Skip to main content

குழந்தைத் தொழிலாளர்கள்

 

 

குழந்தைத் தொழிலாளர்கள்

 

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து தலைவர்கள் பயிற்சி முகாம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு, பீஹாரிலுள்ள டெஹ்ரி ஆன் சோன் க்கு ரயிலில் வந்துகொண்டிருந்தேன். ரயில் டெஹ்ரி ஆன் சோனை நெருங்குவதற்கு சுமார் 10 நிமிடங்களுக்கு முன்னர், இறங்குவதற்கான ஆயத்தங்களைச் செய்து, கதவினருகே வந்தேன். அங்கே வழியில் ஒரு சிறுவன் தலையணையாக ஒரு கட்டு அன்றைய செய்தித்தாள்களை வைத்து குப்புறப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். கதவின் அருகே கீழே அச்சிறுவன் படுத்துக் கிடந்ததால், கதவினைத் திறக்க இயலாமல், அவனை கூப்பிட்டு எழுப்ப முயன்றேன். அவனுக்கோ கேட்டபாடில்லை. சட்டென ஒரு சகோதரி என்னிடத்தில், 'அண்ணே தலைக்குக் கீழே இருக்கிற நியூஸ் பேப்பர்ல ஒன்ன எடுங்க எந்திச்சுருவான்' என சொல்ல, நானும் இசைந்து, ஒரு செய்தித்தாளைத் தொட்டேன், அவ்வளவுதான் உடனே எழுந்துவிட்டான். குளித்திராத தோற்றம், சின்னஞ் சிறு வயது, அழுக்கு உடைகள், தூங்குவதற்கு மனமிருந்தும் செய்தித்தாள்களை சுமைகளாக்கிக்கொண்டு சோற்றுக்காகப் போரடும் அச்சிறுவனைக் கண்டு பரிதாபம் கொண்டேன். பள்ளிக்குச் செல்லும் வயதில், பாடப்புத்தகங்களைத் தூக்கவேண்டிய இச்சிறுவன், இப்படி தனது வாழ்க்கையையே பாரமாகச் சுமந்து அலைகிறானே என எண்ணம் கொண்டேன். ஆம், இவன் தன்னைத்தானே காப்பாற்றும் குழந்தைத் தொழிலாளி. பெற்றெடுப்பது மட்டும்தான் எங்களது வேலை, பேணுவதும், போஷிப்பதும், போதிப்பதும் எங்களுடையதல்ல என்ற நினைப்பில் குழந்தைகளைப் பெற்று நீயே உனது வாழ்க்கையைப் பார்த்துக்கொள் என விடுவதகை; காட்டிலும், குழந்தைகள் அற்ற அநாதைகளாய் பெற்றோர்கள் வாழ்ந்திருக்கலாம்.

மே 13 அன்று டெஹ்ரி ஆன் சோனிலிருந்து சென்னைக்குப் பயணித்துக்கொண்டிருந்தேன். இடையில் ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்று கிளம்பிய பின், சற்று நேரத்தில் நான் அமர்ந்திருந்த பெட்டியினை துடைப்பத்தினைக் கொண்டு சுத்தம் செய்துகொண்டுவந்தாள் ஒரு சிறுமி. கையிலிருந்த கேமராவினால் உடனே போட்டோ எடுத்தேன். பிஞ்சு உருவம் கஞ்சுக்காக படும் கஷ்டத்தினைக் கண்டபோது பாரமாயிருந்தது.

தூத்துக்குடியில் பேருந்து நிலையம் ஒன்றில் நின்றுகொண்டிருந்தேன், தீடீரென வேட்டி கட்டிய ஒருவர், இரண்டு குழந்தை, மற்றும் ஒரு பெண் (அவரது மனைவியாக இருக்கலாம்) உடன் நான் நின்ற இடத்தின் அருகே வந்தார். வந்ததும், சர்க்கஸ் காட்டுவது போல சில ஏற்பாடுகளைச் செய்தார். பின்னர் வளையத்துக்குள் குழந்தையை போகவைத்து, குழந்தையின் மேல் ஏறி நின்று என பல சாகசங்களைச் செய்துவிட்டு, குழந்தைகளின் கைகளிலே இரண்டு தட்டுகளைக் கொடுத்து சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தவர்களிடத்தில் பிச்சை வாங்க அனுப்பினார். பிச்சை எடுக்கும் பெற்றோர்கள், தாங்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகளை பிச்சை எடுக்க வற்புறுத்தும் கொடூரத்தின் விளைவும் ஒருபக்கம் இந்தியாவில் உண்டு.

மற்றொரு புறம் தத்து எடுக்காமல், தற்காலிகமாக சிறுவர்களை தங்களது வீட்டில் வைத்துக்கொண்டு, ஊதியத்திற்குப் பதிலாக, கல்வி, உடைகள் மற்றும் உணவினைக் கொடுத்துக்கொண்டு தங்கள் வீட்டில் குழந்தைத் தொழிலாளர்களாக்கும் கூட்டமும் பெருகுகின்றது. சுமார் 11 வயது நிரம்பிய சிறுமி குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடந்துவந்தாள், அருகே ஏறக்குறைய நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு சகோதரி நடந்துவந்தாள். அது யார்? என நான் விசாரித்தபோது, அவர்கள் வீட்டில் உள்ள சிறுமி (குழந்iதைத் தொழிலாளி) என தெரிந்துகொண்டேன். பிள்ளையைப் பிள்ளை சுமந்து வந்த காட்சிக்கு எனது கண்களே சாட்சி. தங்கள் குழந்தைகளுடன் அச்சிறுமி அவர்களது குடும்பத்தில் தங்கியிருந்தாலும், அவர்களின் பார்வையில் அச்சிறுமி குழந்தைத் தொழிலாளியே.

மற்றும் ஒரு குடும்பத்தில், அவர்களது குழந்தைகள் அனைத்தையும் பார்த்துக்கொள்வது ஒரு குழந்தைத் தொழிலாளிதான். பள்ளிக்கு அழைத்துச் செல்வது, விளையாடும்போது பார்த்துக்கொள்வது என தாய்க்குப் பதில் தாயாக வேலை வாங்கப்படும் சிறுமிகளை குழந்தைத் தொழிலாளிகள் என சொல்லாமல் என்ன சொல்வது. வேறொரு குடும்பத்தில், மனைவி இருக்க ஒரு சிறுமியைப் பார்த்து டீ போட்டுக்கொண்டுவா என சொன்னபோது, அச்சிறுமி யார் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'எங்க வீட்லதான் தங்கி இருக்கா, நாங்க படிக்க வைக்கிறோம், உணவு மற்றும் உடைகளைக் கொடுக்கிறோம், ரொட்டி (சப்பாத்தி) கூட அவளே செஞ்சிருவா' என தங்களுக்குச் சாதகமான வார்த்தைகளால் வாக்கியத்தை முடித்துக்கொண்டார்கள். மூன்று குழந்தைகள் உள்ள ஒரு வீட்டில் நான்காவதாக ஒரு சிறுமி தற்காலிகமாக வைக்கப்படுவதின் ரகசியம் என்ன? வேலைக்காரிதான் வேறென்ன.

வேறு ஒரு சிறுமி, ஓரிடத்தில் கஷ்டப்பட்டு ஒரு வாளி நிரம்ப துணிகளை மேல் மாடிக்கு படியில் தூக்கிக்கொண்டு ஏறினாள். என்ன செய்யப் போகிறாள் எனப் பார்த்தேன், அச்சிறு விரல் தான் இருந்த வீட்டில் உள்ள அனைவரின் ஆடைகளையும் கொடியில் விரித்து காயப்போட்டுக்கொண்டிருந்தது; எனது இதயம் வலித்தது. அந்த வீட்டினுள் போகும் சந்தர்ப்பம் ஒருமுறை எனக்குக் கிடைத்தது, உள்ளே சென்று அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன், தண்ணீர் கேட்டேன், உடனே அச்சிறுமியிடம் தண்ணீர் கொண்டுவா எனச் சொன்னார்கள், அப்படியே டீயும் அச்சிறுமிதான் போட்டாள், நான் வீட்டினுள் நுழையும்போது கதவினையும் அச்சிறுமியே திறந்துவிட்டாள். அக்குடும்பத்தில் உள்ள அச்சிறுமியின் (குழந்தைத் தொழிலாளி) வயதினைக் காட்டிலும் குறைந்த வயதே ஆன அவர்களது குழந்தை அச்சிறுமியிடம் (குழந்தைத் தொழிலாளி) வேலை வாங்குவதையும் கண்டு மிரண்டுபோனேன். இப்படி சிறுவர்களை வைத்துக்கொண்டு சாதுரியமாக வேலை வாங்கி, அவர்களைக் குழந்தைத் தொழிலாளர்களாக்கி, அவர்களைக் காப்பாற்றுவது போல வேடமாடுவோரை என்ன செய்வது.

மற்றொரு நாள் எனது வீட்டின் மேல் மாடியில், காலைக் காற்றை சுவாசித்தபடி நின்றுகொண்டிருந்தேன். கையில் துவைத்து, ஈரமாயிருந்த தனது உடுப்பு ஒன்றுடன் மாடிக்கு வந்தாள் ஓர் சிறுமி. அது அவளது உடுப்பு. அதனை அவள் வெயிலில் உலர்த்திக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அத்தனை விலை உயர்ந்த உடுப்பு என என் கண்ணால் மதிப்பிடப்பட்டாலும், அவள் தனது உடுப்பினை அத்தனை அழகாய் மெல்ல விரித்து உலர்த்தியைக் கண்ட எனக்கு, அந்த உடுப்பின் மேல் அவளுக்கு இருக்கும் மதிப்பைப் புரிந்துகொண்டேன். உடையை உலர்த்திவிட்டு சென்றுவிட்டாள். அவளும் ஓர் வீட்டில் இருக்கும் குழைந்தைத் தொழிலாளிதான். அவள் சென்ற பின்னரும் அவர் உலர்த்திய அந்த ஆடையினை நான் பார்த்துக்கொண்டிருந்தேன், அதிலிருந்து சொட்டு சொட்டாய் விழும் நீரினால் தரையிலே ஏதோ ஒரு உருவம் உருவாகிறதைப் போன்று தோன்றவே, அருகில் சென்று பார்த்தேன்; எத்தனை வியப்பு எனக்கு; ஆம், அதில் ஓர் தலைகீழ் இந்தியா எனது கண்ணில் பட்டது. அதின் மேலே சொட்டுச் சொட்டாய் அவளது உடையிலிருந்து விழுந்த நீர், இந்தியாவில் இன்னும் நாங்கள் அழுதுகொண்டுதான் இருக்கிறோம். தலைகீழ் இந்தியாவை சரியாக்குவது யாரோ? என்ற கேள்வியையே எனக்குக் கொடுத்தது.

தற்காலிகமாக ஒரு சிறுமியை வைத்திருந்த ஒரு சகோதரி, 'ஐயோ, அந்தப் புள்ள போனதுல இருந்து எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல, அவ இருக்கிற வரைக்கி ஒரு பிரச்சன இல்ல, இப்ப அவ போயிட்டா, வேறு ஏதாவது வேலைக்காரியப் பார்க்கணும்' என சொன்னார். இதன் அர்த்தம் என்ன? வீட்டை விட்டு போய்விட்ட அச்சிறுமி அந்த வீட்டில் வேலைக்காரியாகத்தான் வைக்கப்பட்டிருந்திருக்கிறாள் என்பதுதானே. தாய் அருகே அமர்ந்திருக்க, குழந்தைக்கு சோறு ஊட்டிக்கொண்டிருந்தார் ஒரு குழந்தைத் தொழிலாளி சிறுமி; எத்தனை கொடுமை.

மற்றொரு குடும்பம், வாலிப வயதுள்ள மகனை வீட்டில் வைத்துக்கொண்டு, மேலும் தங்கள் வேலையினை எளிதாக்கும்படியாக மற்றும் ஒரு சிறுமியையும் கூட வைத்திருக்கிறார்கள். கடைக்குச் செல்வது முதல், காய்கறிகள் வாங்குவது வரையிலான வேலைகளை அந்தச் சிறுமியே செய்கிறாள்; அப்படியென்றால், அவர்களது வாலிப மகனால் இத்தகைய வேலைகளைச் செய்ய இயலாதோ? இத்தனை வேலையினைச் செய்யும் அச்சிறுமியை தங்கள் வீட்டில் கூட அவர்கள் தங்கவைக்காமல், வீட்டிற்கு அருகாமையில் தங்கள் வீடல்லாத மற்றொரு இடத்தில் தங்கவைத்திருக்கின்றனர்; எத்தனை கொடுமை? வேலையை வாங்கிவிட்டு, சிறுமியை விரட்டிவிடும் இவர்களை எத்தகைய மனிதர்கள் பட்டியலில் சேர்ப்பது. வீட்டில் வாலிபப் பையன் இருக்கிறான் என்ற பயத்தினால் அப்படிச் செய்தோம் என்பது அவர்கள் பதிலானால், வாலிபன் இருக்கும் தங்கள் வீட்டில் இளைஞியான அச்சிறுமியைக் கொண்டுவந்தது எத்தனை பெரிய தவறு. தவறேதும் நடந்துவிட்டால் அச்சிறுமியின் மேல்தானே இத்தகையோர் பழி சுமத்தி பழிவாங்குவர். 

