சாய்வு நாற்காலி
அது ஒரு மாலை நேரம், தூத்துக்குடி முத்துநகர் கடற்கரைக்குக் குடும்பத்துடன் சென்று வந்த களைப்புடன் இருந்த நான், வீட்டினுள் நுழைந்ததும், சற்று அமர விரும்பி, கண்களால் நாற்காலியைத் துலாவித் தேடி, இறுதியில், உள்ளறையில் யாருமில்லாத இடத்தில், ஓய்வெடுப்பதற்கு வசதியாக நிலையில், காலியாகக் கிடந்த ஓர் 'சாய்வு நாற்காலியைக்' கண்டு விரைந்து சென்று அதிலே சரிந்தேன். சாய்வு நாற்காலி எனும் தொட்டிலில் கிடந்த என்னைத் தாலாட்டுவதுபோல, குழந்தைகளில் சத்தங்கள் வீட்டினுள் ஒலித்துக்கொண்டிருந்தன. களைப்பு ஒருபுறம் என் கண்களை மூடச் செய்துகொண்டிருந்தபோதிலும், காதுகள் இரண்டும் கேட்கும் திறனை இழக்குமளவிற்கு தூக்கத்திற்குள் நான் சென்றுவிடவில்லை. சுமார் முக்கால் மணிநேரம் மனைவி, மகள் மற்றும் மருமகள்கள் பேசிக்கொண்டிருந்த வார்த்தைகளுக்கெல்லாம் முயன்ற அளவு முணங்கிக்கொண்டே பதிலளித்துக்கொண்டிருந்தேன். அச்சமயம், திடீரென ஒரு பாடலுக்கு நடனமாடத் தொடங்கிய என் இளைய மருமகளைக் கண்டதும், விழிகள் விரிவடைய, கைபேசியில் அதனைப் பதிவு செய்யவேண்டும் என்ற விருப்பத்தில், சற்று தூரத்திலிருந்த கைபேசியை எடுக்க விருட்டென சாய்வு நாற்காலியை விட்டு எழுந்தபோது, சாய்வு நாற்காலியிலிருந்து, 'டக்' என்ற ஒலி எழும்ப, நாற்காலி உடைந்துவிட்டதோ என்று உடனே சற்று கீழே உற்றுப் பார்த்தேன். எனினும், கண்ணுக்கு எதுவும் தென்படாததால், கைபேசியை எடுத்தவனாக, மீண்டும் அதே சாய்வு நாற்காலியில் சரிந்தமர்ந்தவனாக, சின்ன மருமகளின் நடனத்தை கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்தேன்.
சுமார் அரை மணி நேரத்திற்குப் பின், மீண்டும் சாய்வு நாற்காலியை விட்டு நான் எழுந்தபோது, மீண்டும் 'டக்' என்ற சத்தம் கேட்க, எனது ஆடையை ஏதோ ஒன்று பிடித்து இழுத்ததைப் போன்ற உணர்வினால், திரும்பிப் பார்த்தபோது, எனது கால்சட்டை கிழிந்திருப்பதைக் கண்டேன். ஆம், நான் உட்கார்ந்திருந்த சாய்வு நாற்காலியில், மிகச் சிறிய அளவில் ஒரு இரும்பு ஆணியின் முனை வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. என்றபோதிலும், நான் அதை அதிகம் பொருட்படுத்தாது, தொடர்ந்து அந்த சாய்வு நாற்காலியை உபயோகித்துவந்தேன். ஆணியிருக்கும் இடத்தை அறிந்திருந்ததினால், அதற்கேற்றாற்போல் பொறுமையாக அமர்ந்து எழுந்து எனது ஆடையைக் கிழியாதபடிப் பார்த்துக்கொண்டேன்.
ஒருநாள், ஒரு இரவு வேளை, தனது பெரியம்மா வாங்கிக்கொடுத்த புதிய ஆடையினை உடுத்தினவளாக வீட்டினுள் வலம் வந்துகொண்டிருந்தாள் எனது மகள். நான் அமர்ந்தெழுந்த அதே நாற்காலியில் அவளும் அமர்ந்த வண்ணம் குழந்தைகளோடு விளையாண்டுகொண்டிருந்தாள். மறுநாளில், அவளது உடுப்பு ஆங்காங்கே கிழிந்துபோயிருந்ததைக் கண்ட என் மனைவி, அந்த புதிய உடுப்பு எப்படி கிழிந்தது என்று ஆராய்ந்துகொண்டிருந்தாள்; என்றபோதிலும், மனைவிக்கும் மற்றும் மகளுக்கும் விடை கிடைக்கவில்லை. அந்நேரம் அறையின் உள்ளே நுழைந்த நான், அவர்களது ஆராய்ச்சிக்கான விடையினைச் சொல்ல, 'இந்த சாய்வு நாற்காலியில் ஆணி நீட்டிக்கொண்டிருக்கிறது' என்று ஏன் முன்னமே சொல்லவில்லை? சொல்லியிருந்தால், மகளின் உடுப்பு கிழிந்திருக்காதே என்ற கேள்வியோடு கூடிய விடையினை என் மனைவியின் உதடுகள் உதிர்க்க, அங்கே வந்த எனது மனைவியின் மூத்த சகோதரர் ஒரு துணியினால் அந்த ஆணியினைச் சுற்றி, மற்றவர்கள் ஆடையைக் கிழிக்காதபடி அதனை மூடினார். இந்நிகழ்வைக் கண்ட எனது ஆத்துமாவில், 'ஆன்மீகப் பதிலொன்று தொற்றிக்கொண்டது.'
பிரியமானவர்களே! அநேக நேரங்களில் வழியில் கிடக்கும் முள்களை நாம் அறிந்தபடியினால் அவைகளுக்கு விலகிச் சென்றுவிடுகின்றோம்; ஆனால், மற்றவர் மிதிக்கும்படி அவைகளை அவ்விடத்திலேயே விட்டுவிடுகின்றோம். ஒரு மனிதனின் தவற்றினை வெளிப்படுத்திவிடக்கூடாது என்ற எண்ணத்தில், மற்றவர்களை அந்த மனிதன் செய்யும் தவற்றில் சிக்கவைத்துவிடுகின்றோம். நம்மைக் காப்பது மாத்திரமல்ல, நம்மைத் தொடருவோரையும் காப்பாற்றும் பொறுப்பு நம்முடைய கரத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றதே!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக