வியாழன், 27 ஆகஸ்ட், 2026

பெண் அல்ல பொன்



ஆகஸ்ட் 25 2026, இரவு சுமார் 8:30 மணி, ஜெம்ஸ் வளாகத்திலிருக்கும் சகோதரன் இம்மான் வீட்டில், அவருக்குப் பிறந்திருக்கும் மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தையைப் பார்ப்பதற்காக, இரண்டு சிறிய ஆடைகளுடன், மழைத் தூரல் விழுந்துகொண்டிருந்ததால், குடை பிடித்த வண்ணமாக நானும் எனது மனைவியும் புறப்பட்டுச் சென்றோம். சகோதரன் இம்மான் வீட்டை அடைந்ததும், குடையினை மடித்து வாசலுக்கு வெளியே நீர் வழிய வைத்துவிட்டு, வாசற்கதவினை மெதுவாகத் தட்டினோம். சிரித்த முகத்துடன் 'வாங்க' என்ற வரவேற்பு வார்த்தையுடன் கதவினைத் திறந்தார் சகோதரன் இம்மான். முதல் ஆளாக மனைவி வீட்டினுள்ளே காலடி எடுத்துவைத்தாள்; தொடர்ந்து, பின்னால் நான் பிரவேசித்தேன்.  வீட்டினுள் நுழைந்ததும், சகோதரன் இம்மானுவின் மூத்த மகளான, நான் 'ஜிங்குஜா' என்று அழைக்கும் ஜின்ஷா அழுதுகொண்டிருந்தாள். வரவேற்பறையின் இருக்கையிலோ குழந்தையுடன் அமர்ந்திருந்தார் சகோதரன் இம்மானுவின் மனைவி. 

ஜிங்குஜாவின் அழுகையைக் கண்ட நான், 'ஏன் அழுகிறாள்?' என்று கேட்டதும், 'அப்பா திட்டிவிட்டார்கள்' என்று பதிலளித்தார் அவளது தாய். இதனை நான் கேட்டதும், வரவேற்ற முகத்துடன், இரண்டு இருக்கைகளை எடுத்துவந்து, 'அமருங்கள்' என்று சொல்லி, எங்களை அமரச்செய்துவிட்டு அருகில் நின்றுகொண்டிருந்த சகோதரனை 'பிள்ளையை ஏன் அடித்தாய்?' என்று விளையாட்டாக நான் எனது வலதுகரத்தினால் மூன்று முறை அடித்து முடிப்பதற்குள், இதனைப் பார்த்துக்கொண்டிருந்த மகள் ஜிங்குஜா வெகுண்டு எழுந்தவளாக, என்னை நோக்கி ஓடிவந்து எனது தொடையினை தனது இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு கடிக்க முற்பட்டாள். இக்காட்சியைக் கண்டதும் நான் மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தேன். தன்னை தகப்பன் அடித்திருந்தாலும், தகப்பனை எவரும் அடிக்க அனுமதிக்காத அந்த பிஞ்சு உள்ளத்தினைப் பார்த்து, 'உன்னிடத்திலும் நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டியவைகள் இருக்கிறது' என்று சொன்னேன். அவளது தப்பனிடத்தில், 'இவள் பெண் அல்ல உனக்குக் கிடைத்த பொன்' என்று சொல்லி எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். தன்னைத் தண்டித்திருந்தாலும், தகப்பன் மீதிருந்த பாசம் அவளுக்குத் தணிந்துபோகவில்லையே! 

அநேக நேரங்களில், இவ்வுலகத்தில், சோதனைகளை நாம் எதிர்கொள்ளும்போது, பிரச்சனைகளைச் சந்திக்கும்போது, நமது பரம தகப்பனாகிய பிதாவின் மீது நாம் வைத்திருக்கின்ற பாசத்தினை விட்டுவிடுகின்றோம். அவர் நம்முடன் பேசும் வேத தியானத்தையும், நாம் அவருடன் பேசும் ஜெப நேரத்தையும் விட்டுக்கொடுத்துவிடுகின்றோம். அல்லது, தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? (எபி. 12:7) என்ற வசனத்தின்படி, நம்முடைய தவறுகளின் நிமித்தமாக, தகப்பன் என்ற ஸ்தானத்திலிருந்து அவர் நம்மை சிட்சிக்கும்போது, சிட்சைக்குக் காரணமான நமது தவறுகளிலிருந்து திருந்தாமல், அவரை விட்டு மேலும் தூரமாகப் பயணித்துவிடுகின்றோம். நம்முடைய வாழ்க்கையில், எத்தகைய சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரிட்டாலும், பரமப் பிதாவை விட்டுக்கொடுக்காத, சிறு பிள்ளைகளைப் போன்ற உன்ளத்தை ஆண்டவர் நமக்கும் தருவாராக

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

ஊரைப் பார்க்கும் உடல்



ஏப்ரல் 12, 2026, சில பொருட்களை வாங்கும் படியாக, பீகார் மாநிலத்தின் டெஹ்ரி ஆன் சோன் பட்டணத்தில் உள்ள Smart Bazar கடைக்கு மனைவியுடன் சென்றிருந்தேன். கீழ் தளத்தில் வீட்டிற்குத் தேவையான சில பொருட்களை வாங்கினதைத் தொடர்ந்து, கடையின் முதல் தளத்தில் ஆடைகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் நுழைந்த நாங்கள், அங்கே தொங்கவிடப்பட்டிருந்த ஆடைகளைப் பார்த்தவாறு, அவைகளில் சில உடைகளைப் பிள்ளைகளுக்கென தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்தவைகளில் பழுதுகள் ஏதுமிருக்கிறதா எனப் பார்த்தவாறு, ஆடைகள் தொங்கவிடப்பட்டிருக்கும் பிற பகுதிகளுக்கும் சென்று அவைகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது, திடீரென எனது கண்ணில் பட்டது ஒரு ஆடை. தவறுதலாக இங்கே தொங்கவிட்டுவிட்டார்களோ? என்ற கேள்வியுடனான ஐயம் ஒருபுறம் எனது சிந்தையில் எழ, சற்றும் தாமதிக்காது, அருகில் சென்று அதனைப் பார்த்துவிட விரைந்தேன். கரங்களில் அதனை எடுத்து பார்த்தபோதோ, எனது தலையே சுற்றும்போலிருந்தது, 'ஆம், அதன் விலை ரூபாய் 999 என்று குறிப்பிடப்பட்டிருந்தது'. யார் இதனை அணிவார்கள்? இதனை அணிந்தால் தொடையில் இருக்கும் ஓட்டையில் மற்றும் ஆங்காங்கே காணப்படும் ஓட்டைகள் அனைத்தின் வழியாக உடல் ஊரை எட்டிப்பார்க்குமே! அல்லது, ஊர் அதனை அணிந்து செல்பவரின் உடலை எட்டிப்பார்க்குமே! என்று நினைத்துக்கொண்டிருந்தபோது. 'உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு,  நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு' (1தீமோ. 4:12) என்ற வசனத்தை நினைவுகூர்ந்தேன். 

கிறிஸ்துவில் பிரியமானவர்களே! நாகரீகம் என்ற பெயரில், அநாகரீகத்தை அரங்கேற்றி, இன்றைய சமுதாயத்தை அலங்கோலமாக மாற்றிவருகிறது உலகம். இருதயத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு இடமளித்திருக்கும் நாம், 'ஆவியானவரின் ஆலயமாயிருக்கிற நம்முடைய சரீரத்தை' அலங்கோலமாக மாற்றிவிடக்கூடாதே! ஆத்துமாவை எப்படி காத்துக்கொள்ளுகிறோம் என்பதில் மாத்திரமல்ல, ஆயலத்தையும் எப்படி பராமரிக்கிறோம் என்பதையும் பார்க்கிறவர் நமது ஆண்டவர். ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம் (1கொரி. 3:17) என்ற வசத்தின்படி, ஆலயமாகிய சரீரத்தை, ஆண்டவருக்குப் பிரியமாகக் காத்துக்கொள்ளுவோம். 

கல்லறைக்கு வெள்ளையடித்த காலம் போய், வெள்ளை அறைக்கு (இயேசுவை ஏற்றுக்கொண்டோர்க்கு) கல்லறை துணி போர்த்தும் காலம் இது கவனம்.

வியாழன், 12 பிப்ரவரி, 2026

சாய்வு நாற்காலி

                      சாய்வு நாற்காலி


அது ஒரு மாலை நேரம், தூத்துக்குடி முத்துநகர் கடற்கரைக்குக் குடும்பத்துடன் சென்று வந்த களைப்புடன் இருந்த நான், வீட்டினுள் நுழைந்ததும், சற்று அமர விரும்பி, கண்களால் நாற்காலியைத் துலாவித் தேடி, இறுதியில், உள்ளறையில் யாருமில்லாத இடத்தில், ஓய்வெடுப்பதற்கு வசதியாக நிலையில், காலியாகக் கிடந்த ஓர் 'சாய்வு நாற்காலியைக்' கண்டு விரைந்து சென்று அதிலே சரிந்தேன். சாய்வு நாற்காலி எனும் தொட்டிலில் கிடந்த என்னைத் தாலாட்டுவதுபோல, குழந்தைகளில் சத்தங்கள் வீட்டினுள் ஒலித்துக்கொண்டிருந்தன. களைப்பு ஒருபுறம் என் கண்களை மூடச் செய்துகொண்டிருந்தபோதிலும், காதுகள் இரண்டும் கேட்கும் திறனை இழக்குமளவிற்கு தூக்கத்திற்குள் நான் சென்றுவிடவில்லை. சுமார் முக்கால் மணிநேரம் மனைவி, மகள் மற்றும் மருமகள்கள் பேசிக்கொண்டிருந்த வார்த்தைகளுக்கெல்லாம் முயன்ற அளவு முணங்கிக்கொண்டே பதிலளித்துக்கொண்டிருந்தேன். அச்சமயம், திடீரென ஒரு பாடலுக்கு நடனமாடத் தொடங்கிய என் இளைய மருமகளைக் கண்டதும், விழிகள் விரிவடைய, கைபேசியில் அதனைப் பதிவு செய்யவேண்டும் என்ற விருப்பத்தில், சற்று தூரத்திலிருந்த கைபேசியை எடுக்க விருட்டென சாய்வு நாற்காலியை விட்டு எழுந்தபோது, சாய்வு நாற்காலியிலிருந்து, 'டக்' என்ற ஒலி எழும்ப, நாற்காலி உடைந்துவிட்டதோ என்று உடனே சற்று கீழே உற்றுப் பார்த்தேன். எனினும், கண்ணுக்கு எதுவும் தென்படாததால், கைபேசியை எடுத்தவனாக, மீண்டும் அதே சாய்வு நாற்காலியில் சரிந்தமர்ந்தவனாக, சின்ன மருமகளின் நடனத்தை கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்தேன். 

சுமார் அரை மணி நேரத்திற்குப் பின், மீண்டும் சாய்வு நாற்காலியை விட்டு நான் எழுந்தபோது, மீண்டும் 'டக்' என்ற சத்தம் கேட்க, எனது ஆடையை ஏதோ ஒன்று பிடித்து இழுத்ததைப் போன்ற உணர்வினால், திரும்பிப் பார்த்தபோது, எனது கால்சட்டை கிழிந்திருப்பதைக் கண்டேன். ஆம், நான் உட்கார்ந்திருந்த சாய்வு நாற்காலியில், மிகச் சிறிய அளவில் ஒரு இரும்பு ஆணியின் முனை வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. என்றபோதிலும், நான் அதை அதிகம் பொருட்படுத்தாது, தொடர்ந்து அந்த சாய்வு நாற்காலியை உபயோகித்துவந்தேன். ஆணியிருக்கும் இடத்தை அறிந்திருந்ததினால், அதற்கேற்றாற்போல் பொறுமையாக அமர்ந்து எழுந்து எனது ஆடையைக் கிழியாதபடிப் பார்த்துக்கொண்டேன். 

ஒருநாள், ஒரு இரவு வேளை, தனது பெரியம்மா வாங்கிக்கொடுத்த புதிய ஆடையினை உடுத்தினவளாக வீட்டினுள் வலம் வந்துகொண்டிருந்தாள் எனது மகள். நான் அமர்ந்தெழுந்த அதே நாற்காலியில் அவளும் அமர்ந்த வண்ணம் குழந்தைகளோடு விளையாண்டுகொண்டிருந்தாள். மறுநாளில், அவளது உடுப்பு ஆங்காங்கே கிழிந்துபோயிருந்ததைக் கண்ட என் மனைவி, அந்த புதிய உடுப்பு எப்படி கிழிந்தது என்று ஆராய்ந்துகொண்டிருந்தாள்; என்றபோதிலும், மனைவிக்கும் மற்றும் மகளுக்கும் விடை கிடைக்கவில்லை. அந்நேரம் அறையின் உள்ளே நுழைந்த நான், அவர்களது ஆராய்ச்சிக்கான விடையினைச் சொல்ல, 'இந்த சாய்வு நாற்காலியில் ஆணி நீட்டிக்கொண்டிருக்கிறது' என்று ஏன் முன்னமே சொல்லவில்லை? சொல்லியிருந்தால், மகளின் உடுப்பு கிழிந்திருக்காதே என்ற கேள்வியோடு கூடிய விடையினை என் மனைவியின் உதடுகள் உதிர்க்க, அங்கே வந்த எனது மனைவியின் மூத்த சகோதரர் ஒரு துணியினால் அந்த ஆணியினைச் சுற்றி, மற்றவர்கள் ஆடையைக் கிழிக்காதபடி அதனை மூடினார். இந்நிகழ்வைக் கண்ட எனது ஆத்துமாவில், 'ஆன்மீகப் பதிலொன்று தொற்றிக்கொண்டது.' 

பிரியமானவர்களே! அநேக நேரங்களில் வழியில் கிடக்கும் முள்களை நாம் அறிந்தபடியினால் அவைகளுக்கு விலகிச் சென்றுவிடுகின்றோம்; ஆனால், மற்றவர் மிதிக்கும்படி அவைகளை அவ்விடத்திலேயே விட்டுவிடுகின்றோம். ஒரு மனிதனின் தவற்றினை வெளிப்படுத்திவிடக்கூடாது என்ற எண்ணத்தில், மற்றவர்களை அந்த மனிதன் செய்யும் தவற்றில் சிக்கவைத்துவிடுகின்றோம்.  நம்மைக் காப்பது மாத்திரமல்ல, நம்மைத் தொடருவோரையும் காப்பாற்றும் பொறுப்பு நம்முடைய கரத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றதே!




வெள்ளி, 3 நவம்பர், 2023

'பூமியதிர்ச்சி'

 'பூமியதிர்ச்சி'


3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட நான், அவர்களது வார்த்தைகளிலிருந்து, 'பூமி அதிர்ச்சி' வந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். கைபேசியை எடுத்து 'google' ல் தேடிப் பார்க்க, பீஹாருக்கு அருகிலிருக்கும் நேபாளில் 6.4 ரிக்டர் அளவில் 11.32 –க்கு பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக செய்தி பதிவிடப்பட்டிருந்தது. பூமி அதிர்ச்சி வந்ததைக் காண்பிக்கும் செயலிகளை (app) கைபேசியில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் தரவுகளை அறிய முற்பட்டுக்கொண்டிருந்தேன் நான். 

வீட்டின் வெளியிலோ, திடீரென ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின்போது வீட்டில் தாங்கள் சந்தித்த அனுபவங்களையும், மற்றும் முன் நாட்களில் பூமி அதிர்ச்சியின்போது தாங்கள் சந்தித்த அனுபவங்களையும் பேசி முடித்து, ஜனசந்தடி அடங்க சற்று நேரம் பிடித்தது, மணியோ 12.00 நள்ளிரவைத் தொட்டது. ஒருபுறம் எனது மகன் பூமி அதிர்ச்சியைக் குறித்து தனது கைபேசியில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான். ஆங்காங்கே இருந்த வீடுகள் அனைத்திலும் விளக்குகளால் இரவு வெளிச்சமாகியிருந்தது. தொடர்ச்சியாக மேலும் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்ற எண்ணத்துடனும், பயத்துடனும் படுக்கையில் கிடைத்த தூக்கத்துக்குத் தூரமானவர்களாக சில நிமிடங்களைக் கழித்தவர்களாக அனைவரும் நின்றுகொண்டிருந்தோம். பூமி அதிர்ச்சி பூஜ்யமாகிவிட்டது, இனி ஒன்றுமில்லை, என்ற தைரியம் உண்டானதும், அனைவரும் வெளியிலிருந்து வீடுகளுக்குள் நுழைய, நானும், மனைவியும் மற்றும் மகனும் வீட்டிற்குள் நுழைந்தோம். வீட்டினுள் படுக்கையில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த மகளை தொந்தரவு செய்யாமல், தூக்கத்தைத் தொடர்ந்தோம். 

4 நவம்பர் 2023, காலை 7.15 மணி, தூங்கி எழுந்து அனைவரும் தேனீர் அருந்தி அமர்ந்திருந்தபோது, நான் எனது மகளை நோக்கி, 'நேற்று பூமி அதிர்ச்சி வந்தது' என்று சொல்ல, எனது வார்த்தைகளை நம்பாத அவள், உடனே படுக்கையிலிருந்து எழுந்து, தனது சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள, அடுப்பறையிலிருந்த தாயினிடத்திற்கு ஓடிச்சென்றவளாக, 'அம்மா, நேற்று பூமி அதிர்ச்சி வந்ததா?' என்று கேட்டாள். எனது மனைவியும், 'ஆம், பூமி அதிர்ச்சி வந்தது; நீ நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாய், உன்னை வீட்டிற்குள் போட்டுவிட்டு நாங்கள் வெளியே சென்றோம்' என்று சொல்ல, உடனே அவள் எங்களை நோக்கி, 'துரோகிகள் நீங்கள்' என்ற வார்த்தையை தூக்கி வீசினாள். அவளது கோபமான வார்த்தைகளைக் கேட்டவர்களாக, நாங்கள் அவளருகே சிரித்துக்கொண்டு நின்றபோது, சற்றும் தாமதமின்றி, உடனே, 'நான் நேற்றே இயேசப்பாகிட்ட எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டுட்டுதான் தூங்கினேன்' என்றாள். அவளது இந்த வரிகள் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. மகளது மனதில் ஆழமாக எழுதப்பட்டிருந்த இந்த மௌன வரிகளை, அவளது வாய் வாசித்தது, காலையிலேயே எனது காதுக்கு இன்பமாயிருந்தது. 

4 நவம்பர் 2023, இரவு 8:45 மணி, ATM க்குச் சென்று, பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த நான், அதனை வைக்கும்படியாக எனது மணிபர்சை எடுத்தபோது, அது ரூபாய் நோட்டுகளினால் நிறைந்திருந்தது; மற்றும் அதற்குள் திணிக்கப்பட்டிருந்த சில்லறைகளால் மடித்து மூடக்கூட இயலாத அளவிற்கு அதன் வயிறு புடைத்துத் தள்ளிக்கொண்டிருந்தது. சில மணி நேரத்திற்கு முன் அது காலியாக இருந்ததினால்தான் நான் ATM-க்குச் சென்று செலவிற்காக கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வந்தேன்; அப்படியிருக்க, இத்தனை பணம் எங்கிருந்து வந்தது என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, அருகிலே கீழே விழுந்து கிடந்த எனது மகளது மணிபர்ஸ் எனது கண்களில் பட, அதனை எடுத்துத் திறந்து பார்த்தபோது, அதுவோ காலியாக பரிதாபமாக வெறுமையாகக் காட்சியளித்தது. ஆலயத்திற்குச் செல்லும்போது காணிக்கை போடுவதற்காகவும், ஊருக்குச் செல்லும்போது செலவு செய்வதற்காகவும் எனது மகள் அவ்வப்போது என்னிடம் கேட்கும் பணத்தை நான் கொடுப்பதுண்டு, அவளும் என்னிடம் கேட்டு சில நேரங்களில் பணத்தை எடுத்து தனது பணப்பையில் வைத்துக்கொள்ளுவதுண்டு, சில நேரங்களில் ஏதாவது போட்டியில் அல்லது விளையாட்டில் நான் அவளிடம் தோற்றுவிட்டால் 10 அல்லது 20 ருபாயை என்னிடமிருந்து வாங்கி அதிலே சேர்த்துவைப்பதுண்டு. அப்படியிருக்க, காலியாகக் கிடந்த அவளது பணப்பையைக் கண்டதும், படுக்கையில் அமர்ந்திருந்த எனது மகளை நோக்கி, 'ஜெரின், என்ன ஆயிற்று? உனது பர்சில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்து ஏன் அப்பா பர்சில் வைத்துவிட்டாய்?' என்று நான் கேட்க, 'அந்திக் கிறிஸ்து வருவான், அப்போ உங்க பர்சில இருந்து நான் எடுத்து எனது பர்சில வச்ச பணத்த பார்த்தா, என்னை அவன் புடுச்சிக்கிடுவான்' என்றாள். எனக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை; என்றாலும், ஏதோ 'அந்திக்கிறிஸ்து' என்ற வார்த்தையை எங்கோ கேட்டிருக்கிறாள்; எனவே பூமியதிர்ச்சி வந்தபோது, அவனைக் குறித்த பயம் வந்துவிட்டது என நினைத்துக்கொண்டவனாக அவளை நோக்கி: 'ஜெரின், நீ அப்பா பர்சில இருந்து பணத்த எடுக்கிறது எல்லாம் திருட்டு இல்ல, நீ என் பர்சில இருந்து எடுக்கிறது எனக்கு நல்லாவே தெரியும், எனக்கு தேவைப்படும்போது நான் உன் பர்சில இருந்து எடுத்துக்கொள்ளுவேன், மற்றவங்ககிட்டயிருந்து தான் எடுக்கக்கூடாது ' என்று சொன்னதோடு, என் பர்சில் அவள் வைத்த அத்தனை பணத்தையும் எடுத்து மீண்டும் அவள் பர்சிலேயே வைத்தேன். ஒரு பூமியதிர்ச்சி எத்தனை பெரிய பாடத்தையெல்லாம் என் மகளுக்குப் புரியவைத்திருக்கிறது என்பது தெளிவான நேரம் அது. 


வியாழன், 2 நவம்பர், 2023

ஒட்டி வந்த அப்பம்

 ஒட்டி வந்த அப்பம்



19 மார்ச் 2017 காலை ஞாயிறு ஆராதனை, வேலூர் காந்திநகர் ஆலயத்தில் மனைவி மற்றும் எனது மூன்றரை வயது மகளுடன் பங்கேற்றேன். ஆராதனை நேரத்தில் மகள் அதிகம் தொந்தரவு செய்து கொண்டிருந்தாள். திருவிருந்து வேளை வந்தது, மகளது தொந்தரவினால் மனைவி திருவிருந்தில் பங்கேற்காத நிலையில் காணப்பட்டாள். நான் எழுந்து சென்று திருவிருந்திற்காக முழங்கால் படியிட்டேன். போதகர் எனக்கு அப்பம் கொடுக்க முயற்சித்தபோது, அவரது கரத்தில் இரண்டு அப்பங்கள் ஒன்றோடொன்று ஒட்டியவாறு வந்தன. அந்த இரண்டு அப்பங்களையும் தனித்தனியாகப் பிரித்து ஒன்றை மட்டும் எனது கரத்தில் கொடுக்க போதகர் முயற்சித்தார், என்றபோதிலும் போதகரால் இயலாமல் போகவே, இரண்டு அப்பங்களையும் எனது கரத்தில் கொடுத்து விட்டுச் சென்றார். பந்தியிலிருந்து நான் எழுந்து மனைவி அருகில் வந்ததும் இரண்டு கிடைத்ததற்கான ரகசியம் புரிந்தது; தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்ற வசனம் விளங்கியது.

சாத்தியமில்லாதது சாத்தியமானது

 சாத்தியமில்லாதது சாத்தியமானது



2016 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தென்னிந்திய திருச்சபை ஒன்றின் காலை ஆராதனையில் செய்தியளிக்கும்படியாக மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன். நாங்குநேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் கடந்த பள்ளம் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானேன்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின், பல மாதங்கள் கழித்து, எழுந்து நடமாடும் பெலன் வந்ததும், சேதப்பட்டுக் கிடந்த இருசக்கர வாகனத்தை சரிசெய்ய விரும்பினேன். என்றபோதிலும், அச்சமயம் அதற்கான பணம் இல்லாததினால், அருகிலுள்ள கடைக்கு வாகனத்தை கொண்டு சென்று, எவ்வளவு செலவாகும் என்ற தோராயமான ஒர் மதிப்பீட்டைத் தரும்படி கேட்டுக்கொண்டேன். கடை ஊழியர்களோ,  வாகனத்தை கடையில் விட்டு விட்டுச் செல்லுங்கள், இரண்டு நாட்களுக்குள் மதிப்பீடு தருகிறோம் என்றார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து கடையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 'உங்கள் வாகனத்தின் வேலை முடிந்துவிட்டது, உடனே வந்து எடுத்துக்கொள்ளுங்கள்' என்று மறுமுனையிலிருந்து வந்த குரலைக் கேட்டதும், அதிர்ந்துபோனேன். மதிப்பீடுதானே கேட்டிருந்தேன், வேலை செய்யும்படி நான் சொல்லவில்லையே என்றேன். 'சார், இரண்டு நாட்களாக கடையில் வாகனங்கள் பழுது பார்க்கும் வேலை அதிகம் நடைபெறவில்லை, எனவே உங்கள் வாகனத்தின் வேலையை உடனே முடித்துவிட்டோம் என்று உற்சாகமாகச் சொன்னார் கடை ஊழியர். 

கையில் காசு இல்லாமல் நின்றுகொண்டிருக்கும் நேரத்தில், நான் 'நிற்பது கூட பிடிக்காமல், காலை வாரி கீழே விழவைத்துதிட்டார்களே' என்று உதறத்தொடங்கிய என் உள்ளத்தின் சத்தத்தை கடைக்காரரிடம் உதடுகள் சொல்லவில்லை. என்றாலும், எவ்வளவு பணம் என்று கேட்டபோது, 11584.00 ரூபாய் என்ற அடி செவியில் விழுந்தது.

சாத்தியமே இல்லை என்பதை அறிந்துகொண்டவனாக, என்ன செய்வது? என்ற கேள்வியே மாத்திரமே மனதில் கேட்டுக்கொண்டு, வீட்டில் படுத்திருந்தேன். 

கர்த்தரின் கைவிரல் எழுத்துக்கள் ராஜாவை கலங்கப்பண்ணினது போல, கடைக்காரர் சொன்ன 11584.00 ரூபாய் என்ற வார்த்தைகள் என்னைக் கலங்கப்பண்ணினது. வாகனத்தை யாரிடமாவது விற்றுவிட்டு, அவர் தரும் தொகையினைக் கொண்டு வாகனத்தை எடுத்து வாங்குபவரிடம் கொடுத்துவிடவேண்டியதுதான் என்ற முடிவினையே என் மனம் இறுதியாக எடுத்தது.

விற்பனை செய்வதற்காக தகுந்த நபரைத் தேடிக்கொண்டிருந்தேன். இரண்டு நாட்கள் ஆனது. கடையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துவிடுமோ என யோசித்துக்கொண்டேயிருந்தேன். 

அப்போது திடீரென அயல்நாட்டிலிருந்து ஒர் தொலைபேசி வந்தது. மகளுக்குப் பிறந்தநாள், எனவே  யாராவது ஒரு ஊழியருக்கு காணிக்கை கொடுக்க நினைத்தோம், கடைசியாக உங்கள் பெயர் தான் நினைவுக்கு வந்தது, எனவே, இரண்டு நாட்களுக்கு முன் உங்களது வங்கிக் கணக்கில் 12000 ரூபாய் போட்டிருக்கிறோம், கிடைத்ததா? என்று அந்த சகோதரர் என்னிடத்தில் கேட்டபோது, ''பார்க்கவில்லை'' என பதில் சொன்னேன்.

அந்த சகோதரருடன் பேசி முடித்ததும், ATM க்குச் சென்று பார்த்தபோது, ரூபாய் 12000 எனது கணக்கில் வந்திருந்தது. அதனை எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்றேன். எனது வாகனத்தை மெக்கானிக் ஒருவர் தள்ளிக்கொண்டு வந்து, பெட்ரோல் போட்டுக்கொள்ளுங்கள் என்று என்னிடம் கொடுத்தார். 11584 ரூபாயை கடைக்குக் கொடுத்துவிட்டு, மீதமிருந்த பணத்திற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு வீடு திரும்பினேன். 

'ஆபத்திலும் அவர் ஆயத்தம் செய்பவர் என்பதை என் மனது அன்று புரிந்து கொண்டது.'

பீடியுடன் நின்ற பணியாளர்

பீடியுடன் நின்ற பணியாளர்


23 ஜுலை 2017, தமிழகத்தின் ஆலயம் ஒன்றில் செய்தியளிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். சகல ஆயத்தங்களுடன் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றேன். அதுவரை அந்த ஆலயத்திற்கு செய்தியளிக்கும்படி நான் சென்றதில்லை. எனவே, அழைத்தவர்கள் சொன்ன அடையாளங்களின்படி அந்த ஊரைச் சென்றடைந்து ஆலயத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். இருபுறமும் வியாபாரத்தை மும்முரமாய்ச் செய்துகொண்டிருக்கும் கடைகள் அமைந்திருக்கும் சாலையின் வழியாக, இடது வலது புறம் திரும்பிப் பார்த்தவனாக, மெல்ல ஊருக்குள் சென்றுகொண்டிருந்தேன். 

அப்போது, திடீரென கண்ணில் பட்ட ஒர் ஆலயத்தைக் கண்டு, செய்தியளிக்கவேண்டிய ஆலயம் இதுவாகத்தானிருக்குமோ என எட்டிப் பார்த்தவனாக சாலையின் அடுத்த பக்கத்தில் கொண்டிருந்தேன். ஆலயத்தின் முன்புறக் கோட்டைச் சுவரின் இரும்பு வாசலுக்கு வெளியே ஓர் மனிதர் பீடி குடித்துக்கொண்டு நின்றார். அந்த மனிதருக்கும் ஆலயத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்கப்போகிறது என்று கணித்தவனாக நின்றுகொண்டிருந்தேன்.

அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்த என்னை பீடி குடித்துக்கொண்டிருந்த மனிதர் கண்டதும், பீடியைக்  குடித்துக்கொண்டே என்னை நோக்கி வந்தார். 'நீங்க இந்த கோயிலுக்கா வந்திருக்கீங்க?' என்று என்னிடம் கேட்டார். இவர் ஏன் என்னிடத்தில் கேட்கிறார்? என்ற கேள்வி உள்ளத்தின் ஒரு புறத்தில் எழுந்தாலும், உதட்டளவில் 'ஆம்' என்று பதில் சொன்னேன். எனது பதிலைக் கேட்டதும், இன்னும் பக்கத்தில் வந்தார். கையிலிருந்த பீடியை கடைசியாகக் புகைத்து முடித்தபின்பு, அதனைக் கீழே போட்டு செருப்புக் காலால் நசுக்கி அணைத்தார். 

இத்தனையாய் விசாரிக்கின்றீர்களே, நீங்கள் யார்? என்று அந்த மனிதரைக் கேட்டபோது, 'நான்தான் இந்த கோவிலின் கோயில்குட்டியார்' என்று பதில் வந்ததைக் கேட்டு, அதிர்ந்துபோனேன். 'பிரசங்கியார் வருவார் பார்த்துக்கொள்ளுங்கள் என்று என்னிடத்தில் சொல்லியிருந்தார்கள், எனவேதான் வெளியே நின்று உங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்' என்றார். பிரசங்கியாருக்கு முன் பீடி குடித்ததைக் குறித்து எந்த ஒரு பதட்டமும் அவர் முகத்தில் காணப்படவில்லை. சற்று நேரம் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர், 'தான் ஒரு இந்து மனிதர் என்றும், விக்கிரகங்களை வணங்குபவர் என்றும், வேலையில்லாதிருந்த தனக்கு இந்த ஆலயத்தில் கோயில்குட்டியாராக வேலைபோட்டுக்கொடுத்தார்கள் என்றும், எனது மனைவி கோவிலை சுத்தம் செய்வாள், என்றாலும், பெண்கள் ஆலயத்தின் எல்லா பகுதிகளுக்கும் போகமுடிவதில்லையே, எனவே, சிலுவை இருக்கும் உட்பகுதியை நான் சுத்தம் செய்துகொள்ளுவேன். தனக்கோ எல்லா கடவுள்கள் மேலும் நம்பிக்கை உண்டு என்றும் சொன்னார். நான் பிரசங்கிக்கும் முன்னதாகவே, கோயில்குட்டியார் எனக்குச் செய்த பிரசங்கம் என்னை நொந்துபோகச் செய்தாலும், வந்த வேலையான பிரசங்கத்தை ஆவியானவரின் பெலத்தால் செய்துமுடித்து, ஆலயத்தின் இத்தகைய அவலநிலையைக் கண்டு சோகமான முகத்துடன் வீடு திரும்பினேன். 

 

புதன், 25 அக்டோபர், 2023

எதைத் தெரிந்துகொள்வது?

 எதைத் 

தெரிந்துகொள்வது? 

www.sinegithan.in


செப்டம்பர் 30, சனிக்கிழமை மாலை 4:59, எனது WhatsApp -ல் 'இரண்டு நாட்கள்' LOP - Loss of pay என்ற செய்தி நான் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து அனுப்பபட்டிருந்தது. அந்த மாதத்தின் சில நாட்கள் நான் மிகவும் சுகவீனமாகக் காணப்பட்டேன்; என்றாலும், பணியின் நிமித்தம் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்ற தவிர்க்க இயலாத சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து, எனது மனைவியும் சுகவீனத்தில் விழுந்ததால், சமையல் முதல் பிற வீட்டுக் காரியங்கள் அனைத்தையும் கவனிக்கும் பொறுப்பு என்மேல் விழுந்தது. சில நாட்களில், எனது மகளும் உடல் சுகவீனமானபோது, அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டியதிருந்ததினாலும் மற்றும் எனது மனைவி தவிர்க்க இயலாத பணியின் நிமித்தம் அலுவலகத்திற்குத் தொடர்ந்து செல்ல நேரிட்டபோது, வீட்டில் தனியே இருக்கும் மகளைக் கவனித்துக்கொள்ளவேண்டியதிருந்தபடியினாலும், அவ்வப்போது அலுவலகத்திற்குத் தாமதமாக வரும் நிலைக்குத் தள்ளப்பட்டேன் நான்.  

நேரந்தவறாமல் தினந்தோறும் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்பதில் மிகுந்த கரிசனையோடிருப்பவன் நான். என்றபோதிலும், இந்த மாதத்தின் சூழ்நிலையோ தன் வலைக்குள் என்னை சுருட்டிவைத்துக்கொண்டது. LOP - Loss of pay செய்தியைக் கண்டதும், 'மனைவி மற்றும் மகள் சுகவீனமாயிருந்தபோது, சில நாட்கள் அலுவலகத்திற்குச் செல்லாமல் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்திருந்தால், LOP - Loss of pay -ஐ தவிர்த்திருக்கலாமே என்ற  எண்ணத்துடன் சற்று கவலையுடன் நான் இருந்தபோது, மறுநாளில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 'அண்ணன், நல்லா இக்கிறீங்களா, உங்களுக்கு ஒரு கிப்ட் அனுப்பியிருக்கிறேன், பெற்றுக்கொண்டதும் பதிலளிக்கவும்' என்று ஒரு சகோதரரின் குரல் அன்போடு மறுமுனையிலிருந்து ஒலிக்க, விலைமதிப்பான ஒன்றை அவர் அனுப்பித்தந்திருப்பதை நினைத்து ஆனந்தம் அந்நேரம் என் மனதை நிறைத்தது; அத்துடன், அவர் சொன்னதுபோலவே, 'கிப்ட்' –ம் என் கரங்களை வந்து அடைந்தது. என்றபோதிலும், இரவு படுக்கையிலிருந்தபோது, மீண்டும் LOP - Loss of pay என்ற செய்தி எனது மனை ஆக்கிரமித்தது. இரண்டு நாட்கள் உதவித் தொகை போய்விட்டதே என்ற கவலையில் அல்ல; மாறாக, ஊழியன் நான் இந்த வரிசையில் வந்துவிட்டேனே என்ற வருத்தத்தினால் உண்டான கவலை அது என்று மாற்று கோணத்தில் எனது மனம் 'நான் படுகின்ற கவலை சரியானதுதான்' என்று எனக்குள் சொல்லிக்கொள்ள, மறுபுறத்திலோ, என்னை சீர்ப்படுத்தும் சிந்தையோடு கர்த்தரின் மெல்லிய குரல் என் மனதோடு இடைபட்டதை உணர்ந்தேன். அந்த இரண்டு நாள் LOP - Loss of pay ஐ நினைத்து கவலைப்படப் போகிறாயா? அல்லது நான் உனக்கு கொடுத்திருக்கும் இந்த 'கிப்ட்' ஐ நினைத்து சந்தோஷப்படப்போகிறாயா? என்ற கர்த்தரின் வார்த்தை என் இதயத்தை வந்தடைய, கையிலிருந்த கவலையை தூக்கி எறிந்துவிட்டு, விலைமதிப்புள்ள 'கிப்ட்' ஐ கரத்திலெடுத்துக்கொண்டேன். 

நாமும் அநேக நேரங்களில், தேவன் கொடுத்திருக்கும் விலைமதிப்புள்ள மகிழ்ச்சியைக் காண இயலாதவர்களாக, கவலையிலேயே நம்மை மூழ்கடித்துவிடுகின்றோம். எதைத் தெரிந்துகொள்ளப்போகின்றாய்? என்ற கேள்விக்கு மாம்சத்தைச் சார்ந்தே பதில் எழுதுகின்றோம். தூசியைப் போன்றும், துகள்களைப் போன்றும் நம்மை விட்டுப் பறந்துபோகின்றவைகளைக் குறித்த கவலையினால் நம்மை நிறைந்தால், தேவன் தரும் சந்தோஷத்தை வாழ்க்கையில் அனுபவிக்க இயலாமற்போய்விடும். 


புதன், 11 அக்டோபர், 2023

'வாழ்க்கைக்கு வழக்கு'


 

www.sinegithan.in


அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன். 

சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே, அந்தக் குழந்தை தவழுவதைப் பார்த்து ரசித்தவராகத்தான் நின்றுகொண்டிருந்தார். அந்த குழந்தை நிச்சயம் அவருடையதுதான் என்பதை உறுதி செய்துகொண்ட நான், அவரை நோக்கி, 'ஐயா, கடையில் தரைப்பகுதியில் அனைவரும் காலணிகள் அணிந்து நடந்துசெல்லுவார்கள்; எனவே, குழந்தையின் உடல் அசுத்தமாகும்' என்று சொல்ல, எனது வார்த்தைகள் முடியுமுன், அந்த முதியவர் சற்றும் யோசிக்காமல் மறுமொழியாக என்னை நோக்கி, 'மிட்டி சே ன ஆயா, பகலே மிட்டி மே சல்னே தீஜியே' (மண்ணிலிருந்துதானே வந்தான், மண்ணிலே முதலில் நடக்கட்டும்) என்றார். அந்நிய கடவுளை வணங்கும் அந்த மனிதரின் வாயிலிருந்து வந்த இந்த அழகான வார்த்தைகள் சில நிமிடங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், அந்த முதியவரைத் தொடர்ந்து 'மண்ணைத் தாண்டி மறுவுலகு இருக்கிறது' என்று ஆவியானவர் பேசினபோது, 'அந்த முதியவரின் பார்வை மண்ணிலிருந்து மண்ணை நோக்கியதே' என்பதை எனக்கு புரியவைத்தது. 'மண்ணாக, மண்ணிலிருந்துகொண்டு, மண்ணை நோக்கியே ஓடும் மக்கள்' இன்றைய நாட்களிலும் அநேகர் உண்டே.  

மண்ணினாலே நாம் உருவாக்கப்பட்டிருந்தாலும், மண்ணான உடலிலே உயிராக இந்த உலகிலே நாம் உலாவிக்கொண்டிருந்தாலும், நம்முடைய வாழ்க்கை மண்ணுக்குரியது மட்டுமல்ல. தண்ணீரைக் கொண்டுசெல்ல பாத்திரம் ஒன்று தேவை என்பதுபோல், நம் உயிரைச் சுமந்துசெல்லும் பாத்திரமே நமது உடல். தண்ணீரைக் குடித்ததும், பாத்திரத்தைத் தரையில் வைத்துவிடுவதுபோல், வாழ்க்கையை வாழ்ந்து முடிந்ததும், உடலை வைத்துவிட்டுத்தான் போகவேண்டும் நாம். வாகனத்தை இயக்க எரிபொருள் தேவை என்பதுபோல், உடலை இயக்க உள்ளே இருப்பதுதானே உயிர். எரிபொருளை இறைவன் எடுத்துக்கொண்டதும், எருவாகிப்போகுமே உடல்; என்றாலும், வாகனமும் (உடலும்), எரிபொருளும் (உயிரும்) ஒன்றாக இருக்கும்போது; வாகனத்தைக் கொண்டு நாம் செய்த செயல்களே, 'நமது வாழ்க்கையாகத் தீர்க்கப்படும்'. அந்த வாழ்க்கைக்குத்தான் வழக்கு; அதுதான் 'நியாயத்தீர்ப்பு'.


புதன், 27 செப்டம்பர், 2023

உருப்படியான புள்ள!

உருப்படியான புள்ள!


தூத்துக்குடியிலுள்ள வங்கி ஒன்றில் எனது மனைவி பெயரில் கணக்கு ஒன்று தொடங்குவதற்காக ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். முந்தின நாளே வங்கிக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, நிரப்பி, புகைப்படம் இல்லாததினால், அடுத்த நாள் காலையில் வங்கிக்குச் செல்லும் வழியில் உடனடியாக ஏதாவது ஸ்டூடியோ ஒன்றில் புகைப்படம் எடுத்து படிவத்துடன் இணைத்துக்கொள்ளலாம் என நினைத்தேன். அடுத்த நாள் வங்கிக்குச் செல்லும் வழியில் ஏதாவது ஸ்டூடியோ இருக்கிறதா என தேடிக்கொண்டே சென்றேன்; அப்பொழுது "JPN Studio உடனடி போட்டோ பிரின்ட் கிடைக்கும்" என்ற போர்டு கண்ணில் பட்டது. அதன் உள்ளே நுழைந்தேன், பெரியவர்கள் ஒரு சிறிய பையன் உட்கார்ந்திருந்தான், அருகே இரண்டு அமர்ந்திருந்தனர். நான் அச்சிறுவனிடம், "போட்டோ எடுக்கனும், உடனே பிரின்ட் வேணும் கிடைக்குமா" என கேட்டேன். அவன் "ஓ கிடைக்குமே" என பதிலுரைத்தான். நான் யார் எடுப்பார்கள்? என கேட்டதற்கு "நான்தான்” அவன் பதில் சொன்னபோது, சற்று வியந்துபோனேன். அப்படியே அவன் என அமர்ந்திருந்த இருக்கையின் உள்ளே எட்டிப் பார்த்தேன். உள்ளே ஒரு கம்ப்யூட்டர் அருகே அமர்ந்திருந்த போடும் கருவி இருந்தன; அருகே மற்றும் போட்டோ பிரிண்ட் போடும் வாடிக்கையாளர்களின் புகைப்படத்தை சரியான அளவில் கத்தரியினால் வெட்டிக்கொண்டிருந்தான். இவங்களுக்க முடிச்சிட்டு வந்துடுரேன் என்றான் என்னிடம். நான் சற்று பேச்சு கொடுத்தேன், பெயர் அந்தோணி, ஆறாம் வகுப்பு படிக்கிறான். சுட்டித்தனமான பேச்சு, வாடிக்கையாளர்களை வளைத்துப்போடும் அவனது குறும்புத்தன பேச்சிற்கு ஈடுகொடுத்து நானும் பேசிக்கொண்டிருந்தேன். அப்பா ஆர்டருக்கு போட்டோ எடுக்க போயிருக்காரு, அப்பா இல்லாத சமயத்துல நான்தான் போட்டோ எடுப்பேன், ஸ்கூல் லீவுல அப்பாவுக்கு உதவி செய்வேன் என்றான்.

அந்த வாடிக்கையாளர்களை அனுப்பிய பின்னர், உள்ளே வாங்க என எங்களை அழைத்தான். உள்ளே சென்றபோது, ஸ்டூல் ஒன்றில் உட்காரச் செய்து, முதிர்ந்த புகைப்படக்காரர் போல, அக்கா இங்க பாருங்க, கழுத்த கொஞ்சம் கீழ, மேல, லேசா தூக்கி எனச் சொல்லி புகைப்படத்தினை எடுத்து, போதுமா, நல்லா இருக்கான்னு பாருங்க என்றான். அப்படத்தில் நாங்கள் திருப்தியானபோது உடனே சென்று பிரிண்ட் போட்டு கொடுத்தான்.

வாலிபர்களான பின்னும் குடும்பத்திற்கும், பெற்றவர்களுக்கும் உதவி செய்யாமல், அவர்களது பணத்தில் ஊர் சுற்றிக்கொண்டு, ஊதாரிகளாக அலையும் எத்தனையோ வாலிபர்களை ஒப்பிடுகையில், இச்சிறுவனைப் பெற்ற பெற்றோர் பாக்கியசாலிகள் என கண்டு வியந்தேன்; உருப்படியான புள்ள!




இரண்டு மன்னர்கள்


 
இரண்டு மன்னர்கள்


குடும்பமாகச் சுற்றுலா சென்றிருந்தோம், கன்னியாக்குமரி, திற்பரப்பு அருவி, பத்மநாதபுரம் அரண்மனை என்பது எங்களது பயண வரிசை. அதனைத் தொடர்ந்து, அலுவலக கூடுகைக்காகக் குன்னூர் சென்றிருந்தோம். இந்த பயணங்களின்போது, மறக்க இயலாது எனது நெஞ்சில் நின்ற இரண்டு மனிதர்களைப் பற்றிய கட்டுரை இது. 

பத்மநாதபுரம் அரண்மனையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கடைசியாக களைப்புடன் வெளியேறும் வழியில் வந்துகொண்டிருந்தோம். சற்று இளைப்பாறலாம் என தோட்டத்தை ஒட்டிய அரண்மனையின் உட்புற படிக்கட்டு ஒன்றில் குடும்பத்தினரோடு அமர்ந்தோம். அப்பொழுது வயதான ஒரு நபர் அவ்வழியே உள்ளே நுழை வாசலின் வழியே வந்துகொண்டிருந்தார். கையில் இரண்டு பைகள், சட்டை லுங்கி அணிந்திருந்தார். அவர் படியில் ஏறி உள்ளே நுழையும்போது, அங்கு அமர்ந்திருந்த எங்களது குடும்பத்தின் சின்னஞ்சிறு மொட்டுக்களைப் பார்த்துச் சிரித்தார்; அவர் யார்? என்பதை அறியாத குழந்தைகள் பதிலுக்குப் பாசம் தரத் தயங்கியதை நான் உணர்ந்துகொண்டேன். பின்னர் என்னிடத்தில், 'இது உங்க பிள்ளைகளா?' என்று கேட்டார். நானோ, எனது மகனை மட்டும் காட்டி, இவன்தான் என்னுடைய பையன், இவர்கள் எனது குடும்பத்தின் பிள்ளைகள் என அடையாளம் சொன்னேன். நீங்க யாரு? என நான் கேட்க, நான் இங்கே வேலை செய்கிறவங்களுக்கு டீ போட்டு கொண்டுவந்து கொடுப்பேன், டீ குடிக்கிறீங்களா? என கேட்டார். பலர் இருப்பதால் பரவாயில்லை என்றேன் நான். அந்த முதியவரின் புன்சிரிப்பும், அளவளாவலும், விசாரித்துப் பேசிய விதமும் மற்றும் குழந்தைகளோடு கொஞ்ச முற்பட்டதும், அரண்மனையில் எங்களுக்குக் கிடைத்த அற்புதமான ஓர் வரவேற்பு. பத்மநாதபுரம் அரண்மனையில் இன்று அவர்தான் மன்னர் என என் உள்ளம் ஒத்துக்கொண்ட நேரம் அது. நினைவில் நின்ற அவரை எனது குடும்பத்தினருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். 



ஜெம்ஸ் ஸ்தாபனத்தின் கூடுகை ஒன்றில் பங்கேற்பதற்காக குன்னூர் சென்றிருந்தேன். இரண்டு நாட்கள் கிறிஸ்த விடுதி  ஒன்றில் தங்கியிருந்தேன். நல்ல உணவுகள் கிடைத்தன, சுவையாகவும் இருந்தன. நான் சுவைத்து உண்ணும் இந்த உணவின் சமையலுக்குச் சொந்தக்காரர் யார்? என்பதை அறிய எனது மனம் விரும்பியது. அப்படியே, ஒருநாள் காலையில் உணவினை உட்கொண்ட பின்னர், சமையல் அறைக்குள் நுழைந்தேன் நான். சிறிய அறை அது; யார் சமைக்கிறார்கள் என அங்கே விசாரித்தேன்; உடனே, நான்தான் என்று ஒரு முதியவர் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார். சாப்பாடு நன்றாக இருக்கிறது, அதனால சமைக்கிறது யாருன்னு பார்க்க ஆசைப்பட்டேன் அதான் வந்தேன் என்றேன் அவரிடம். அவர் வாங்க என பாசத்தோடு என்னை அழைத்ததோடு, என்னை சமையலறையில் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அச்சமயம் அவரைப் பற்றி சற்று விசாரிக்கத் தொடங்கினபோது, அவர் என்னிடத்தில்...

என் பெயர் கோபாலகிருஷ்ணன், பாரம்பரிய பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். சுமார் இருபது ஆண்டுகளாக மைசூர் அரண்மனையில் சமையல்காரராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அச்சமயத்தில், இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நிம்மதி இல்லாமல் வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதும் நிம்மதி கிடைத்ததால், தொடர்ந்து அவரை உறுதியாகப் பற்றிக்கொண்டேன். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னர், எனது பெயரை லாரன்ஸ் என மாற்றியிருக்கிறேன். எந்த ஆலயத்திற்குச் செல்வது என்பதை அறியாதிருந்ததினால், அருகிலிருந்த ரோமன் கத்தோலிக்கக் கோவிலுக்குச் செல்லத் தொடங்கினேன். இங்கே நான் ஒருவனாகத்தான் சமைக்கிறேன் என்றார். சபைகளின் வித்தியாசத்தைக் கூட அப்போது அவர் சரியாக அறிந்திருக்கவில்லை; ஆனால், இயேசு கிறிஸ்துவை அறிந்திருந்தார். அவருடனான உரையாடலில், அவர் யாருடைய வற்புறுத்துதலின் பேரிலும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. தானே தேடி கண்டுபிடித்துக்கொண்ட தாகம் அவரது தொனிகளில் தென்பட்டது. தானாக நிம்மதியின் வழியினைத் தேடி அறிந்துகொண்டாலும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவில் இன்னும் சரியாக நடத்தப்படவில்லை என்பதை நான் அறிந்துகொண்டேன். பதினைந்து ஆண்டுகளாக அங்கு சமைத்துக்கொண்டிருக்கும் அவரது உணவினைச் சுவைத்திருப்பவர் பலர்; ஆனால், அவரது வாழ்வுக்கு சுவையூட்ட ஒருவர் தேவை என்று உணர்ந்த நான், என்னையும் ஒரு மிஷனரியாக, கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவனாக அறிமுகப்படுத்திக்கொண்டு, அவருடனும் ஆவிக்குரிய சில காரியங்களைப் பகிர்ந்துகொண்டு, பாசத்துடன் விடைபெற்றேன். அவரது உணவினால் திருப்தியான நான், எனது வார்த்தைகளால் அவரை திருப்திப்படுத்தின தருணம் அது. அந்த சமையலறையில் அன்று அவருக்கு நான் சமையல்காரன். 

பல நேரங்களில் சுவைமிக்க பலவற்றிற்குச் சொந்தமானவர்களை நாம் மறந்துவிட்டு, உணவை மட்டும் சுவைத்துவிட்டு வந்துவிடுகின்றோம். நமது வாழ்க்கைக்குச் சுவையூட்டும் சொந்தக்காரர்களை நாம் அடையாளம் கண்டிருக்கிறோமா? அவர்கள் யார் என தெரியுமா? அவர்களை வாழ்த்தியிருக்கிறோமா? எத்தனையோ பேர் அவ்வப்போது வாழ்வில் இடையே வந்துநமக்கு மணமூட்டி மகிழவைக்கின்றனரே, அவர்களைக் குறித்த அறிமுகம் அவர்களது முகத்தை மலரச் செய்யும். 


செவ்வாய், 25 அக்டோபர், 2022

தூளியில் தூரமான தூக்கம்



(அனுபவம்)
 

    அக்டோபர் 21, 2022, குளிர்காலத் தொடக்க நாட்களின் கருக்கலாகிக்கொண்டிருந்த மாலை நேரம், என்னுடைய வீட்டிற்கு வருகை தந்திருந்த எனது மனைவியின் வாலிபத் தோழிகளான சக ஆசிரிய ஊழியர்களை, அவர்கள் தங்கியிருந்த ஜெம்ஸ் பள்ளி மாணவர்கள் விடுதி வரைச் சென்று விட்டு விட்டு வரும்படியாக எனது மனைவி, மகளுடன் சென்றுகொண்டிருந்தோம்; எங்களுடன், எங்களது வீட்டின் அருகே தங்கியிருக்கும் மற்றொரு சக ஊழிய சகோதரியும் தனது பன்னிரெண்டாம் வகுப்பினை நிறைவுசெய்திருக்கும் மகளுடன் வந்திருந்தார். தோழிகளை அவர்களது வசிப்பிடத்தில் விட்டு விட்டு, சக ஊழியரான சகோதரி மற்றும் அவரது மகளுடன் நானும் எனது மனைவியும், உரையாடிக் கொண்டே வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது, பன்னிரெண்டாம் வகுப்பினை நிறைவு செய்திருந்த அந்த சக ஊழியச் சகோதரியின் மகளை நோக்கி, 'என்னம்மா, என்ன படிக்கப் போற? வானத்துக்கு ஏறணும்னு திட்டம்போட்டாத்தான், பூமியிலையாவது உட்கார முடியும்; அதனால, உயர்ந்ததா படிக்க யோசி' என்று ஆலோசனை சொன்னேன் நான். ஆலோசனையின் வாக்கியத்தை முடித்ததும், பின்னிட்டுப் பார்த்தபோது, மிக அருகில், சகோதரர் ஒருவர் தனது மனைவியுடன் நடந்து வந்துகொண்டிருந்தார். அவரைக் கண்டதும், சிரித்தவாறு, விசாரித்த நான், 'அந்த மாணவிக்கு என்ன ஆலோசனை சொன்னேன் என்பதை மீண்டும் அவரிடத்தில் சொல்லியவாறு நடந்தவனாக வீடு வந்தடைந்தேன். 

      இரவு சுமார் 11:10 மணி, படுக்கையில் உடல் அசதியாகவும், அமைதியாகவும் கிடந்தபோதிலும், சிந்தனையோ சிதறிக் கிடந்தது. உறக்கம் வர அதனை மீண்டும் ஒன்றிணைப்பது என்பது இயலாததாகவே தோன்றிக்கொண்டிருந்தபோது, அந்த நாளில் நடைபெற்ற நிகழ்வுகளில், நினைவில் நிற்பவைகளை அசைபோடத் தொடங்கியது என் மனது. அப்படி அசைபோட்டுக்கொண்டிருந்த தருணத்தில், திடீரென அசையாமல் நின்றபோது, 'உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே; தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?' (பிரசங்கி 5:6) என்ற வசனத்தோடு, 'நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்' (ஏசாயா 14:13-15). 'நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்' (ஒபதியா 1:4) என்ற தேவன் ஞாபகமூட்டிய வசனங்கள், நான் தவறிய தருணத்தை நினைவறியச் செய்தன. 

'வானத்துக்கு ஏறணும்னு திட்டம் போட்டாத்தான், பூமியிலையாவது உட்கார முடியும்' என்று அந்த மாணவிக்கு ஆலோசனையாக நான் கூறிய வார்த்தைகள், 'வானம் எனக்குச் சிங்காசனம்' (ஏசாயா 66:1) என்ற வசனத்திற்கு விரோதமானதாகவும், 'நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்' என்று சொன்ன தள்ளப்பட்டுப்போன தூதனுடைய வார்த்தைகளுக்கு ஒத்திருப்பதையும் உணந்து, ஆண்டவரிடத்தில் அறிக்கை செய்தேன். அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத்தேவன் பகிர்ந்தவிசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும் (ரோமர் 12:3) என்ற செய்தியும், மெல்லிய சத்தமாய் என் மனதை வந்து சேர்ந்தது. உள்ளத்தில் இருக்கும் உணர்விற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தினேன்; எனது உதறிய உதடு, சிதறிய சிந்தனை, தவறிய பாதையினைப் புரிந்துகொண்டேன்; தூரத்திலிருந்த நித்திரை என்னை தூளிலேற்றிக்கொண்டது.  


ஞாயிறு, 17 அக்டோபர், 2021

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

 

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்






டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன்.

மனைவி வீடு வந்து தேனீர் தந்து, மீண்டும் ஆலயம் சென்றாள். தேனீர் அருந்தி, மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு சுமார் 10 நிமிடங்கள் படுக்கையில் சரிந்தேன். மனமோ என்னை ஆலயத்திற்கு இழுத்தது. அதனை அடக்கிக்கொள்ள இயலாது, மீண்டும் எழுந்து, ஆலயத்தை நோக்கி நடந்து சென்றேன்; பிரசங்கம் ஆரம்பித்திருந்தது. உள்ளே நுழைந்து  இருக்கையில் அமர யோசித்தவனாக. களைப்புடன், ஆத்தும பசியுடன் ஆலயத்தின் வெளியிலேயே நின்றுகொண்டு, காதுகளில் விழும் சத்தத்தைக் கேட்டவனாக  ஆத்தும ஆகாரத்தை உண்டுகொண்டிருந்தேன். சகோ.வள்ளிக்குட்டி தாமதங்களைக் குறித்துப் பிரசங்கித்து;  துரிதமாகச் செயல்படவேண்டிய காலத்தில் உள்ளோம் என்பதை வசனங்களின் வாயிலாக விளக்கிக்கொண்டிருந்தார்.
 
அப்போது, ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தின் ஊழியர்கள் இருவர் அவ்வழியே நடந்து வர, 'நான் வெளியே நிற்பதைக் குறித்து அவர்கள் என்ன நினைப்பார்களோ!' என் உணர்வில், நானாகவே அவர்களிடத்தில், எனது நிலையினைச் சொல்லி அவர்களுக்குப் புரிய வைத்தேன். ஏதாவது உதவி தேவையா? என அவ்விருவர் என்னிடத்தில் அன்பாக விசாரித்தபோது, 'நன்றி, இப்போது நலம், இடையில் உள்ளே சென்றால் பிரசங்கத்தின் நடுவே இடையூறாயிருக்கும், அத்துடன் இன்னும் களைப்பு முழுவதும் தீரவில்லை எனவே வெளியே நிற்கிறேன்' என்றேன்.
 
அப்போது, காதிலே பிரசங்கம் விழுந்துகொண்டிருக்க, கண்ணிலோ எனக்கு முன்னே நடக்கும் ஓர் உயிரின் காட்சி பதிந்துகொண்டிருந்தது. ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த  மலர்களின் மேல், ஆனந்தமாய்ப் பறந்துகொண்டிருந்த மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சி ஒன்று தவறுதலாக செடிகள் நிற்கும் சகதிகள் நிறைந்த தரையிலே இறங்கி சகதியின் மேல் அமர்ந்தது. ஓரிரு வினாடிகள் கழித்து, மீண்டும் அது பறக்க முற்பட்டபோது, அதன் சிறகுகள், பறக்க இயலாதபடி அங்கிருந்த சகதியினால் முடக்கப்பட்டது. ஆம், ஆனந்தமான அதற்கு அது அதிர்ச்சியின் நேரம். இதனைக் கண்ட நான், எனது கையிலிருந்த கேமராவில் அக்காட்சியினைப் பதிவு செய்தேன். 'தரையிரங்கிய இடம் தவறு' எத்தனை அழகான இறக்கை, இப்படி சகதியில் சிக்கிக் கொண்டதே! என் உணர்வின் ஊடே 'சகதியான இடத்தில் பறக்கவேண்டும் தரையிரங்கக் கூடாது' என எனக்கும் ஓர் பாடம் கற்கக் கிடைத்தது. விமானமும், ஓடுதளமும் நினைவில் வந்தது.
 
ஆராதனை முடிவு பெற. நானும் அங்கேயிருந்து நடக்கத் தொடங்க, சிக்கிய வண்ணத்துப் பூச்சிக்கு 'நீ என்ன செய்தாய்' என்ற உணர்வு என்னைத் தொற்ற. கேமராவை பையில் போட்டுவிட்டு, அந்த வண்ணத்துப் பூச்சியை சகதியினின்று எடுத்து, இறக்கையில் இருந்த சகதியினைத் துடைத்து பறக்கவிட்டேன். தேவனா, 'பேதுருவோடு பேசியது போல' என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். (மத் 4:19) ஆம், அன்று ஆலயத்தில் உள்ளோர்க்கு ஒன்று, எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்.

ஆம், பிரியமானவர்களே! நம்முடைய வாழ்க்கையும் சில நேரங்களில் இந்த வண்ணத்துப் பூச்சியைப் போலவே சிக்கிக்கொள்ளுகின்றது. எங்கே பறக்கவேண்டுமோ அங்கே பறக்காமல், தரை இறங்கிவிடுவதினால் தவறு நேர்ந்துவிடுகின்றது; விளைவு,  எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும் வாழ்க்கையோ விழுந்துவிட்ட வேலிக்குள்ளேயே சிக்கிக்கொள்ளுகின்றது. அத்தகைய தருணத்தில் தேவனது விரல்கள் நம்மை துடைத்துத் தூக்கிவிடப் போதுமானது. 

புதன், 13 அக்டோபர், 2021

மருந்து


மே 8, 2019 இருதய பரிசோதனைக்காக சென்னையில் உள்ள MMM (Madras Medical Mission)  மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன்.  மருத்துவரது அறிவுரையின்படி, உள்நோயாளிப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த எனக்கு, Angiogram எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளை செய்துகொண்டிருந்தனர் செவிலியர்கள். அப்பொழுது, எனது படுக்கையை நோக்கி வந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர், உங்களை தனியறைக்கு அழைத்துச் சென்று சில ஆயத்தப் பணிகளைச் செய்யவேண்டும் என்றவாறு, wheel chair -ல் அமரச் செய்து அழைத்துச்சென்றார். 

உள்ளே யாருமே இல்லாத சிறியதோர் அறை; ஆங்காங்கே, சிதறிய நிலையில் சில துணிகள், சில மருத்துவ உபகரணங்கள்; அங்கிருந்த படுக்கையில் என்னைப் படுக்கவைத்தார் அந்த ஊழியர். இங்கே என்னைக் கொண்டுவந்து என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி என்னில் எழ, 'ஆடைகளைக் கழற்றுங்கள்' என்று அமைதியாகச் சொன்னார் அவர். நானோ, மேலாடையை மட்டும் கழற்றிவிட்டு, படுக்கையில் அமர்ந்திருந்தேன்; அவரோ, மீண்டும் என்னை நோக்கி, 'உங்கள் உடலில் உள்ள அத்தனை ஆடைகளையும் கழற்றுங்கள்' என்றார். ஒருபுறம் வெட்கம் என்னை வாட்டியெடுத்தாலும், அவருக்கு முன் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல், மருத்துவத்திற்கென்று வந்தபின் மறுப்பதும் இயலாதது என்ற மனநிலையில், அத்தனை ஆடைகளையும் கழற்றினேன். 'இரட்சிப்பின் வஸ்திரமில்லாதவர்களை பரலோகம் இப்படித்தான் பார்க்குமோ?' என்பதை அப்போது நினைவுகூர்ந்தேன்.

நிர்வாணமாக என்னைப் படுக்கவைத்து, கழுத்துக்குக் கீழே உடலில் இருந்த உரோமங்கள் அனைத்தையும் நீக்கத் தொடங்கினார் அந்த ஊழியர். பணியினைச் செய்துகொண்டே, என்னை யார்? என்றும், எங்கிருந்து வருகிறேன்? என்றும் அன்போடு விசாரித்த அவரோடு நானும் உரையாடத் தொடங்கினபோது, தனது உள்ளத்தை என்னிடத்தில் வெளிப்படுத்தி, தனது குடும்ப நிலையினை என்னோடு பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார் அவர். சென்னையில் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்தவர் என்றும், உடன்பிறந்த சகோதரி திருமணமாகும் வரை, நீண்டநாட்களாக தன்னுடைய திருமணத்திற்குக் காத்திருக்க நேரிட்டது என்றும், திருமணமாகி பல வருடங்களானபின்பும் இன்னும் குழந்தைபேறு அற்ற நிலையில் தான் வாழுவதையும் அவர் கூறக் கேட்டு உள்ளம் உடைந்தேன். அவர் கிறிஸ்துவை அறியாத மனிதர் என்பதையும், போராட்டங்களோடு வாழ்ந்துகொண்டிருப்பவர் என்பதையும் அறிந்துகொண்ட நான், மேலும் அவரை விசாரித்து, கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் அறிவித்தேன். அவர் தனது பணியை முடித்தபோது, நானும் எனது பணியினை முடித்த திருப்தி எனக்கு உண்டானது. அவரது ஆத்துமாவினை நான் விசாரித்தபோது, எனது வியாதியைக்குறித்து எனக்கிருந்த மனவேதனையை அது குறைத்தது. ஆம், பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையின் நிலை எத்தகைய சூழ்நிலையில் காணப்பட்டாலும், பிறரைக் குறித்த கவலையும், கரிசனையும் நம்மில் மிகுந்து காணப்படுமென்றால், அவர்களை விசாரிக்கவேண்டும் என்ற வேட்கை தானாகவே நமது இதயத்தில் பொங்கி எழும். நம்மைச் சந்திப்பவர்களை நாம் விசாரிக்க விசாரிக்க நம்முடைய வியாதியைக் குறித்த வேதனைக்கு அது மருந்தாகிவிடும். 

ஓர் போதகரின் மனைவியை அறிவேன். முதுகுத் தண்டில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக பல வருடங்களாக படுக்கையிலேய தனது வாழ்நாளைக் கழித்துவந்தவர் அவர். அவர்களுடைய  சபைக்கு நான் சென்று பிரசங்கிக்கும்போதெல்லாம், ஆராதனை முடிந்ததும், ஆலயத்திற்குப் பின்னே உள்ள அறையில் படுக்கையில் இருந்த போதகரின் மனைவியைச் சென்று சந்தித்து ஜெபித்துவருவது வழக்கம். அவ்வாறு ஜெபிக்கும்போது, ஒவ்வொரு முறையும், 'ஜனங்கள் உங்களையும் உங்கள் வியாதியையும் விசாரிக்கும் முன், நீங்கள் ஜனங்களை விசாரித்துவிடுங்கள்' என்ற ஆலோசனையை தவறாமல் கூறிவிட்டு வருவேன். ஒருமுறை அந்த ஆலயத்தில் நான் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, சகோதரிகளின் பக்கத்தில் போதகரின் மனைவியைப் போன்ற தோற்றமுடைய ஒரு சகோதரி அமர்ந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்; என்னால் நம்ப இயலவில்லை, யோவானது தகப்பனான சகரியாவைப் போல, ஜெபித்தும் விசுவாசமற்ற நிலையில்தான் நானும் காணப்பட்டேன். பிரசங்கித்து முடிக்கும் வரை சந்தேகம் எனது சிந்தையை நிறைத்திருந்தது. ஆராதனை முடிந்ததும், என்னை நோக்கி அந்த சகோதரி நடந்துவந்தபோது, ஒருவேளை போதகருடைய மனைவியின் சகோதரியோ! என்றே நினைத்தேன். ஆனால், போதகரின் அருகே வந்து நின்றதும், போதகரின் மனைவி என்பதை அறிந்துகொண்ட நான் ஆண்டவரை மகிமைப்படுத்தினேன். வியாதிப்படுக்கையின்போது கூறிய ஆலோசனையினை நினைவுகூர்ந்தேன். மற்றவர்களது ஆத்துமாவை விசாரித்தால், அது நம்முடைய சரீரத்துக்கே மருந்தாகிவிடும் என்பது நிச்சம். 

 

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

என்னைத் தேடிய மணவாளன்

 

என்னைத் தேடிய மணவாளன்

(அனுபவத்தில் கிடைத்த ஆண்டவரின் செய்தி)

www.sinegithan.in



    10 அக்டோர் 2021, நேற்று (9 அக்டோபர்) எனது மனைவியின் பிறந்த தினம்; முந்தின சில நாட்கள் வரையில் அதனை மனதில் வைத்தவனாகவும், மனைவி விரும்பும் புடவையினை முன்கூட்டியே ஆன்லைனில் ஆர்டர் செய்து கொடுத்தவனாகவும் ஆயத்தமாயிருந்த நான், பிறந்த நாள் அன்று காலை எழுந்ததும் அதனை முற்றிலும் மறந்துவிட்டேன். பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் மனைவியும் மிகவும் அவசரமாகக் காணப்பட்டாள். சுமார் 11 மணி அளவில் உறவினரிடமிருந்து எனக்கு வந்த தொலைபேசியில் 'பிரிஸ்கில்லா இல்லையா' என்று என்று கேட்டார் அவர். 'என்ன எதுவும் சொல்லவேண்டுமா?, என்ன விஷயம் என்று கேட்டேன்'; அதற்கு அவர், வாழ்த்தலாம்னு நினைத்தேன் என்றார்; 'எதற்கு வாழ்த்துதல்?' என்று யோசித்தவாறே 'மறந்துபோச்சே' என்று அவரிடத்தில் சத்தமாக அலறினேன். 'நீங்க மறக்கலாமாண்ணே' என்று சொல்லிவிட்டு, 'பிரிஸ்கில்லா ஸ்கூலிலிருந்து வந்ததும் பேசுறேன்' என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். 'மணவாட்டியின் பிறந்தாள் மணவாளனுக்கே மறந்துபோயிற்றே' என்று நினைத்துக்கொண்டிருந்தேன். 

அவர் போனை வைத்ததும் அவசர அவசரமாக, WhatsApp ல் மனைவிக்கு ஏதாவது வாழ்த்து அனுப்பலாம் என்று youtube -ல் video -வை download செய்ய நினைத்தபோது, அதனை download செய்ய நான் உபயோகப்படுத்தின App-ஐயோ நான் கைபேசியிலிருந்து delete செய்திருந்தினால், அதனையும் சீக்கரமாகச் செய்ய இயலாமல் சிக்கலையே சந்திக்க நேரிட்டது. அவள் பள்ளி முடிந்து வரும்போது 'Happy Birthday to you' என்ற பாடலைப் போடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்; அதற்குள் அடுப்பங்கறையில் சிலவற்றை செய்வோமே என்ற ஆசை உண்டாக அதனைத் தொடர்ந்தேன். பள்ளி முடிந்து, அவள் வீட்டின் உள்ளே நுழைந்ததும், கதவு திறக்கும் சத்தத்தைக் கேட்டதும், 'யப்பா, இன்னைக்கு உனக்கு பிறந்த நாள்ல, Happy Birthday' என்று சட்டென சரண்டர் ஆகிவிட்டேன். வட இந்தியாவில் பூஜை நாட்களாயிருந்தபடியினால், பிறந்த நாளன்று விசேஷமாக எதுவும் சமைக்க இயலவில்லை;  ஏற்கனவே பிரிஜ்-ல் இருந்த கொஞ்ச சிக்கனை மட்டும் எண்ணெயில் பொறித்து வைத்திருந்தேன்; அவ்வளவுதான். 

    எப்படியோ பிறந்தநாள் பக்குவமாக முடிந்துவிட்டது என்று மனதுக்குள் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தபோது, இரவு சுமார் 10 மணிக்கு ஒரு குடும்பம், கணவன் மனைவி மற்றும் பிள்ளைகளாக எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவைத் திறந்து, என்னவென்று பார்க்க விழைந்தபோது, அவர்களோ 'பிறந்தநாள் கேக்' உடன் வீட்டின் உள்ளே நுழைந்தனர். அவர்களது இச்செயலைக் கண்டதும், 'நாங்க எதிர்பார்க்கவில்லையே' என்று நாங்கள் சொன்னபோது, பதிலாக, 'திருடன் வருகிற விதமாக நாங்கள் வந்திருக்கிறோம்' என்ற வார்த்தையினை உபயோகித்தனர் அவர்கள். ஒருவழியாக, இரவு சுமார் 10:30 மணிக்கு கேக் வெட்டி, பிறந்தநாளை பின் இரவில் கொண்டாடி புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டோம். என்றாலும், 'திருடனைப் போல வந்திருக்கிறோம்' என்ற அவர்களது வார்த்தை எனது மனைவியின் மனதில் அழுத்தமாக அப்போது பதிந்துவிட்டது. 

மறுநாள், 10 அக்டோபர் 2021 அன்று ஞாயிறு ஆராதனைக்கு குடும்பமாகச் சென்றிருந்தோம். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆலய ஆராதனையினை நடத்திக்கொண்டிருந்தார். 'விலையேறப்பற்றவர்களாகிய நாம் காட்சிப்பொருட்களாக அல்ல; நம்மைப் பயன்படுத்துவோரின் கைகளில் பிறருக்காக பயன்படவேண்டும்' என்ற பிரதானதோர் சத்தியத்தினையும்; அதனைத் தொடர்ந்து, 'வெவ்வேறு நிலைகளில் தேவன் கையாளும் வெவ்வேறு வழிமுறைகளையும்' செய்தியாக விளக்கிக்கொண்டிருந்தார். செய்தியின் இடையிடையே 'தேவன் ஏன் இப்படி செய்கிறார்?' என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, 'தெரியாது' 'தெரியாது' என்று தனது இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தினவராக விரல்களையும் விரித்து அவர் நின்ற காட்சி இன்றும் என் கண்விழித் திரைகளில் நிறைந்தே நிற்கிறது. அதுமாத்திரமல்ல, ஒருமுறை வேண்டிய பணத்தை கர்த்தர் கொடுத்ததையும், மற்றொருமுறை வேண்டுமென்றே கால்கடுக்க நடக்கவிட்டதையும் கூடவே பகிர்ந்துகொண்டது, அவரது ஆரம்பகால ஊழிய நினைவுகளை மீண்டும் ஒருமுறை என் மனதில் பசுமையாக்கியது.

    அதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருவிருந்தில் நான் பங்கேற்று இருப்பிடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, என்னுடைய மகன் ஜான் சாமுவேல் என்னை நோக்கி 'அப்பா, ஆன் லைனில் ஆர்டர் செய்த பார்சல்' வந்திருக்கிறது, வாங்க என்று என்னைக் கூப்பிட்டான். ஆராதனை நடந்துகொண்டிருக்கின்றதே, இடையில் எப்படி வருவது என்று சற்று முணுமுணுத்துக்கொண்டிருந்தேன்; ஏனென்றால், ஆராதனை நடந்துகொண்டிருக்கும்போது இடையில் எழுந்து செல்லுவதை ஒருபோதும் விரும்பாதவன் நான்; அவ்வாறே, ஆராதனையின் முடிவில் ஆசீர்வாத ஜெபம் கூறும் முன் எழுந்து செல்லுவதை, 'விருந்தின்போது, பாயாசம் ஊற்றும் முன் இலையை மூடிவிடாதீர்கள்' என்று கூறுபவன் நான். ஏனென்றால்,  ஆலயத்திற்குச் செல்லும்போது சட்டமாக என் தாயார் சிறுவயதிலிருந்து எனக்கு அணிவித்து விடும் சட்டை அது. பிரங்கம் விளங்கவில்லையென்றாலும் பிரசங்கியாரைப் பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும், கீழே குனிந்து இருக்கக்கூடாது; குனிந்து இருந்தால், பேப்பர்-ல் எதையோ எழுதி விளையாண்டுகொண்டிருக்கிறான் என்று நினைத்துவிடுவார்கள். எனவே, எனது இச்செயல் எனது விருப்பத்திற்கு விரோதமானதாக நினைத்து சற்று தரித்து நின்றுகொண்டிருந்தேன். ஆனால், எனது மகனோ, 'அவர் வெயிட் பண்ணுறார்; வாங்க' என்று என்னை அவசரப்படுத்த, ஆராதனை முடியவில்லை என்பதால் வேதத்தை ஆலயத்திலிருந்து தூக்கிச் செல்ல மனதற்றவனாக, நான் இருந்த இருக்கையிலேயே வேதத்தை வைத்துவிட்டு, சீக்கிரத்தில் வந்துவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு புறப்பட்டுச் சென்றேன். 

பார்சலை வாங்கிவிட்டு, கைபேசி மூலமாக பணத்தை செலுத்த பலமுறை முயற்சிக்கையில், PhonePe -ல் 'payment fail' 'payment fail' என்றே வந்துகொண்டிருந்தது. வேறு வழியின்றி, வீட்டிற்குச் சென்று பணத்தை எடுத்துவந்து கொடுத்தேன்; பார்சல்காரரோ சில்லரை இல்லை என்று சொல்ல, எனது மகனிடம் அருகிலிருந்த கேன்டீனுக்குச் சென்று ஏதாவது வாங்கிவிட்டு சில்லறை கொண்டுவரச் சொன்னேன். சில்லரை கிடைத்ததும், பணத்தைக் கொடுத்து பார்சர்காரரிடமிருந்து விடைபெற்று ஆலயத்தை நோக்கி நடந்தேன்; அதற்குள் ஆராதனை முடிந்துவிட்டது; எல்லோரும் வெளியே வந்துகொண்டிருந்தார்கள். எனது வேதாகமத்தை எடுக்கவேண்டுமே என நான் நினைத்தபோது, எனது மகனோ, அம்மா எடுத்துட்டு வந்துருவாங்க என்றான். வேறு வழியின்றி வழியில் நின்றுகொண்டிருந்தேன். மனைவி மகள் வந்ததும், மகனை வடை வாங்கி வரச் சொல்லி வழியில் நின்றவாறு தின்றுகொண்டிருந்தேன். அப்போது அவ்வழியே வந்த சகோதரி ஒருவர், 'அண்ணன் முடிவு ஜெயம் பண்ண உங்களை தேடினார்' என்று சொல்ல, எனது உணர்வலைகள் உள்ளத்திலே என்னைத் தூக்கிவாரிப்போட்டுவிட்டது. உள்ளே மணவாளன் தேட, மணவாட்டியாகிய நானோ வெளியே நின்று வடை சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேனே என நினைத்து நொந்துகொண்டேன். உடனே மனைவியுடன் வீடு வந்தடைந்தேன். 

  வீட்டினுள் நுழைந்து, மனவருத்தத்தை மனைவியிடம் பகிர்ந்துகொண்டபோது, அவள் என்னை நோக்கி, 'நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்' (மத் 24:44) என்ற வசனத்தை நேற்றுமுதல் தேவன் தனக்கு ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கிறார் என்று கூறினாள். ஆம், இன்று எனது சிந்தையில் நின்றுகொண்டேயிருப்பது இந்த வசனம்தான்! இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை உணர்த்தும் இந்த வசனம் வித்தாகவே என் உள்ளத்தில் விதைக்கப்பட்டுவிட்டது. 





வெள்ளி, 8 அக்டோபர், 2021

இரண்டு தோல்விகள்

 

இரண்டு தோல்விகள்


டிசம்பர் 4, 2016, W.M.E சபையின் ஞாயிறு காலை 7 மணி ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. வாரத்தின் முதல் ஞாயிறு என்பதால், திருவிருந்து ஆராதனையும் நடைபெறவிருந்தது.  ஆராதனையின் முதற்பகுதி முடிவடைந்து, திருவிருந்து ஆராதனை ஆரம்பமானது. சபையார் ஜெபத்துடன் முழங்காலில் நிற்க, போதகர் மற்றும் உடன் ஊழியர்கள் அப்பத்தையும் ரசத்தையும் கையில் ஏந்தியவண்ணம் வந்து ஜனங்களுக்குப் பரிமாறிக்கொண்டிருந்தனர். ஆலயத்தின் கடைசி வரிசையில் நாற்காலியில் அமர்ந்திருந்தேன் நான். அப்பத்தை கொடுக்கும்படியாக போதகர் என்னருகே வந்தபோது, திருவிருந்து ஆராதனையின் இறுதி ஜெபத்தினை ஏறெடுக்கும்படி என்னிடத்தில் கேட்டுக்கொண்டார். திருவிருந்து பரிமாறி முடிந்ததும், இறுதி ஜெபத்தை ஏறெடுக்கும்படியாக முன்னே சென்ற நான், திருவிருந்தைப் பற்றியதோர் முகவுரையினை, வசனத்தின் அடிப்படையில் ஒருசில நிமிடங்கள் எடுத்துக்கூறினேன். 

'மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்' (ஆதி 9:4) என்று இஸ்ரவேல் மக்களுக்கு ஆண்டவர் கட்டளையிட்டிருந்ததையும், அதைத்தொடர்ந்ததாகவும், அதற்கு ஒப்புடையதாகவுமே,  'வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்' (யாத் 23:19) என்று கட்டளையிட்டிருந்ததையும் சுட்டிக்காட்டி, புதிய ஏற்பாட்டு நாட்களில் இயேசு கிறிஸ்துவோ, 'என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்' (யோவா 6:54) என்று சொன்னதையும் எடுத்துக்கூறி. ஒன்றாய் சேர்க்கவேண்டாம் என்று கூறப்பட்டிருந்த மாம்சத்தையும் இரத்தத்தையும், நம்முடைய சரீரத்திலே ஒன்றாகச் சேர்க்கும் நேரமே திருவிருந்தின் ரகசியம் என்றும், உலகத்தின் ரட்சிப்பிற்காக அவரது சரீரமும், இரத்தமும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டது; கடைசிச் சொட்டு இரத்தம் கூட மாம்சத்தினுடன் விட்டுவைக்கப்படவில்லை. அணுப்பிளவைப்போல  (FISSION) நடைபெற்ற இயேசுவின் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்ச்சியினால் உண்டான சக்தியே மனிதர்களை பாவத்திலிருந்து மீட்டெடுக்கிறது. இயேசுகிறிஸ்துவின் இரத்தமே சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கிறது 

(1யோவா 1:7). இயேசுவின் இரத்தமும் சரீரமும் பிரிக்கப்பட்டதுபோல, நாம் அவரை ஏற்றுக்கொள்ளும்போது நம்முடைய பழைய சரீரம் பிரிந்து புதிதாகிறது என்றும், 

இயேசுவின் சரீரமும் இரத்தமும் அணுச்சேர்க்கையைப்போல (FUSION) நமது உடலில் திருவிருந்தின்போது ஒன்றாகச் சேர்க்கப்படும்போது, உண்டாகும் சக்தி நம்மை ஜீவனுக்கு நேராக நடத்துவதோடு, அநேகரை நித்திய ஜீவனுக்கு நேராக நடத்தவும் வலிமையுள்ளது. அவர் உலகத்திற்கு ஒளியாக வந்தார், அவருடைய இரத்தத்தையும் சரீரத்தையும் நினைவுகூரும்போது மீண்டும் அந்த ஒளியினையே பிரதிபலிக்கிறோம்; இந்த சக்தி (வெளிச்சம்) உலகத்திற்கு வெளிப்படவேண்டும், அதனையே திருவிருந்து ஞாபகமூட்டுகின்றது என்றும், பரலோகத்தில் மணவாளனாக அவர் நம்மை வரவேற்கும்போது, 'இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தையே தரித்திருப்பார்' (வெளி 19:13), நாமும் அவரது இரத்தத்தால் கழுவப்பட்டிருந்தால் மாத்திரமே மணவாட்டியாக இயலும் என்றும் சொல்லி, இறுதி ஜெபத்தை மிகவும் தாழ்ந்த தொனியில் ஏறெடுத்தேன். 

ஆராதனை முடிந்ததும் என்னுடைய மனைவியினிடத்தில், 'நான் ஜெபித்தது புரிந்ததா?' என்று கேட்டபோது, அவளோ, 'முணு முணுன்னு' வாய்க்குள்ளேயே முணங்கியதைப் போல இருந்தது என்றதும், சற்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஆலயத்தின் வெளியே  மரத்தின் நிழலிலே நான் நின்றுகொண்டிருந்தபோது, என் வாலிபம் நினைவுக்கு வந்தது.  20 வயது வாலிபனாக, ஒருமுறை பரி. மாற்குவின் ஆலயத்தில் நான் செய்தியளித்துவிட்டு, ஆலயத்திலிருந்து நேராக ஆவிக்குரிய வாழ்க்கையில் என்னை வழிநடத்தியவர்களுள் ஒருவரான எனது தெருவில் இருந்த போதகர் சாலமோன் அவர்களிடம் சென்று, 'நான் செய்த பிரசங்கம் நன்றாக இருந்ததா?' என்று கேட்டபோது, 'பிரசங்கம் உன்னுடையது அல்ல, கர்த்தருடையது' என்று சொல்லி வளர்ச்சிக்கு நேராக வழிகாட்டினார். 

இந்த நினைவைத் தொடர்ந்து, முற்பகுதி பிரசங்கம் ஜனங்களுக்குப் புரியவேண்டும், பிற்பகுதி ஜெபமோ அவருக்குப் புரிந்தால் போதும் என்ற அர்த்தம் மனதில் அழுத்தமானது. ஜெபம் என்பது யெகோவா தேவனுடன் பேசுவது, இதற்கு மனைவியினிடத்தில் நான் புரிந்ததா என்று கேட்டிருக்கவேண்டியதில்லையே என்றும், மனிதர்களுக்குப் புரியவேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஜெபித்தால் தேவனை மறந்துவிடுவோம் என்றும் புரிந்துகொண்டேன். 20 வயதில் திருந்தியதிலேயே மீண்டும் சரிந்ததைப் அறிந்துகொண்டேன்.

கண்ணில் தெரியாத கண்ணாடி

 



2015 டிசம்பர் 28, காலை 10.15 மணி, சென்னை கோயம்பேடு பேருந்து  நிலையத்தில் ஓய்வெடுக்கும் அறையின் ஓர் இருக்கையில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தேன். தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பயணித்து வந்த களைப்பினைப் போக்கிக்கொள்ள சற்று இளைப்பாறிக்கொண்டிருந்தேன். அந்த ஓய்வறை வெளியில் இருப்போர் உள்ளேயும், உள்ளே இருப்போர் வெளியில் நடப்பவைகளைக் காணும் வண்ணமாக கண்ணாடியினால் சுற்றிலும் அடைக்கப்பட்டிருந்தது. பேருந்திற்காகக் காத்திருந்த பயணிகள் அறையினுள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். அப்போது, சட சடவென இறக்கையினை அடித்தவண்ணம் திடீரென அந்த அறையினுள் வேகமாகப் பறந்துகொண்டிருந்தது ஓர் புறா. அறையிலிருந்து வெளியே பறந்து செல்ல அங்கும் இங்கும் சுற்றிவாறு பறந்துகொண்டிருந்தது; வெளியில் வானமும், மரங்களும், செடிகளும் தெரிவதைப் பார்த்துவிட்ட புறா, வேகமாக பறந்து சென்று வெளியேற முயற்சித்தது; அந்தோ பரிதாபம், இடையில் இருந்த கண்ணாடியை அது அறியாததால், அதிலே மோதி திரும்பியது. 

இந்தப் புறாவைப் போன்றதாகவே இன்று நம்முடைய வாழ்க்கையும் காணப்படலாம். வேதத்தை வாசிக்கிறோம், ஆலயத்திற்குச் செல்கிறோம், கூட்டங்களில் பங்கேற்கிறோம், கிறிஸ்தவர்கள் என்ற உள்வட்டத்திற்குள் பறந்துகொண்டிருக்கிறோம்; தேவன் யார் என்றும் பரலோகம் எப்படிப்பட்டதென்றும் நாம் அறிந்திருந்திக்கிறோம். என்றாலும், இந்த உலகை விட்டும், உடலை விட்டும் நாம் வெளியேறும்போது கண்ணாடியில் மோதி விழுந்துவிடக்கூடாது. வசனங்களுக்குக் கீழ்ப்படியாமல் வாழுவோமென்றால், வழியாகிய இயேசுவுக்கு இதயத்தில் இடங்கொடாமல் வாழுவோமென்றால் மரணத்திற்குப் பின் நமது ஆத்துமா பரலோகத்தை நோக்கிச் செல்ல முயற்சிக்கும்போது தடுக்கப்படுவது நிச்சயம். பரலோகத்தைப் பற்றிய அறிவிருக்கலாம், ஆனால் அங்கு பறக்கமுடியாது. இன்றே வழியைத் தெரிந்துகொண்டால், வெளியே பறப்பது எளிதாயிருக்கும். 

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் (யோவா 12:48) என்றார் இயேசு. 


என்னைத் தேடிய யெகோவா

 

என்னைத் தேடிய யெகோவா 


நவம்பர் 2 இரவு சுமார் 12 மணி, சிநேகிதன் பத்திரிக்கைப் பணியினை செய்துகொண்டிருந்தேன், அச்சமையத்தில் 'யெகோவா' என்கிற ஆண்டவரது பெயரை அதிகம் ஆராய்ந்தவனாக படுக்கைக்குச் சென்றேன். தூக்கம் வருவதற்கு முன் ஏதாவது பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பது எனது வழக்கம், அப்படியே அன்று பாடல்களைக் கேட்க கைபேசியை எடுத்தபோது, திடீரென வேண்டாம், நேரம் ஆகிவிட்டது தூங்கிவிடலாம் என்ற நினைப்புடன ;, படுக்கையில் சரிந்தேன், சிந்தை சிலவற்றை நினைத்துக்கொண்டிருக்கும்போது, திடீரென 'யகோ..வா' என்கிற சத்தம் நான் படுத்திருந்த அறையினுள் பலமாக ஒலித்தது. அறைக் கதவு திறந்திருந்தது; சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்த்தபோது, யாரும் இல்லை; சத்தத்தின் ஒலியில் என்ன செய்வதென்று அறியாதவனாகவும், என்ன நடக்கிறது என்று புரியாதவனாகவும், அதிர்ந்துபோனவனாகவும், பயந்துபோனவனாகவும் அங்கும் இங்கும் பார்த்தவனாக யாரும் இல்லையே எங்கிருந்து வந்தது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். 

அந்த அறையிலிருந்து எழும்பி, எனது மனைவி மற்றும் பிள்ளைகள் உறங்கும் அறைக்கு சென்றுவிட எழுந்தேன். அப்போது, 'யெகோவா' என்று ஆண்டவர் பேசியதை உணர்ந்துகொண்டேன். 'கர்த்தர்' 'தேவன்' 'ஆண்டவர்' 'பிதா' போன்ற பல பதங்களை அவரை ஆராதிக்கும்போது உபயோகித்திருந்தபோதிலும், பெயரையோ அடிக்கடி எனது உதடுகள் உச்சரித்ததில்லை. தன்னையே அறிமுகப்படுத்திச் சென்ற அன்று இரவு எனது வாழ்க்கையில் மறக்க இயலாதது. 19 வயதில் இரட்சிக்கப்பட்டபோது, ஆண்டவர் பேசுவதை கேட்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறேன்; ஆனால், 'வேதத்தின் மூலமாக அவர் பேசுகிறார்' என்ற அறிவு அதிகமாக அதிகமாக அந்த விருப்பத ;தை விட்டுவிட்டேன். அவரை நேரடியாக பார்க்கவேண்டும் என்று ஆசைகொண்டிருக்கிறேன்; எனினும், 'கண்டு விசுவாசிக்கிறவனைக் காட்டிலும் காணாமல் விசுவாசிக்கிறவன் பெரியவன்' என்ற அறிவு அதிகமாக அதிகமாக அந்தப ; படியினையும் மறந்துபோனேன். எனினும், 43 வயதான என்னை தேடிவந்து தனது பெயரைச் சொல்லிப்போன அந்த இரவு அற்புதமானது.

இப்படியும் காப்பார் கர்த்தர் !

 

இப்படியும் காப்பார் கர்த்தர் !


ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை மாலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை, தூத்துக்குடி ஆசிரியர் காலணியிலுள்ள சகோதரர் சுந்தர் அவர்களது இல்லத்தில் நடைபெறும் MSF ஐக்கியத்தின் வாராந்திர ஜெபக்கூடுகையில் வழக்கமாக பங்குபெறுபவன் நான். அந்நாட்களில், தூத்துக்குடியில் நான் தங்கியிருந்தபோது, வேதாகமத்தின் 'யோசுவா' புத்தகத்திலிருந்து வேதாக வகுப்புகளின் மூலமாக சத்தியங்களை தொடர்ந்து கற்றுக்கொடுத்துவந்தேன். நான் சுகவீனமாக இருந்த காரணத்தினால், சில நாட்களாக எனது மனைவியின் துணையோடு இருசக்கர வாகனத்தில் அக்கூடுகைக்குச் சென்று வருவேன். மிஷனரிகளுக்காகவும், ஊழியங்களுக்காகவும் தொடர்ந்து ஜெபித்து வரும் அக்கூடுகையில் எப்படியாகிலும் கலந்துகொள்ளவேண்டும் என்று என் மனம் அத்தினம் வந்ததும் அடித்துக்கொண்டேயிருக்கும். 

8 நவம்பர் 2016, செவ்வாய் கிழமை, என் மனைவியோ சுகவீனமாயிருந்தாள். மருத்துவமனைக்குச் சென்றுவந்து வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாள். எனவே, அன்று இருசக்கர வாகனத்தை நானே ஓட்டிச் சென்றேன். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள வெளிச்சம் குறைந்த போல்பேட்டை சாலையில் நான் சென்றுகொண ;டிருந்தபோது, எனக்கு எதிரே சாலையின் இடதுபுறத்தில் இருசக்கர வாகனம் ஒன்று வருவதைக் கண்டு, யாரோ ஒருவர் இருசக்கர வாகனத்தை தவறான பக்கத்தில் ஓட்டிவருவதாக நினைத்து சற்று வலப்புறம் ஒதுங்கியவாறு சென்றுகொண்டிருந்தேன். சுமார் இரண்டு அடி அருகாமையில் வந்ததும், எதிரே வந்த இருசக்கர வாகனம் அப்படியே நின்றுவிட, தலையை உயர்த்தி நான் பார்த்தபோது, அது ஒற்றை விளக்குடன் வந்துகொண்டிருந்த லாரி என்பதை அறிந்துகொண்டேன். என்னை அறியாமலேயே ஓர் பெரிய சிரிப்புடன் சத்தமாக நான் சிரித்ததும், லாரி ஓட்டுநரும், அருகாமையிலிருந்த மக்களும் என்னை என்ன நினைத்தார்களோ அறியேன். இப்படியும் காப்பார் கர்த்தர் என்பது அன்று தெளிவாகிப்போனது. எனினும், எவ்வித பதட்டமும் இன்றி, அங்கிருந்து வேதாகம வகுப்புக்கு புறப்பட்டுச் சென்றேன். 

சில அடிகள் சென்றதும், 'இரத்த சாட்சி கூட்டம் இயேசுவை போற்றி' என்ற பாடலை தொடர்ந்து படியவாறு வாகனத்தை ஓட்டியவனாக கூடுகையைச் சென்றடைந்தேன். 'தலைவன் மறைந்தாலும் தலைமுறை தொடரும்' என்ற கருப்பொருளினை வேதாகம வகுப்பின்போது பகிர்ந்துகொண்டேன். கூடுகைக்கு வந்திருப்பவர்களின் மனதைப் பதற்றமடையச் செய்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன், இந்த சாட்சியைப் பகிர்ந்துகொள்ளவில்லை. இரவு 9.30 மணிக்கு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தேன். ஆவியானவரின் அசைவாடுதலையும், அழுத்தமான உரையாடுதலையும் வேதபாட வகுப்பின்போது உணர்ந்தேன். ஜெபக்கூடுகையிலும் இறுதியாக 'இரத்த சாட்சி கூட்டம் இயேசுவை போற்றி' என்ற பாடலை பாடியவாறே கூடுகையினை நிறைவு செய்தேன். கூடுகை முடிந்து வீடு வந்ததும், கீர்த்தனையிலும், இணையதளத்திலும் 'இரத்த சாட்சி கூட்டம் .....' பாடலைத் தேடியபோது கண்டுபிடிக்க இயலாதவனாக எந்த புத்தக்தில் இருக்கும் இந்த பாடல் எனச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். கீர்த்தனை பாடல்களில் எதுவும் சந்தேகம் என்றால், எனது தாயாரிடத்தில் பாடச் சொல்லி கேட்டுப் பழகுவது என்வழக்கம். அப்படியே நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, 'பரிசுத்தர் கூட்டம் இயேசுவை போற்றி' என்ற வரிசையில் அந்த பாடலை கண்டுகொண்டு சந்தோஷ மடைந்தேன். 'பரிசுத்தர் கூட்டம்' என்பது எப்படி 'இரத்தசாட்சி கூட்டம்' என்று மாறிப்போனது? என்ற சிந்தனை என்னில் எழுந்தது; இரத்தம் சிந்தவிருந்த தருணத்திலிருந்து தப்பினதே அந்த வார்த்தை மாற்றமடைந்ததற்கான காரணம் என என் ஆவி உணர்ந்தது. இணையதளத்தில் சகோதரர் தினகரன் பாடும் அப்பாடலைக் கேட்டு மனம் மகிழ்ந்தேன். 

விலைமதிப்புள்ள பொருட்களைக் கொண்டுசெல்லும்போது, திருடர்கள் வழிமறிப்பதும் திருட முயற்சிப்பதும் வழக்கமானதுதானே; என்றாலும், 'பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன்' என்ற ஆண்டவரின் பாதுகாப்பு வளையத்திற்குள் பிசாசு நுழைய முற்பட்டால் விபத்து பிசாசுக்குத்தான்; மோசேயின் வாழ்க்கையில் நடந்தது போல அவருடைய கைகளே நம்மை மூடும்; சத்துரு அல்ல. வழியில் உன ;னைக் காக ;கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன் (யாத் 23:20) என்ற வார்த்தை நமக்குத்தானே.  

தவறியதால் தவறிய வேதம்


 


ஜுலை 19, ஞாயிறு மாலை 3.50 மணி, செபத்தையாபுரம் நோவாவின் பேழை ஆலய ஆராதனையில் செய்தியளிப்பதற்காக வேதாகமத்தைக் கையில் எடுத்தவனாக வீட்டை விட்டு வெளியே வந்து இருசக்கர வாகனத்தில் அமர்ந்து புறப்பட ஆயத்தமானேன். இருசக்கர வாகனத்தில் பின்புறம் பெட்டியோ அல்லது முன்புறம் பெட்ரோல் டங்கியின் மீது பொருட்களை வைக்க பைகளோ இல்லாததினால், வேதத்தை எங்கே வைப்பது என்று யோசித்தவனாக, மனைவியை அழைத்தேன், வேதத்தைக் கொண்டுசெல்ல ஏதாவது பை இருக்கிறதா? என்று கேட்டேன்; மனைவியோ ஒரு மஞ்சள் நிற துணிக்கடைப் பையினைக் கொண்டுவந்தாள். வேதத்தை அதில் கொண்டுசெல்வதை விரும்பாத நான்; இந்தப் பை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மடியில் வேதத்தை வைத்துக்கொண்டு வாகனத்தில் புறப்பட்டேன்; ஆலயத்தில் செய்தியளித்துவிட்டு, 7 மணிக்கு செந்தியம்பலத்தில் நடைபெறவிருந்த நண்பர்கள் ஜெப ஐக்கிய கூட்டத்தில் பங்கேற்பதற்காக விரைந்து வந்துகொண்டிருந்தேன். செந்தியம்பலத்தின் உள்ளே நுழையும் வழியில் காணப்பட்ட இரண்டு வேகத்தடைகளில் வாகனத்தை ஏற்றி இறக்க மனமற்றவனாக, வேகத்தடைக்கு வலப்புறமாயிருந்த ஓற்றையடி வழியில் வாகனத்தைச் செலுத்தினேன், அருகில் இருந்த வளைவிலும் வலப்புறமாகவே முன்னேற நான் முயற்சித்தபோது, எதிர்பாராதவிதமாக சரியான வழியில் எதிர்த்துவந்த மற்றொரு வாகனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினேன். காலை கீழே ஊன்றினால் மடியிலிருக்கும் வேதம் கீழே விழுந்துவிடும் என்ற பதற்றம்; காலை கீழே வைக்காமல் எப்படியாகிலும் வாகனத்தைத் தட்டுத் தடுமாறி திருப்பிவிட முயற்சித்தும் எனது முயற்சி பலிக்கவில்லை. எதிர் வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காலை கீழே ஊன்றும் நிலை உண்டானது; வேதமோ மடியிலிருந்து கீழே சரிந்தது.

மண்ணில் கிடந்த வேதத்தைக் கண்ணால் பார்த்தபோது, என் மனம் உடைந்தது. சற்று முன்னே சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு, வேதத்தை எடுத்துக்கொள்ள நான் இறங்கும் அந்நொடிப்பொழுதிற்குள், அவ்வழியே வந்த நெற்றியில் திருநீர் பூசியிருந்த ஓர் நடுத்தர வயதுள்ள சகோதரி என்னருகே வந்து நீன்றார்; 'வேதம் கீழே கிடக்கிறது' என்று சொன்னவராக, ஓடிச் சென்று வேதாகமத்தை எடுத்துக்கொண்டுவந்து என் கைகளில் கொடுத்தார்; 'நீங்க மூன்றாம் வகுப்பு டீச்சர் மகன்தானே' என்று கேட்டார்; 'ஆம்' என்றேன். ஆம், என் தாய் மூன்றாம் வகுப்பு ஆசிரியையாக பணியாற்றிய அந்தப் பள்ளிக்கு முன்னேதான் என் வேதமும் கீழே கிடந்தது. வலதுபுறம் திரும்பிப் பார்த்தேன்; சற்று தொலைவில் சில வாலிபர்கள் அமர்ந்திருந்தனர்; நேராகப் பார்த்தேன் சில முதியவர்கள் நின்றுகொண்டிருந்தனர்; 'தவறு என் மேலேதான்' என்று சொன்னவனாக வாகனத்தைக் கிளப்பினேன். ஆம், வேகத்தடையில் முறைப்படி வந்திருந்தால், இது அத்தனையையும் நான் தவிர்த்திருக்கலாமே! நான் தவறிச் சென்றதால் வேதம் தவறி விழுந்தது. கிறிஸ்தவனாகிய எனக்கு ஓர் நல்ல பாடமும் கிடைத்தது. கிறிஸ்தவன் என்று சொல்லிவிட்டு, தவறான வழியில் செல்லும்போது, வேதத்தை நாம் தவறவிட்டுவிடுகின்றோம்; 'நீ இந்த வேதத்தின்படி நடக்கவேண்டியவனல்லவா?' என்று மற்றவர்கள் வேதத்தை நமது கையில் எடுத்துக் கொடுக்கும் நிலைக்கு நமது வாழ்க்கையினைத் தள்ளிவிடுகின்றோம்.

வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்; 'இன்றைக்கு ஜெபக்குழு கூடுகை இல்லை' என்று சகோதரன் ஒருவன் வந்து சொன்னதாக என் மனைவி என்னிடம் தெரிவித்தாள். எதற்காக ஆசைப்பட்டு, அவசரப்பட்டு வந்தேனோ; அதையும் இழந்தவனாக, கிராமத்தை விட்டு, மனைவி மற்றும் மகளுடன் தூத்துக்குடிக்குப் பயணமானேன். அந்த வழியைக் கடக்கும்போது, எனது கண்ணோ வேதம் விழுந்துகிடந்த அந்த மண்ணை வேதனையுடன் எட்டிப்பார்த்தது.