ஓர் பணக்கார குடும்பம், அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை; அவர்கள் இருவரும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே ஒரு சிறுமியை எடுத்து வளர்த்தார்கள், அச்சிறுமி தன்னை அவர்கள் குழந்தையாக நினைப்பதாக எண்ணி வாழ்ந்தாள். பள்ளிக்குக் கூட அவள் செல்வதற்கு நேரமில்லை; காரணம் வீட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட அவ்விருவரையும் பார்ப்பதே அவளது பிரதான கடமை. அச்சிறுமியின் உதவியின்றி அவர்கள் இருவரும் வாழ இயலாது என்ற நிலை. வெளி உலக வாழ்க்கையை மறந்து, கல்வியைத் துறந்து கண்ணியமாய் பெற்றவர்களைப் போல பாவித்து இருவருக்கும் கடமை செய்தாள் அவள். திருமண வயதானது அவளுக்கு, திருமணமும் அவர்களால் நடத்திவைக்கப்பட்டது. ஆனால், பின்னர் சாதுரியமாக வீட்டை விட்டு துரத்திவிடப்பட்டாள். சொந்தமாய் நினைத்து பாவித்து வந்த அந்த சிறுமிக்கு சொத்துக்கள் போய்ச் சேரக்கூடாது என அவர்கள் செய்த சதி.

ஒருமுறை சுதந்திர தின விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். அனைத்து சிறார்களின் கைகளிலும் தேசியக் கொடியினை;ப் பார்த்து ரசித்து, புகைப்படம் எடுத்து திரும்பிய என்னை ஒரு காட்சி நிற்கச் செய்தது. இரு பெண்கள் நடுவில் ஒரு சிறுவன் சுமைகளைத் தூக்கிக்கொண்டு சுதந்திர தினத்தன்று நடந்து சென்றது கண்டு, தேசியக் கொடு பறக்கும்போது, அதன் உள் வைக்கப்பட்டிருக்கும் மலர்கள் இச்சிறுவன் மேல் விழவில்லையே என வேதனைப்டேன்.

சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தி;ல் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான். சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறு பெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள். (2இரா 5:1,2)

இதனையே இன்று அநேகர் செய்துகொண்டிருக்கின்றனர். எங்க விசுவாசி வீட்டுப் பிள்ளை, எங்க சபையில உள்ள பிள்ளை, எங்க பணித்தளத்தில் உள்ள பிள்ளை என்று பல்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லிக்கொண்டு, கொத்தடிமைகளாக வீட்டில் வைத்திருக்கும் கிறிஸ்தவர்கள் மனம்திரும்பியே ஆகவேண்டும். நாகமானைப் போல தங்களுக்கும் குஷ்டம் இருப்பதினாலேயே, இத்தகையை சிறுமிகளை கூட வைத்துக்கொண்டு கூசாமல் வேலைவாங்குகின்றனர். தீர்க்கதரிசியினிடத்தில் இவர்கள் சென்று, யோர்தானில் முழுகினால் மட்டுமே இத்தகையோரின் குஷ்டம் தீரும், இல்லையேல், இவர்களது வாழ்க்கை பல சிறுமிகளுக்கு கஷ்டங்களையே கொண்டுவரும். தேசமே விரோதமாகச் சட்டத்தை உருவாக்கியிருந்தும், தேவனின் பக்கத்திலிருக்கும் இவர்கள் பரத்துக்கு விரோதமாகவும், தேசத்துக்கு விரோதமாகவும் செய்யும் இத்தகைய குற்றங்களுக்கான பதில் என்னவோ?

டெர்ஹி ஆன் சோனில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு நான், எனது மனைவி, எனது மகன் மற்றும் மகளுடன் உணவருந்தச் சென்றிருந்தோம். நாங்கள் அமர்ந்ததும், நாங்கள் ஆர்டர் செய்திருந்த உணவை சுமார் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஏந்திக்கொண்டுவந்தான். அச்சிறுவனைப் போன்ற மேலும் இரண்டு சிறுவர்கள் அழுக்கான உடை உடுத்தியவர்களாக அந்த உணவு விடுதியில் நின்றுகொண்டிருந்தனர். வரும் வாடிக்கையாளர்களைக் கவனிப்பது இந்த மூன்று சிறுவர்களின் பணி. அந்த மூன்று சிறுவர்களையும் சுட்டிக்காட்டியவனாக, எனது ஏழுவயது நிரம்பிய மகனை நோக்கி: 'பார், உன்னைப்போன்ற வயதுள்ள இச்சிறுவர்களை எப்படி வேலை வாங்குகிறார்கள், இப்படி வேலைசெய்தால்தான் இவர்களுக்குச் சாப்பாடு கிடைக்கும், சாப்பாடு கிடைத்தால்போதும் என்ற கூலியோடு இவர்கள் வேலைசெய்கிறார்கள்' என்று சொன்னேன். இந்த ஹோட்டல் தை;திருப்பவர்களுக்கும், வீட்டில் வைத்திருப்பவர்களுக்கும் வித்தியாசம் என்ன?

ஒருமுறை பாட்னாவிலிருந்து வாகனத்தில் வந்துகொண்டிருந்தேன். வழியில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிடும்படியாக வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன். சாப்பிட்டு முடிந்ததும், தட்டுகளை ஒரு சிறுவன் வந்து எடுத்து, மேஜையையும் சுத்தம் செய்துவிட்டுச் சென்றான். கைகழுவும்படி நான் எழுந்து சென்றபோது, அங்கே நான் கண்ட காட்சி கொடூரமானது, அந்தச் சிறுவன், நான் சாப்பிட்டுவிட்டு தட்டில் மீதம் வைத்திருந்ததை எடுத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

தற்காலிகமாக குழந்தைகளை வைத்திருப்போரின் கவனத்திற்கு

முதலில் அந்தச் சிறுமியை உங்கள் வீட்டிற்கு அழைக்கும்போது, ஏதாவது ஒரு சிறுமிக்கு நான் கல்வி உதவி செய்யவேண்டும் என நோக்கில் அழைத்தீர்களா, அல்லது வீட்ல ஹெல்ப் க்கு ஒரு பொண்ணு இருந்தா நல்லா இருக்கும்ன்னு அழைத்தீர்களா? (ஹெல்ப் க்கு அழைத்திருந்தால் அவள் வேலைக்காரிதான்)

நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தைக் குறித்த கரிசனை உண்டா? இப்போது எங்களுக்கு உதவியாயிருக்கட்டும், பின்னால் அவள் எப்படியிருந்தால் என்ன என்ற எண்ணமுடையவரா நீங்கள்?
உங்கள் குழந்தைகள் அவர்களை வேலை வாங்குகின்றனரா? 
உங்கள் குழந்தைகளுக்குச் செய்வதைப் போலவே அச்சிறுவர்களுக்கும் செய்கிறீர்களா? துணி எடுப்பதின் தரத்தில், உங்கள் குழந்தைக்கும் அச்சிறுவர்களுக்கும் வேறுபாடு காண்பிக்கிறீர்கள் என்றால் நீங்கள் வேடமாடுகிறீர்கள். 
உங்கள் குழந்தை தூங்கும்போது வேலை செய்ய அச்சிறுமியைத் தட்டி எழுப்புகிறீர்களா?
நீங்கள் செய்யக்கூடிய வேலையையும் அச்சிறுமியைச் செய்ய வைக்கிறீர்களா?
அச்சிறுமி வேலை செய்யும்போது, நீங்கள் ஓய்வு எடுக்கிறீர்களா? 
உங்கள் குழந்தை இருக்கும்போது, அந்தக் குழந்தையையே கூப்பிட்டு வேலை செய்யச் சொல்கிறீர்களா?
எதற்கெடுத்தாலும் அவளையே அழைத்து வேலை செய்யச் சொல்லும் எண்ணம் வருகிறதா?
அச்சிறுமி மீதம் வைக்கும் சோற்றினை, உங்கள் குழந்தைகளின் சோற்றைப் போல சாப்பிட முடிகிறதா? இல்லையென்றால், குப்பையில் கொட்டுகிறீர்களா? 
வேலை செய்யும்போது எத்தனை முறை உங்கள் குழந்தைகளின் பெயரை உச்சரிக்கிறீர்கள், அச்சிறுமியின் பெயரை உச்சரிக்கிறீர்கள். வேலை என்றாலே அச்சிறுமியைத்தான் தேடுகிறீர்களா?
உங்கள் பிள்ளை தூங்கிக்கொண்டிருக்கும்போது, அச்சிறுமியின் தூக்கத்தை உங்கள் வேலை வாங்கும் அதிகாரம் உடைக்கிறதா? யாரை முதலில் எழுப்புகிறீர்கள்.
இத்தனைக்கும் சரியான பதில் இல்லையென்றால், அந்தக் குழந்தைகளை வேலைக்காரிகளாக்காமல், விடுதிகளிலோ அல்லது தொண்டு இல்லங்களிலோ குழந்தைகளாகவே வாழவிட்டுவிடுவது நல்லது. 
படிப்பதற்கு வசதியற்ற நிலையில் உள்ள குடும்பதிலுள்ள பிள்ளைகளை தங்கள் குடும்பத்தில் தங்கவைத்து கல்வி அறிப்பது தவறல்ல, ஆனால் அச்சிறுவர் சிறுமியர் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது.

