேற்றே இயேசப்பாகிட்ட எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டுட்டுதான் தூங்கினேன்' என்றாள். அவளது இந்த வரிகள் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. மகளது மனதில் ஆழமாக எழுதப்பட்டிருந்த இந்த மௌன வரிகளை, அவளது வாய் வாசித்தது, காலையிலேயே எனது காதுக்கு இன்பமாயிருந்தது.
4 நவம்பர் 2023, இரவு 8:45 மணி, ATM க்குச் சென்று, பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த நான், அதனை வைக்கும்படியாக எனது மணிபர்சை எடுத்தபோது, அது ரூபாய் நோட்டுகளினால் நிறைந்திருந்தது; மற்றும் அதற்குள் திணிக்கப்பட்டிருந்த சில்லறைகளால் மடித்து மூடக்கூட இயலாத அளவிற்கு அதன் வயிறு புடைத்துத் தள்ளிக்கொண்டிருந்தது. சில மணி நேரத்திற்கு முன் அது காலியாக இருந்ததினால்தான் நான் ATM-க்குச் சென்று செலவிற்காக கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வந்தேன்; அப்படியிருக்க, இத்தனை பணம் எங்கிருந்து வந்தது என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, அருகிலே கீழே விழுந்து கிடந்த எனது மகளது மணிபர்ஸ் எனது கண்களில் பட, அதனை எடுத்துத் திறந்து பார்த்தபோது, அதுவோ காலியாக பரிதாபமாக வெறுமையாகக் காட்சியளித்தது. ஆலயத்திற்குச் செல்லும்போது காணிக்கை போடுவதற்காகவும், ஊருக்குச் செல்லும்போது செலவு செய்வதற்காகவும் எனது மகள் அவ்வப்போது என்னிடம் கேட்கும் பணத்தை நான் கொடுப்பதுண்டு, அவளும் என்னிடம் கேட்டு சில நேரங்களில் பணத்தை எடுத்து தனது பணப்பையில் வைத்துக்கொள்ளுவதுண்டு, சில நேரங்களில் ஏதாவது போட்டியில் அல்லது விளையாட்டில் நான் அவளிடம் தோற்றுவிட்டால் 10 அல்லது 20 ருபாயை என்னிடமிருந்து வாங்கி அதிலே சேர்த்துவைப்பதுண்டு. அப்படியிருக்க, காலியாகக் கிடந்த அவளது பணப்பையைக் கண்டதும், படுக்கையில் அமர்ந்திருந்த எனது மகளை நோக்கி, 'ஜெரின், என்ன ஆயிற்று? உனது பர்சில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்து ஏன் அப்பா பர்சில் வைத்துவிட்டாய்?' என்று நான் கேட்க, 'அந்திக் கிறிஸ்து வருவான், அப்போ உங்க பர்சில இருந்து நான் எடுத்து எனது பர்சில வச்ச பணத்த பார்த்தா, என்னை அவன் புடுச்சிக்கிடுவான்' என்றாள். எனக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை; என்றாலும், ஏதோ 'அந்திக்கிறிஸ்து' என்ற வார்த்தையை எங்கோ கேட்டிருக்கிறாள்; எனவே பூமியதிர்ச்சி வந்தபோது, அவனைக் குறித்த பயம் வந்துவிட்டது என நினைத்துக்கொண்டவனாக அவளை நோக்கி: 'ஜெரின், நீ அப்பா பர்சில இருந்து பணத்த எடுக்கிறது எல்லாம் திருட்டு இல்ல, நீ என் பர்சில இருந்து எடுக்கிறது எனக்கு நல்லாவே தெரியும், எனக்கு தேவைப்படும்போது நான் உன் பர்சில இருந்து எடுத்துக்கொள்ளுவேன், மற்றவங்ககிட்டயிருந்து தான் எடுக்கக்கூடாது ' என்று சொன்னதோடு, என் பர்சில் அவள் வைத்த அத்தனை பணத்தையும் எடுத்து மீண்டும் அவள் பர்சிலேயே வைத்தேன். ஒரு பூமியதிர்ச்சி எத்தனை பெரிய பாடத்தையெல்லாம் என் மகளுக்குப் புரியவைத்திருக்கிறது என்பது தெளிவான நேரம் அது.
Comments
Post a Comment