நான் காந்தி !!!
ஹவுரா ஸ்டேஷனிலிருந்து சென்னைக்கு குடும்பமாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். இரண்டு வயதே ஆன எனது மகன் இரயில் பெட்டிக்குள் அங்கும் இங்கும் ஓடி ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருந்தான். அவனது சேட்டைகளும், குறும்புகளும் அங்கிருந்தவர்களுக்கு ரசனையாகிக்கொண்டிருந்தன. பலர் எங்களிடம் பேசிப் பழகுவதற்கு எங்களது மகனின் நடவடிக்கைகள் காரணங்களாயமைந்தன. அப்பொழுது ரயில் ஒரிசா மாநிலத்தினுள் பயணித்துக்கொண்டிருந்தது. மாலை நேரத்தில் ஒரிசா மாநிலத்திலுள்ள ஓர் இரயில் நிலையத்தில் ரயில் நின்றது. இரயில் நின்றதும் பயணிகள் அங்கும் இங்கும் இறங்கி பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தனர். இரவு நேர உணவை இரயில் பிளாட்பாரத்தில் வியாபாரிகள் பலர் கூவிக் கூவி விற்றுகொண்டிருந்தனர். சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் இரயில் புறப்படத் தொடங்கியது. அப்போது நாங்கள் அமர்ந்திருந்த பெட்டியில், எங்கள் இருக்கையின் எதிர் இருக்கையில் புதிதாக அந்த நிலையத்தில் ஏறிய ஒரு பெண் வந்து அமர்ந்தார். ஏறக்குறைய நாற்பத்திரண்டு வயதிற்கான தோற்றம்; சுடிதார் உடை, கையிலே ஒரு சிறிய அலுவலகம் செல்லும் பெண்களுக்கான கைப்பை. ஏறிய அப்பெண் எதிர் இருக்கையில் உட்கார்ந்ததும், உணவு பரிமாறும் ஒரு மனிதனை அழைத்தார்; ஏதேதோ வேகமாக பேசினார். ஹிந்தி மொழியினை நான் அறிந்தவன் என்றபோதிலும் அவர்களது வேகமான உரையாடல்களை எனது காதுகள் உற்றுக்கவனிக்க இயலாத நிலை. சற்று நேரத்திற்கெல்லாம் அந்தப் பெண்ணுக்கு ஒரு கப்-ல் டீ கொண்டு வந்து தரப்பட்டது. அதற்கு அவர் எந்தப் பணமும் செலுத்தவில்லை. ஒருவேளை கடைசியாகக் கொடுப்பார் என நான் அதனை பொருட்படுத்தவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் எனது மகனின் விறுவிறுப்பான குறும்புகள் அவரையும் எங்களிடம் பேசவைத்தது. நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்ற அந்தப் பெண்ணின் சுருக்கமான கேள்விக்கு எங்களது உத்தரைவைச் சொல்லி முடித்தபின்னர், நாங்கள் கேட்காமலேயே தன்னை யார் என்று அவர் அறிமுகப்படுத்தினார். தான் இரயில்வேயில் பணி செய்வதாகவும், இரயிலில் கொடுக்கப்படும் உணவுகளை பரிசோதிப்பது தனது கடமை எனவும், தான் பயணிகளுக்குக் கொடுக்கப்படும் உணவுளைக் கண்காணிக்கும் பரிசோதகர் எனவும் அவர் அறிமுகம் செய்துகொண்டார். பயணிகளுக்குக் கொடுக்கப்படும் உணவினை பரிசோதிக்கவேண்டியவருக்கு, விசேஷித்த உணவு லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதை அப்போது நாங்கள் உணர்ந்துகொண்டோம்.
Comments
Post a Comment