அது ஒரு காலை நேரம், குடும்பம் ஒன்றில் தற்காலிகமாக இருந்த சிறுமி ஒருத்தி ஒரே ஒரு ஆடையினை கையில் ஏந்திக்கொண்டு, அதனை மாடியில் உள்ள கொடியில் உலர்த்தும் வண்ணம் வந்தாள். கையிலி இருந்த ஆடையிலிருந்து நீர்ச் சொட்டுகள் விழுந்துகொண்டேயிருந்தது. அது அவள் எங்கருந்து வருகிறாள் என்பதையும் காட்டிக்கொடுக்கும் பாதையாகிக்கொண்டிருந்தது. அந்த சிறுமி தனது கையிலிருந்த அந்த ஒரே ஒரு ஆடையினை மெல்ல அழகாக கொடியில் உலர்த்துவதற்காக விரித்துக்கொண்டிருந்தாள். அந்த ஆடைக்கு அவள் கொடுக்கும் மதிப்பு, அவளது விரல் அதனை விரிப்பதில் தெரிந்தது. ஆடையினை உலர்த்திய பின்னர் சென்றுவிட்டாள் அச்சிறுமி. நானோ அந்த ஆடையினைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன், சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்த என் கண்ணை மேலும் ஓர் காட்சி கவ்விக்கொண்டது.

ஆம், அந்த ஆடையிலிருந்து விழுந்துகொண்டிருந்த நீர்த்திவலைகளினால் கீழே ஏதோ ஒரு உருவம் உருவாக்கப்பட்டதைப் போன்று உணர்ந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் தொடர்ந்து அதனையே பார்த்துக்கொண்டிருந்தபோது, அது வலப்புறமிருந்து இடப்புறம் புரட்டிப்போட்ட இந்தியாவைப் போன்றதோர் தோற்றத்தைக் கொடுத்தது. மீண்டும் அந்த ஆடையினைப் பார்த்தேன் அதிலிருந்து நீர் சொட்டு சொட்டாய் அந்த இந்திய படத்தின் மேல் விழுந்துகொண்டிருந்தது. அது அந்த ஆடையிலிருந்து இந்தியாவின் மேல் விழும் கண்ணீர்த் துளிகளாய் தோன்றியது எனக்கு. ஆம், இந்தியாவில் இன்னும் நாங்கள் அழுதுகொண்டுதான் இருக்கிறோம் என்பதையே எனக்கு செய்தியாய் சொல்லியது அந்தக் காட்சி. அவ்விடம் விட்டு நான் கடந்து வந்தபின்னர், தொடர்ந்து விழுந்துகொண்டிருந்த  தண்ணீர் துளிககளால் இந்தியாவின் உருவம் இன்னும் சற்று நேரத்திற்குள் மாறிவிடும் என்ற சோகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தேன்.  


Comments

Popular posts from this blog

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

  எனக்கோ இரண்டு  பிரசங்கங்கள் டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன். மனைவி வீடு வந்து தேனீர்

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே