ஆகஸ்ட் 25 2026, இரவு சுமார் 8:30 மணி, ஜெம்ஸ் வளாகத்திலிருக்கும் சகோதரன் இம்மான் வீட்டில், அவருக்குப் பிறந்திருக்கும் மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தையைப் பார்ப்பதற்காக, இரண்டு சிறிய ஆடைகளுடன், மழைத் தூரல் விழுந்துகொண்டிருந்ததால், குடை பிடித்த வண்ணமாக நானும் எனது மனைவியும் புறப்பட்டுச் சென்றோம். சகோதரன் இம்மான் வீட்டை அடைந்ததும், குடையினை மடித்து வாசலுக்கு வெளியே நீர் வழிய வைத்துவிட்டு, வாசற்கதவினை மெதுவாகத் தட்டினோம். சிரித்த முகத்துடன் 'வாங்க' என்ற வரவேற்பு வார்த்தையுடன் கதவினைத் திறந்தார் சகோதரன் இம்மான். முதல் ஆளாக மனைவி வீட்டினுள்ளே காலடி எடுத்துவைத்தாள்; தொடர்ந்து, பின்னால் நான் பிரவேசித்தேன். வீட்டினுள் நுழைந்ததும், சகோதரன் இம்மானுவின் மூத்த மகளான, நான் 'ஜிங்குஜா' என்று அழைக்கும் ஜின்ஷா அழுதுகொண்டிருந்தாள். வரவேற்பறையின் இருக்கையிலோ குழந்தையுடன் அமர்ந்திருந்தார் சகோதரன் இம்மானுவின் மனைவி.
ஜிங்குஜாவின் அழுகையைக் கண்ட நான், 'ஏன் அழுகிறாள்?' என்று கேட்டதும், 'அப்பா திட்டிவிட்டார்கள்' என்று பதிலளித்தார் அவளது தாய். இதனை நான் கேட்டதும், வரவேற்ற முகத்துடன், இரண்டு இருக்கைகளை எடுத்துவந்து, 'அமருங்கள்' என்று சொல்லி, எங்களை அமரச்செய்துவிட்டு அருகில் நின்றுகொண்டிருந்த சகோதரனை 'பிள்ளையை ஏன் அடித்தாய்?' என்று விளையாட்டாக நான் எனது வலதுகரத்தினால் மூன்று முறை அடித்து முடிப்பதற்குள், இதனைப் பார்த்துக்கொண்டிருந்த மகள் ஜிங்குஜா வெகுண்டு எழுந்தவளாக, என்னை நோக்கி ஓடிவந்து எனது தொடையினை தனது இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு கடிக்க முற்பட்டாள். இக்காட்சியைக் கண்டதும் நான் மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தேன். தன்னை தகப்பன் அடித்திருந்தாலும், தகப்பனை எவரும் அடிக்க அனுமதிக்காத அந்த பிஞ்சு உள்ளத்தினைப் பார்த்து, 'உன்னிடத்திலும் நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டியவைகள் இருக்கிறது' என்று சொன்னேன். அவளது தப்பனிடத்தில், 'இவள் பெண் அல்ல உனக்குக் கிடைத்த பொன்' என்று சொல்லி எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். தன்னைத் தண்டித்திருந்தாலும், தகப்பன் மீதிருந்த பாசம் அவளுக்குத் தணிந்துபோகவில்லையே!
அநேக நேரங்களில், இவ்வுலகத்தில், சோதனைகளை நாம் எதிர்கொள்ளும்போது, பிரச்சனைகளைச் சந்திக்கும்போது, நமது பரம தகப்பனாகிய பிதாவின் மீது நாம் வைத்திருக்கின்ற பாசத்தினை விட்டுவிடுகின்றோம். அவர் நம்முடன் பேசும் வேத தியானத்தையும், நாம் அவருடன் பேசும் ஜெப நேரத்தையும் விட்டுக்கொடுத்துவிடுகின்றோம். அல்லது, தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? (எபி. 12:7) என்ற வசனத்தின்படி, நம்முடைய தவறுகளின் நிமித்தமாக, தகப்பன் என்ற ஸ்தானத்திலிருந்து அவர் நம்மை சிட்சிக்கும்போது, சிட்சைக்குக் காரணமான நமது தவறுகளிலிருந்து திருந்தாமல், அவரை விட்டு மேலும் தூரமாகப் பயணித்துவிடுகின்றோம். நம்முடைய வாழ்க்கையில், எத்தகைய சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரிட்டாலும், பரமப் பிதாவை விட்டுக்கொடுக்காத, சிறு பிள்ளைகளைப் போன்ற உன்ளத்தை ஆண்டவர் நமக்கும் தருவாராக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக